கட்டுரைகள் சிறப்புக் கட்டுரை

புதிய ஜனாதிபதி, புதிய சூழல் , தமிழ் மக்கள்…?

நிலாந்தன்

கோத்தபாய புதிய ஜனாதிபதி. ஆனால், தமிழ் மக்களுக்கு அவரைப்பற்றி ஏற்கனவே தெரியும். அதனால் தான் தமிழ்மக்கள் கொத்தாகத் திரண்டு போய் ஆகக் கூடிய வாக்கு வீதத்தைக் காட்டி அவரை நிராகரித்தார்கள். இது புதிய சூழல் என்று தமிழ் மக்கள் நம்பவில்லை. ஒரு புதிய சூழல் வராது, பழைய சூழலின் தொடர்ச்சியாகத்தான் ஏதோ வரப்போகின்றது என்று அஞ்சித் தான் தமிழ்மக்கள் கொத்தாகத் திரண்டுபோய் அவருக்கு எதிராக வாக்களித்தார்கள். ஒரு புதிய சூழல் வருமென்ற எதிர்பார்ப்பு தமிழ்மக்களிடம் இருந்திருக்கவில்லை. ஒரு புதிய சூழல் வருமென்றால் கடந்த ஐந்தாண்டுகளாக அனுபவித்த அந்த அற்ப ஜனநாயகம் அற்ற ஒரு புதிய சூழல் என்று கருதி அதற்கெதிராகவே தமிழ் மக்களின் ஆணை வழங்கப்பட்டது. தமிழ் மக்கள் வருகின்றவர் ஒரு புதிய ஆள், ஒரு புதிய ஆளுமை. ஒரு புதிய சூழல் என்று நம்பவில்லை. ஆனால், இந்த பொதுப்புத்தியின் தீர்மானத்துக்கும் அப்பால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, முதலாவது ராஜபக்ச ஆட்சியில் இருந்து வேறுபடுகின்றாரா?

அவர் தோற்றத்தில் ஏனைய ராஜபக்சகளில் இருந்து தன்னைப் பிரித்துக் காட்டுகின்றார். அவர் தன் தமையனைப்போல தலைக்கு டை அடிப்பதில்லை பொதுவாழ்வில் தன்னை அழகுபடுத்த வேண்டும், தன்னை மற்றவர்களுக்கு வேறுவிதமாகக் காட்ட வேண்டும் என்ற ஒர் அவஸ்தை அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் பதவியேற்பு வைபவத்தில் அணிந்திருந்த ஆடை, அதற்குப் பின்னரும் அவர் அணிகின்ற ஆடைகளைப் பார்க்கும் போது அவர் அந்த குடும்பத்தில் இருந்து எங்கேயோ வேறுபடுவதாகத் தெரிகின்றது. அவர் வேட்டி அணிந்து யாரும் பார்த்ததில்லை. தவிர, அவருடைய குடும்பத்தினர் அணிகின்ற குடும்பச் சின்னமாகிய குரக்கன் நிறச்சால்வையை அவர் எப்போதும் அணிந்ததில்லை. அவர் எங்கேயோ வேறுபடுகின்றார். அல்லது தன்னை வேறுபடுத்திக் காட்டுகின்றார். அவரை ஒரு நிர்வாகியாகத்தான் எங்களுக்குத் தெரியும். யுத்தத்தைக் கொண்டு நடத்திய நிர்வாகி. ஒரு தலைவராகச் சந்தர்ப்பம் தரப்படும்போது அந்த நிர்வாகி எவ்வாறு தன்னை நிரூபிப்பார் என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனாலும் அவருடைய சகோதரர்கள் தொடர்பிலும், அவர்களுடைய முன்னைய ஆட்சி தொடர்பிலும் தமிழ்மக்களுக்கு ஏற்கனவே சில முன் முடிவுகள் இருக்கின்றன. அது ஒரு முற்கற்பிதம் அல்ல. அது இரத்தமும் சதையுமான ஒரு படம். இரத்தம் வடியும் ஒரு படம்.அதனை வெறும் முற்கற்பிதம் என நிராகரித்து விட முடியாது. தமிழ்மக்களிடம் அவ்வாறான ஒரு படிமம் உள்ளது. அதுதான் தமிழ்மக்கள் அவருக்கு எதிராக வாக்களிக்கக் காரணம்.

இவ்வாறு தன் சகோதரர்களிடம் இருந்து தன்னை வேறாகக் காட்டும் கோத்தபாய வருங்காலத்திலும் வித்தியாசமாக இருப்பாரா? இருக்க முடியுமா? இருப்பாரா என்பதை விட இருக்க முடியுமா என்ற கேள்வி தான் இங்கே முக்கியம். ஏனெனில், அவர் இறந்த காலத்தின் கைதி. இன்னும் அழுத்தம் திருத்தமாகக் கூறின் அவர் யுத்த வெற்றியின் கைதி. யுத்த வெற்றியை முதலீடாகக் கொண்டு தான் அவர்கள் தொடர்ச்சியாக சிங்கள மக்களின் வாக்குகளை அள்ளிக்கொண்டு போகின்றார்கள். அவர்கள் யுத்த வெற்றி வாதத்துக்குத் தலைமை தாங்கியபடியால் தான் அவர்களால் தொடர்ச்சியாக வெற்றி பெற முடிந்தது.
ஆனால் , 2015 இல் தோற்றார்களே என்று சிலர் கேட்பார்கள். ஆனால், 2015 இல் வாக்களிப்பு வரை படத்தை எடுத்துப் பார்த்தால் தெரியும், கடும்போக்குச் சிங்கள மக்கள் மத்தியில், பெரும்பாலான சிங்கள மக்கள் மத்தியில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். எங்கே தோற்றார்கள் என்றால் கட்சியை உடைத்துக்கொண்டு மைத்திரிபால சிறிசேன வெளியேறினார். அதனால் கட்சி பிளவுண்டது. எனவே யுத்த வெற்றிவாதம் தற்காலிகமாகப் பலவீனம் அடைந்தது. தவிர, கட்சியை உடைத்துக் கொண்டு போன மைத்திரியுடன் சேர்ந்து தமிழ் , முஸ்லிம் , மலையக மக்களின் வாக்குகள் கொத்தாகக் கிடைத்தன. அதேவேளை ஒரு மாற்றத்தின் அலையும் அப்போது வீசிய காரணத்தால் அவர்கள் அரும்பொட்டில் தோல்வியடைந்தார்கள். ஆனால், அதன் பின்னர் நடந்த தேர்தலில் பெருவெற்றி பெற்றார்கள். அந்த வெற்றியைக் கண்டு அஞ்சித்தான் உள்ளூராட்சி சபைத் தேர்தலை மைத்திரி அரசாங்கம் பல மாதங்கள் ஒத்திவைத்தது. அவ்வாறு ஒத்திவைத்த பின்னர் நடந்த தேர்தலிலும் தாமரை மொட்டே வெற்றி பெற்றது. அந்த வெற்றியுடன் மைத்திரிபால சிறிசேன தலைகீழாக நிற்கத் தொடங்கி விட்டார். அவர் மாற்றத்தின் எல்லா விளைவுகளையும் கவிழ்த்துக் கொட்டி விட்டார்.

அதற்குப் பின்னர் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு யுத்த வெற்றி வாதத்துக்கு ஒரு புத்தெழுச்சியைக் கொடுத்தது. நாடு திரும்பவும் ஒரு யுத்தச் சூழலுக்குள் வந்தபொழுது, மக்கள் பழைய யுத்த ஞாபகங்களை மீட்டத் தொடங்கினர். இந்தப் பயங்களில் இருந்து எங்களை மீட்டது அந்தக் குடும்பம் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். இதனால் பாரம்பரியமாகவே ஐ.தே.கவுக்கு இருந்த சிங்கள கிறிஸ்தவ வாக்குகளும் தளம்பத் தொடங்கின. முன்னர் தமிழ் மக்களுக்கு எதிராகக் காணப்பட்ட ஓர் அலை இப்போது முஸ்லிம்களுக்கும் எதிரானதாக விரிவாக்கம் பெற்றது. இவற்றின் விளைவாக அவர்கள் இம்முறை பெரிய வாக்கு வீதத்தில் வென்றிருக்கின்றார்கள்.ஆனாலும் வாக்களிப்புக் கணக்கின் படி அவர்களுக்குத் தமிழ், முஸ்லிம் வாக்குகளும் விழுந்துள்ளன. அவர்கள் தனியே சிங்கள வாக்குகளால் வென்றிருக்கின்றார்கள் என்று சொல்வது கணிதப் பிழை. சில கணக்குகளின படி அந்த வாக்குகளைக் கூட்டிப்பார்த்தால், அவர்கள் பெற்ற வெற்றியின் விகிதம் குறைவது மட்டுமல்ல, தமிழ் வாக்குகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் சஜித்துக்கும் அவர்களுக்கும் இடையில் கிட்டத்தட்ட சமவிகிதம் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகின்றது.

இங்கு ஒரு பிரச்சினை உள்ளது. தமிழ் வாக்குகள் எத்தனை விழுந்தன என்று வடக்கில் கணக்குப்போடலாம். ஆனால், மட்டக்களப்பில் முஸ்லிம் வாக்குகள் வரும். அம்பாறையில் சிங்கள வாக்குகள் வரும். திருகோணமலையிலும் சிங்கள வாக்குகள் வரும். இவ்வாறு கூட்டி 4 லட்சம் எனக் காட்டி அதிலிருந்து ஒரு லட்சத்தைக்கழித்து விட்டு 3 லட்சம் தமிழ், முஸ்லிம் வாக்குகள் எனக் கூறுகின்றார்கள். அந்த 3 லட்சம் வாக்குகளை அவர் பெற்ற மொத்த வாக்குகளில் இருந்து கழித்துவிட்டால் அவர் சஜித்துக்கு மிக அண்மையிலே வருவார் எனக் கணிதம் சொல்கின்றது. ஆனால், இதில் ஒரு பிரச்சினை உள்ளது இன ரீதியாக அந்த வாக்குகளை கிழக்கிலும் மலையகத்திலும் கழிப்பது கடினம். தெற்கிலும் தெட்டம் தெட்டமாக அவ்ருக்கு வாக்குகள் விழுந்திருக்கின்றன. தவிர முஸ்லிம் மக்கள் வடக்கு, கிழக்கில் ஒன்றாகத் திரண்டு சஜித்துக்கே வாக்களித்துள்ளார்கள் . அதேநேரம் அவர்கள் தெற்கில் ஒரு தற்காப்பு நிலையில் இருந்து இரண்டாகப் பிளந்து வாக்களித்திருப்பதும் தெரிகிறது. இதில் எத்தனை பேர் சஜித்துக்கும், எத்தனை பேர் தாமரை மொட்டுக்கும் வாக்களித்துள்ளார்கள் என்று அதற்கென்று தனியாக ஒரு கணக்கெடுப்பை மேற்கொள்வது கடினம். அவர் தனியே சிங்கள பௌத்த, சிங்கள கிறிஸ்தவ வாக்குகளால் மட்டும் வென்றார் எனக்கூறுவது பொருத்தமாக இருக்காது என்ற ஒரு கணிப்பு உள்ளது.

அவர் இப்போது தான் ஒரு புதிய ஆட்சியை தரப்போவதாகக் கூறுகின்றார். ஆனால், தமிழ் மக்கள் அவரை எந்தவொரு பழைய சித்திரத்தின் அடிப்படையில் நிராகரித்தார்களோ , அதன் தொடர்ச்சியாகத் தான் அவர் இன்றைக்கு இந்தக் கணம் வரையிலும் இருக்கின்றார். ஏனென்றால் அவர் இறந்த காலத்தின் கைதி. அவர் யுத்த வெற்றியின் கைதி. யுத்த வெற்றியை அடிப்படையாக வைத்து தான் தன் வெற்றியைப் பாதுகாத்துக்கொண்டார். பதவியேற்ற போதும் அவர் அந்த யுத்த வெற்றியின் ஞாபகத்தைத் தான் வாக்களித்த மக்களுக்கு நினைவூட்ட விரும்பினார். பின்னர், தனக்குரிய பாதுகாப்பு செயலரை நியமித்த போதும் அதே யுத்த வெற்றியின் தொடர்ச்சியாகத் தான் அவர் சிந்திப்பது தெரிகிறது. தொடர்ந்து உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவையிலும் அதே பழைய தனம் இருப்பதாகத் தெரிகிறது .

இப்படிப் பார்த்தால் அவர் தானொன்றைப் புதிதாகத் தரப்போகின்றார் என்ற ஓர் உணர்வை தமிழ் மக்களுக்கு இன்னும் கொடுக்கத் தொடங்கவில்லை. முஸ்லிம் மக்களுக்கும் இன்னும் கொடுக்கத் தொடங்கவில்லை. அவர் இறந்த காலத்தின் கைதியாகத்தான் இப்பொழுதும் இருக்கின்றார். அவ்வாறு தான் அவர் இருக்கவும் முடியும். ஏனெனில் தேர்தல் வெற்றிகளுக்கும், அரசியல் வெற்றிகளுக்கும் அவர்கள் வைத்திருக்கும் முதலீடு அந்த யுத்த வெற்றிதான். அவர்கள் அதிலிருந்து விடுபட்டால் தங்களுடைய வாக்கு வங்கியை இழக்க நேரிடும். மறுதலையாக தமிழ் மக்கள் போர்க்குற்றங்களை வைத்துத் தான் ஐ.நா. என்னும் பொறிக்குள் அவர்களை சிக்க வைக்க விரும்புகின்றார்கள். எனவே அவர்கள் எல்லா விதத்திலும் இறந்த காலத்தின் கைதிகளாகத்தான் இருக்கின்றார்கள்.

இறந்த காலத்தின் கைதியாக இருந்து கொண்டு அவர் ஒரு புதிய காலத்தை உருவாக்க முடியுமா? அவரின் தேர்தல் வாக்குறுதிகளைப் பார்த்தால் அங்கேயும் அவர் இறந்த காலத்தின் கைதிதான். அவர் தேர்தல் வாக்குறுதிகளில் பிரதானப்படுத்தியது பாதுகாப்பு. நாட்டின் பாதுகாப்பு என்பது 10 வருடங்களுக்கு முன்னர் நடந்த யுத்தம் மட்டுமல்ல. சென்ற ஆண்டு நடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பும்தான். நாட்டின் பாதுகாப்பு பற்றிய ஒரு புதிய அலையை அவர் எழுப்பினார்.

தவிர இன்னொரு தேர்தல் வாக்குறுதியையும் அவர் வழங்கினார். அது உடன்படிக்கைகள் எல்லாவற்றையும் மீளாய்வு செய்வோம். செய்யப்பட்ட உடன்படிக்கைகளையும் மீளாய்வு செய்வோம். வழமையாக ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் தேர்தலின் போது உள்நாட்டு நிலைமைகளோடு தொடர்புடைய வாக்குறுதிகள் தான் மிகைப்படுத்தப்படும். ஆனால், இம்முறைத் தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் எல்லோருமே வெளிநாடுகளுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகள் பற்றிக் கதைத்தார்கள். ‘சோபா’ உடன்படிக்கை , ‘மிலேனியம் சலேன்ஞ்’ உடன்படிக்கை, ஐ.நா. தீர்மானம் போன்றனவே அந்த உடன்படிக்கைகள்.

இதில் ஐ.நா. தீர்மானத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கோத்தபாயவும் அவருடைய சகோதரர் மகிந்தவும் தெளிவாகச் சொன்னார்கள். அதுமட்டுல்ல தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன் வீரகேசரியில் வந்த செவ்வி ஒன்றில் முந்தைய அரசாங்கம் செய்த அந்த உடன்படிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மகிந்த ராஜபக்ச சொல்கிறார். உண்மையில் அரசறிவியல் அடிப்படையில் அந்தத் தர்க்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அரசாங்கங்களுடன் தான் உடன்படிக்கை செய்யலாம். அரசுகளோடு செய்ய முடியாது. அரசுகளை அரசாங்கங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும்.

உலக சமூகத்தோடு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை தான் ஐ.நா.தீர்மானம் . ஐ.நா. தீர்மானம் என்பது நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்கானது. நிலைமாறுகால நீதி என்பது அதன் பிரயோகத்திலும் கோட்பாட்டின் அடிப்படையிலும் பொறுப்புக்கூறல் தான். எனவே, ராஜபக்சக்கள் பொறுப்புக் கூறத் தயாரில்லை. இறந்த காலத்தின் கைதியாக இருக்கும் ஒரு குடும்பம் பொறுப்புக்கூற முடியாது. பொறுப்புக் கூற ஆரம்பித்தால் முதலில் இறந்த காலத்துக்குப் பொறுப்புக் கூறவேண்டும். இறந்த காலத்தில் நடந்தவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டும். இறந்த காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் குற்றங்களுக்கும் இழப்புக்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டும். அவ்வாறு பொறுப்புக்கூறினால் தான் நிகழ்காலத்துக்கும் வருங்காலத்துக்கும் பொறுப்புக்கூறவேண்டும் . இதுதான் நிலைமாறுகால நீதி.

எனவே நீங்கள் இறந்த காலத்தின் கைதியாக இருக்கும் போது நிகழ்காலத்துக்கு பொறுப்புக் கூற முடியாது. பொறுப்புக்கூறினால் நீங்கள் ஐ.நாவின் கைதியாகி விடுவீர்கள். தமிழ்மக்கள் உங்களை கைதிகளாக்கி விடுவார்கள். எனவே அவர்கள் பொறுப்புக்கூற மாட்டார்கள். இதனால் தான் அவர்கள் பொறுப்புக்கூற மாட்டோம் என்று தெளிவாகக் கூறிவிட்டார்கள். ஆனால், அவர்கள் அதை தேர்தல் வாக்குறுதியாக வழங்கினார்களா? அல்லது உண்மையான வெளியுறவுக்கொள்கையாக அதைக் கடைப்பிடிப்பார்களா என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும்.

நிலைமாறுகால நீதியின் கீழ் குறிப்பாக இழப்பீட்டு நீதி என்ற பகுதியின் கீழ் நினைவு கூர்வதற்கான உரிமை எல்லா மக்கள்கூட்டங்களுக்கும் உண்டு. தனியாகவோ கூட்டாகவோ நினைவு கூரலாம். தனியாகவோ கூட்டாகவோ சின்னங்களை அமைக்கலாம். ஏற்கனவே இலங்கையின் நீதிமன்றங்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சின்னங்களைத் தவிர்த்து நினைவு கூர உரிமை உண்டு என சட்டத்தீர்ப்பு வழங்கியுள்ளன . நினைவு கூரலை அனுமதிப்பதென்பது நிலைமாறுகால நீதியைப் பகுதியாக ஏற்றுக்கொள்வது தான். ஆனால் அந்த நிலை மாறுகால நீதியில் குற்றவிசாரணை தொடர்பான விடயங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஏனைய விடயங்களை ஏற்கொள்வோம் என ஏற்கனவே ஒரு பகுதி தாராண்மைவாதிகள் ரணிலின் காலத்திலேயே கூறிவிட்டார்கள். நினைவுகூர உரிமையுண்டு, இது போன்ற விசயங்களை அனுமதிப்போம். ஆனால், போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உடன்பட மாட்டோம் என்பதாகவே அவர்களுடைய நிலைப்பாடு உள்ளது. குற்றவிசாரணை தொடர்பான விடயங்களில் அவர்கள் நிலைமாறுகால நீதியை ஏற்க முன்வரவில்லை.

ஏற்கனவே ரணிலின் ஆட்சிக் காலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொறுப்புக்கூறலில் நினைவு கூர்தல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், காணி விவகாரம், அதற்குரிய சட்ட ஏற்பாடுகள் போன்றவற்றில் தான் ‘நல்லாட்சி’ அரசாங்கம் ஓரளவுக்காவது நகர்ந்திருந்தது. அதைவிட இந்தக் குற்ற விசாரணைகள் தொடர்பில் அவர்கள் ஓரடி கூட எடுத்து வைக்கவில்லை. அதிலும் 2015 இல் ஒப்புக்கொண்டதை போன தடவை நடந்த மனித உரிமைக் கூட்டத் தொடரில் அவர்கள் மறுதலித்தார்கள். அது முடியாது என்றார்கள்.ஒக்ரோபர் ஆட்சிக்எ குழப்பத்துக்குப் பின்னர் மேலும் உறுதியாக நிராகரித்தார்கள். எனவே அவர்கள் இறந்த காலத்துக்குப் பொறுப்புக்கூறத் தயாராக இல்லை. ஆனால், இந்த இடத்தில் தான் இலங்கைத் தீவில் மற்றொரு பொறி உள்ளது. தமிழ் மக்கள் மீது இரக்கப்பட்டு ஐ.நா ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரவில்லை. அதற்கு வேறு ராஜீயக் காரணங்கள் உள்ளன. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின் ராஜபக்சக்கள் வகுத்த வெளியுறவுக் கொள்கையின் ஒரு விளைவே ஐ.நா தீர்மானம். 2009 இல் யுத்தத்தை வென்ற போது ராஜபக்சக்களுக்கே அது தாங்க முடியாத வெற்றிதான். வெல்லக் கடினமான எதிரியை அவர்கள் தோற்கடித்தார்கள். அப்படி ஒரு வெற்றியை அவர்கள் கற்பனை செய்யவே இல்லை. அதை அவர்களாலேயே தாங்கமுடியவில்லை. அதனால் அவர்கள் நிதானமிழந்தார்கள். அதனால் அவர்கள் 3 இடங்களில் தவறு விட்டார்கள். முதலில் வெளியுறவுக்கொள்கையில் தவறு விட்டார்கள். வெளியுறவுக் கொள்கையில் அவர்கள் சீனாவை நோக்கி நகர்ந்தார்கள். அடுத்து யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றத் தவறினார்கள். யுத்தத்தில் வெற்றிபெற்ற ஒரு குடும்பம் அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கும் போது சிங்கள மக்கள் எதிர்க்க மாட்டார்கள். ராஜபக்சக்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் ஒருவரும் கேட்க மாட்டார்கள். ராஜபக்சக்கள் காணிகளை விடுவி என்று சொன்னால் ஒருவர் கூட கேள்வி கேட்க மாட்டார்கள். எங்களை விடப் பெரிய தீவிரவாதி ஆட்சிக்கு வந்து விட்டார் என்பதாலேயே பொதுபலசேனா தன்னைக் கலைக்கின்றது. ராவணசேனா தன்னைக் கலைக்கின்றது. முன்பிருந்த சிங்கள பௌத்த கடுந் தேசியவாதத்துக்குச் சார்பான சக்திகள் முழுக்க ஒரு யுத்த வெற்றி வாதி தலைவராக வர அவருக்குப் பின்னால் சென்றுவிட்டது.

ஜே.வி.பி ஏன் தோற்றது? ஜே.வி.பி ஒருபக்கம் இனவாதத்தோடு கள்ள உறவு. இன்னொரு பக்கம் இடது போலி முகம். ஜே.வி.பியின் இரட்டைச் சுலோகம் எடுபடவில்லை. அதனால் தான் 8 லட்சம் வாக்குகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட பின்னணியில் அவர்களுக்கு 4 லட்சத்து சொச்சம் வாக்குகளே கிடைத்தன. தாமரை மொட்டு ஓர் இனவாத அலையைத் தோற்றுவித்தது . அது தமிழ் , முஸ்லிம் மக்களுக்கு எதிரானதாக இருந்தது. அந்த அலைக்குள் அது பெரிய வாக்கு விகிதத்தில் வெற்றிபெற்றது .

இரண்டாவதாக யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றத் தவறினார்கள். இலங்கையில் பதவி வகித்த எந்த ஜனாதிபதிக்கும் கிடைக்காத ஒரு சந்தர்ப்பம் மகிந்த ராஜபக்சவுக்குக் கிடைத்தது. அதாவது யுத்தத்தை அவர் தான் முடிவுக்குக் கொண்டு வந்தார்.இதற்கு முன்னர் இருந்த எந்தத் தலைவருக்கும் வராத ஒரு வாய்ப்பு அவருக்கு வந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி யுத்த வெற்றியை அவர் அரசியல் வெற்றியாக மாற்றி இருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக அந்த வெற்றியைத் தன்னுடைய அரசியலுக்கான முதலீடாக அவர் மாற்றினார். அதுதான் யுத்த வெற்றிவாதம். அதுதான் இப்போதும் வென்றிருக்கின்றது. அவர் யுத்த வெற்றிவாதத்துக்கு தலைமை தாங்கத் தொடங்க, அவரால் தமிழ் மக்களுக்குத் தீர்வைக்கொடுக்க முடியாது . யுத்த வெற்றி வாதம் என்பது வென்றவன் வென்றவனாகவும் தோற்றவன் தோற்றவனாகவும் இருப்பது. தோற்றவனுக்கு அவன் வெல்லக்கூடிய ஓர் அரசியல் தீர்வை அது வழங்காது.

கடந்த தேர்தலில் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியாக 13 ஆவது திருத்தத்தைதான் தருவேன், அதிலும் காணி அதிகாரத்தைத் தரமாட்டேன், பொலிஸ் அதிகாரத்திலும் சிறு குற்றங்களைக் கையாள்வதற்கான பொலிஸ் அதிகாரத்தை மட்டும் தான் தருவேன் எனத் தெளிவாகச் சொன்னார். இத்தனைக்கும் இந்திய மாநிலங்களைப் போல 13 இல் பொலிஸ், காணி அதிகாரங்கள் இருக்கின்றன. அவர் மட்டுமல்ல அவருக்கு முன்பிருந்த சிங்களத் தலைவர்கள் யாரும் அதைத் தரவில்லை.

அவர் ஓர் உடன்படிக்கையை கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப் பின்னர் மீறுகின்றார். அது ஓர் அனைத்துலக உடன்படிக்கை. இந்திய – இலங்கை உடன்படிக்கைக்கு கீழே தான் 13 ஆம் திருத்தம் வந்தது. அதையே கால் நூற்றாண்டுக்குப்பிறகு வெளிப்படையான தேர்தல் வாக்குறுதியாகச் சொல்கின்றார். இந்தியா கூட அதைப்பற்றி பேசவில்லை.

அந்த தீர்வை நியாயப்படுத்தும் தமிழ்த் தரப்புகள் கூட அதைப்பற்றி பேசவில்லை. யுத்த வெற்றியின் மமதை காரணமாக அவர்கள் செய்த மூன்றாவது தவறு. தமது கட்சிக்குள்ளேயே அடாத்தாக நடந்து கொண்டது. சிரேஷ்ட உறுப்பினர்களை மதிக்கவில்லை. தங்களுடன் இருந்த தோழமைக் கட்சிக்காரர்களையும் அவமதித்தார்கள். குடும்ப ஆட்சியை ஸ்தாபித்தார்கள். இதன் விளைவாகத் தான் கட்சிக்குள் வந்த அதிருப்தியை மேற்கு நாடுகள், இந்தியா, சந்திரிகா போன்ற சக்திகள் வெற்றிகரமாகக் கையாண்டு 2015ஆம் ஆண்டு அந்தக் கட்சியை இரண்டாக உடைத்தன. அந்த உடைவு தான் யுத்த வெற்றிவாதம் சந்தித்த முதல் அடி. அதனால் தான் கடந்த ஐந்தாண்டுகளால் அவர்களால் ஆட்சி செய்ய முடியவில்லை. ஆனால், அது தன் தவறுகளைச் சீர் செய்து விட்டது. கட்சிக்குள் வந்த முரண்பாட்டை அகற்றி, யார் கட்சியை உடைத்தாரோ அவரை – மாதிரியைத் தன்னுடன் எடுத்துக்கொண்டது.

அதுமட்டுமல்ல தன்னுடைய தாய்க் கட்சியான சுதந்திர கட்சியில் இருந்து வெளிவந்து யுத்த வெற்றியை அடித்தளமாகக் கொண்ட தாமரை மொட்டுக் கட்சியை உருவாக்கி விட்டார்கள். தாமரைமொட்டுக்கட்சி என்பது யுத்த வெற்றியின் நிறுவனமயப்பட்ட ஓர் ஆகப்பிந்திய வடிவம். தாய்க்கட்சியை உடைத்துக்கொண்டு வந்து தாமரைமொட்டுக் கட்சியாக்கி, தாமரைமொட்டுக் கட்சிக்குள் சுதந்திர கட்சிக்காரர்களை எடுத்து, 2015 ஆம் ஆண்டு தாம் கவிழக் காரணமாக இருந்தவரையும் சேர்த்து, திரும்ப மீள ஒருங்கிணைத்துப் பலப்படுத்திவிட்டனர். அதுதான் தற்போதைய வெற்றி.

ராஜபக்சக்கள் கவிழக்காரணமாக இருந்த 3 தவறுகளில் ஒன்றைச் சீர்செய்து விட்டார்கள். கட்சிக்குள் வந்த உடைவைச் சீர்செய்து விட்டார்கள். ஏனைய இரண்டிலும் -யுத்த வெற்றியை இராணுவ வெற்றியாக மாற்றுவது, சீனாவின் பக்கம் சாய்ந்த வெளியுறவுக்கொள்கை-அவர்கள் தம்மை புதுப்பித்துக் கொள்ளவார்களா? அல்லது புதுப்பித்துக் கொள்ள முடியுமா?

இதில் யுத்தவெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றினால் சீனாவை நோக்கிப் போகத் தேவையில்லை. இந்தியாவையும் அமெரிக்காவையும் நோக்கித்தான் போக வேண்டும். இந்தியாவில் 8 கோடி தமிழர்கள் உள்ளனர். மத்திய அரசு எந்த முடிவை எடுத்தாலும் தமிழகம் அவ்வப்போது கொந்தளிக்கும். பொறுத்த நேரங்களில் கொந்தளிக்கும். தமிழகமும் தமிழகத்தைத் தன்னுள் கொண்டிருக்கும் இந்தியாவோடும் அவர்கள் சில விடயங்களில் ஒத்துப்போக வேண்டியிருக்கும்.

மேற்கு நாடுகளில் கிட்டத்தட்ட 10 லட்சத்துக்குக் குறையாத புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் உள்ளது. இந்தச் சமூகம் அங்கு ஓரளவுக்கு பலமான சக்தி. புலம்பெயர் தமிழர்கள் தங்கள் நாட்டு அரசாங்கம் மீது அழுத்தங்களைக் கொடுப்பார்கள். இவ்வாறு அழுத்தம் கொடுக்கும்போது புலம்பெயர் தமிழர் வாழும் மேற்கு நாடுகளோடு ஏதோ ஒரு விதத்தில் சுதாகரிக்க வேண்டி இருக்கும்.

எனவே அரசியல் தீர்வு ஒன்றைக்கொடுப்பதென்றால் இந்த இரண்டு தரப்புகளோடும் சுதாகரிக்க வேண்டி இருக்கும். ஆனால், அரசியல் தீர்வு ஒன்றைக்கொடுக்கவில்லை என்றால் இந்த இரண்டு தரப்புகளிடம் இருந்து நிர்ப்பந்தம் வரும்.ஐ.நா தீர்மானம் அப்படித்தான் வந்தது. யுத்த வெற்றிவாதத்துக்கு தலைமை தாங்கப் போகின்றீர்கள் என்று சொன்னால் மேற்கை நோக்கியும் இந்தியாவை நோக்கியும் போவதில் வரையறைகள் உள்ளன. ஆனால், சீனாவை நோக்கிப் போவதால் வரையறைகள் இல்லை. ஏனெனில் சீனாவில் ஒரு பலமான தமிழ்ச் சமூகம் இல்லை. சீனா உதவிகளுக்கு மனித உரிமைகளை முன் நிபந்தனையாக விதிப்பதும் இல்லை.

சீனாவுக்கு இந்தப் பிராந்தியத்தில் இந்தோ – பசிபிக் மூலோபாயத்தை முறியடிப்பதற்கு ஆள்கள் தேவை. அதிலும் குறிப்பாக கடந்த ஒக்ரோபர் மாதம் மைத்திரிபால சிறிசேன ஆட்சியைக் கவிழ்த்த பொழுது, அதே காலப்பகுதியில் மாலைதீவில் நடந்த தேர்தல் ஒன்றில் சீனாவின் நண்பர் தோற்கடிக்கப்பட்டு இந்தியாவின் நண்பர் வந்திருக்கின்றார். சீனாவின் முத்து மாலைக்குள் இருந்து ஒரு முத்தை அமெரிக்காவும் இந்தியாவும் கழற்றி எடுத்திருக்கும் நிலையில் இன்னொரு முத்து இங்கே இலங்கைத்தீவில் கிடைத்திருக்கின்றது.

சீனாவுக்கு அப்படிப்பட்ட தேவைகள் இருந்ததன் விளைவாக அவர்கள் ராஜபக்சக்களை அரவணைத்தார்கள். யுத்த வெற்றிவாதத்துக்கு தலைமை தாங்கினால் சீனாவை நோக்கித்தான் போகலாம் அமெரிக்காவையும் இந்தியாவையும் நோக்கிப் போவதில் வரையறைகள் இருக்கும். சீனாவை நோக்கிப்போனால் மேற்கு நாடுகள் தமிழ்மக்களைக் கையாண்டு கொண்டே இருக்கும். இந்தத் தீவு கொந்தளித்துக்கொண்டே இருக்கும்.

ஆனாலும் சிங்கள ராஜதந்திரத்தின் அந்தச் செழிப்பான பாரம்பரியத்துக்கூடாக பிராந்தியத்தில் பகை நலன்களோடு காணப்படுகின்ற சீனாவையும் இந்தியாவையும் சமனாகக் கையாள்வது. அவர்கள் இப்போதுவரை அதைக் கெட்டித்தனமாகச் செய்கின்றர்கள். இலங்கை சீனாவின் கடனாளியாகி விட்டது. சீனாவின் கடன்பொறிக்குள் விழுந்துவிட்டது என்றாலும் கூட, அவர்கள் இந்தியாவோடு தங்களைச் சுதாகரிக்கிறார்கள். யுத்தவெற்றி வாதத்தோடு அவர்கள் சீனாவை நோக்கிப் போனதன் விளைவாக இலங்கைத்தீவு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு சீன மயப்பட்டது.

இலங்கைத்தீவின் வரைபடத்தையே இந்தச் சீனமயமாதல் மாற்றிவிட்டது. ஹம்பாந்தோட்டையை 99 ஆண்டு காலக் குத்தகைக்கு ஒரு சீன நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளார்கள். இலங்கைத்தீவின் முன்னைய அடையாளங்களாக அதன் பௌத்த சின்னங்கள் தான் காட்டப்படும். ஆனால் இன்றைக்குத் தாமரை மொட்டுக்கோபுரம் அதன் நவீன அடையாளமாக மாறிவிட்டது. சீன மயமாதல் இலங்கைத்தீவின் வரைபடத்தை மாற்றி இருக்கிறது. அடையாளத்தை மாற்றி இருக்கின்றது. அரசியலையும் மாற்றிக்கொண்டு இருக்கின்றது.இந்தப் பின்னணிக்குள் சீனத்தின் அந்தக் கடன்பொறிக்குள் இருந்து விடுபடுவதில் அவர்களுக்கு வரையறைகள் உண்டு. இது ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலேயே நிரூபிக்கப்பட்டது. மேற்கு நாடுகளை நெருங்கிப்போனால் ஐ.நா தீர்மானத்துக்கு அதாவது பொறுப்புக்கூறலுக்கு நீங்கள் உட்படுவீர்கள். இந்தியாவை நெருங்கிப்போனால் பொறுப்புக்கூறலில் மேற்கு நாடுகள் தரும் அளவுக்கு இந்தியா அழுத்தம் தராது. எனவே இந்தியாவுடனும் சுதாகரித்துக்கொண்டு சீனாவுடனும் சுதாகரித்துக்கொண்டு ஓர் ஆசிய மைய வெளியுறவுக்கொள்கையைக் கடைப்பிடிப்பது.இதன் அடிப்படையில் போனால் மேற்கை வெட்டியாளக் கூடிய வாய்ப்பு உள்ளது.

ஐ.நாவுடன் செய்து கொண்ட ஐ.நா தீர்மானத்தை நினைத்தபாட்டில் ஓர் அரசாங்கம் முறிக்க முடியாது. ஏற்கனவே மேற்கத்தேய ஊடகங்கள் கோத்தாபய தொடர்பில் எதிர்மறை பிம்பத்தைத்தான் கட்டியெழுப்பி வருகின்றன. பெரும்பாலான பிரதான. ஊடகங்கள் அவர் ஜனாதிபதி ஆவதற்கு முன்பே பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. அதனால் ஐ.நா. தொடர்பான விடயங்களைக் கவனமாகக் கையாள வேண்டிய தேவை உள்ளது.

ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சிக்காலம் யுத்த வெற்றிவாதத்தின் கைதியாக இருக்குமானால், அது மறுபடியும் இந்தச் சிறிய தீவைப் பேரரசுகளின் குத்துச் சண்டைக் களமாக மாற்றும். இந்த அடிப்படையில் சிந்தித்தால் இனிவரப்போகும் ஐந்தாண்டு காலம் என்பது இலங்கைத்தீவுக்கு மட்டுமல்ல, இந்தப் பிராந்தியத்துக்கும் இந்தோ – பசிபிக் சிந்தனைகளுக்கும் மிகவும் முக்கியமான திருப்புமுனை காலகட்டம்.

முக்கியமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை அதன் தலைமைக்கு வயதாகிவிட்டது. கூட்டமைப்புக்குள் தலைமைத்துவத்துக்கான போட்டிகள் ஆரம்பித்திருக்கின்ற காலகட்டத்துக்குள் அந்தக் கட்சி பிரவேசித்திருக்கின்றது. அவர்களுக்கு ஒருவிதத்தில் இந்த மாற்றத்தில் நன்மை உண்டு. இனி எதிர்ப்பு அரசியல் முகமூடியை அணிந்துகொண்டு வாக்கு வங்கியைப் பராமரிக்கலாம். அவர்களும் எதிர்ப்பு அரசியலை வரித்துக்கொண்டு வாக்கு வங்கியைப் பேணத்தொடங்கினால், கஜேந்திரகுமாருக்கும் விக்னேஸ்வரனுக்கும் சவால்கள் உண்டு. விக்னேஸ்வரனுக்கும் இந்த ஐந்தாண்டு காலம் என்பது தன் வெற்றியை நிரூபிக்க வேண்டிய காலகட்டம். கஜேந்திர குமாருக்கும் வெற்றியை நிரூபிக்க வேண்டிய காலகட்டம்.கடந்த ஐந்தாண்டுகளில் ஒப்பீட்டளவில் அதிகரித்த ஜனநாயக வெளி ஒன்று கிடைத்தது. தமிழ் மக்கள் அதைப் போதிய அளவு பயன்படுத்த தவறிவிட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தினார்கள். ஆயிரம் நாள்களுக்கு மேலாக தெருவோரங்களில் இருந்து போராடுகின்றார்கள், ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால், தமிழ்க்கட்சிகள் அதைப் போதிய அளவு பராமரிக்கவில்லை, அதைப் பயன்படுத்தவில்லை. கிடைத்த அந்த அற்ப ஜனநாயக வெளியை தமிழ்க்கட்சிகளால் சரியாகக் கையாள முடியாத காரணத்தால் தான் இந்த முறை தமிழ் மக்களின் ஆணை என்பது பொருத்தமற்ற இடத்தில் வழங்கப்பட்டது.

தமிழ்மக்கள் அந்த ஆணையை வழங்கினாலும் வழங்காவிட்டாலும் சஜித் தோற்றிருப்பார் என்பது வேறு விடயம். ஆனால், அதை ஒரு தமிழ் வேட்பாளருக்கு வழங்கி இரண்டாவது விருப்பத் தேர்வுக்குப் போயிருக்கலாம். ஒரு தமிழ் பொது வேட்பாளரைக் கண்டு பிடிக்காமல் போனதுக்கு அடிப்படைக் காரணமே கடந்த ஐந்தாண்டுகளைத் தமிழ் மக்கள் போதியளவு பொருத்தமாகக் கையாளத் தவறிவிட்டார்கள் என்பது தான். மக்கள் மையப் போராட்டங்கள் எதையுமே செய்யவில்லை. மக்கள் மத்தியில் கருத்துருவாக்கக் கூடிய அமைப்புகள் பெரிய அளவில் வளர்ச்சி பெறவும் இல்லை. பேரவை தேங்கிப் போய் விட்டது. அதைப் புனரமைக்கவில்லை என்றால் அடுத்த கட்டம் இல்லை. இப்படிப்பட்ட நிலைமையில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு சிவில் அமைப்புக் கூட பொருத்தமான விதத்தில் செயற்படுவதாகத் தெரியவில்லை.ஆனாலும் ஒரு மகிழ்ச்சியான விடயம் உண்டு.அது என்னவென்றால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது அமரர் மாளுவ சோபித தேரரின் தலைமையில் புத்திஜீவிகள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், மேற்கு, இந்தியா என எல்லோரும் இணைந்து ஆட்சி மாற்றத்துக்கான அலையை உற்பத்தி செய்தனர். அந்த அலையில் தமிழ்மக்களுக்கு கேள்விகள் உள்ளன. அந்த கேள்விகள் சரியென்பதை பின்னர் மைத்திரி நிரூபித்தார். என்றாலும் மாற்றத்தின் அலையை உருவாக்கினார்கள். கட்சியை உடைத்துக்கொண்டு மைத்திரி வெளியேறுகையில் அந்த மாற்றம் திடீரென பெரிதாகியது. அந்த நேரத்தில் அவ்வாறான சிவில் சமூகங்களின் தலையீட்டை மாளுவ சோபித தேரரின் நினைவுப் பேருரையில் டொக்டர் ஜெயதேவ உயாங்கொட ‘தார்மீகத் தலையீடு’ என்று சொன்னார்.ஆனால், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சிவில் சமூகங்களால் அப்படிப்பட்ட தார்மீகத் தலையீடு எதையும் இய்ய முடியவில்லை, செய்ய விரும்பவில்லை. சிவில் சமூகங்கள் சோர்ந்து போய்விட்டன. சிங்கள நடுத்தர வர்க்கம் தான் ஓரளவுக்கு வாக்கெடுப்பில் இருந்து ஒதுங்கி இருந்ததா என்ற கேள்வியும் இருக்கின்றது. இது சஜித்தின் தோல்விக்கான காரணங்களில் ஒன்று. ஏனெனில் ஒரு மாற்றத்தின் அலையை 2015 இல் உற்பத்தி செய்தார்கள். ஆனால் 2019 இல் இனவாத அலையைத் தோற்றுவித்தார்கள்.
மாளுவ சோபித தேரர் மறைந்த பின் அந்த வெற்றிடத்தை நிரப்பியது இன்னொரு சோபித தேரர் அல்லர். ஞானசார தேரரும் ரத்ன தேரர்களும் தான்.

2015 ஆம் ஆண்டு தார்மீகத் தலையீட்டைச் செய்ய தென்னிலங்கையில் சிவில் சமூகங்கள் இருந்தன. 2019 ஆண்டு ஒரு தார்மீக வறட்சி காணப்பட்டது. ஓர் இரும்பு மனிதனுக்கான ஓட்டப்பந்தயம் நடந்தது. அங்கே சிவில் சமூகங்களால் பெரியளவில் தலையிட முடியவில்லை.மறுதலையாக தமிழ்ச் சமூகத்தில் பேரவையால் தொடக்கப்பட்ட சுயாதீனக்குழு உறுப்பினர்களும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் தலையிட்டார்கள். சிவில் சமூகங்கள் கட்சிகளை நோக்கி நெருக்கினார்கள். கட்சித் தலைவர்களை நெருக்கினார்கள். அப்படி ஓர் தலையீடு இருந்தது. ஆயர்களும் ஆதீன கர்த்தாக்களும் கருத்துருவாக்கிகளும் இணைந்து கட்சிகளின் தலைவர்கள் மீதும் கட்சி ஆதரவாளர்கள் மீதும் அழுத்தத்தைப் பிரயோகிக்கக் கூடிய ஒரு நிலைமையை இந்தமுறை காட்டி இருக்கின்றோம். அது ஒரு மகிழ்ச்சியான விடயம். இந்த சிவில் அழுத்தத்தை தார்மீகத் தலையீட்டை நாங்கள் தொடர்ந்து வளர்க்க வேண்டும். சிவில் சமூகங்களைப் பலப்படுத்த வேண்டும். சிவில் சமூகங்கள் பலப்படுத்தப்பட்டால் தான் வரப்போகின்ற ஐந்தாண்டுகளை வெற்றிகரமாகக் கையாளலாம். ஏனெனில் தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரையிலும் கூட இந்த வரப்போகின்ற ஐந்தாண்டு காலம் நிச்சயமற்ற காலம்.

எதிர்த்தரப்பில் அழுத்தங்கள், நெருக்கடிகள் அதிகரிக்க அதிகரிக்க இந்தக் கட்சிகளுக்கு எதிர்ப்பரசியலைக் கொண்டு போவது வசதியாக இருக்கும் . சிலவேளை இந்தக் கட்சிகள் ஐக்கியப்படவும் கூடும் . ஆனால், ஐக்கியப்பட்டும் கூட அவர்கள் எதைச் செய்வார்கள் என்பது தான் இங்குள்ள கேள்வி. அதற்குரிய தரிசனத்தைக் கொண்ட தலைவர்களை இங்கு காண முடியவே இல்லை. கடந்த பத்தாண்டுகளாக அப்படிப்பட்ட தரிசனம் கொண்ட தலைவர்களை நாங்கள் உருவாக்கத் தவறிவிட்டோம். அப்படித் தரிசனம் மிக்க தலைவர்கள் எங்களிடம் உண்டா? இப்படி ஒரு பின்னணிக்குள் தான் மறுபடியும் ஒரு பிராந்தியப் போட்டிக்குள் நாங்கள் சிக்கப்போகின்றோமா? இளைய ராஜபக்ச தன்னை இறந்தகாலத்தின் கைதியாகவே தொடர்ந்தும் வைத்துக்கொள்வாராக இருந்தால், தமிழ்மக்கள் திருப்திப்படும் ஒரு தீர்வை அவரால் தர முடியாது. மறுபடியும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு சமனிலையை அவர் பேணிக்கொண்டு ஓர் இராஜதந்திர விளையாட்டை தொடங்கக் கூடும். அப்பொழுது மேற்கு நாடுகளோடு பொறுப்புக்கூறல் தொடர்பில் அவர் முட்டுப்பட வேண்டி இருக்கும். திரும்ப மேற்கு நாடுகள் தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் கையாளத் தொடங்கும். இந்தச் சிறிய தீவு திரும்பவும் பேரரசுகள் பங்கிடும் ஓர் அப்பமாக மாறக் கூடும் .ஏற்கனவே இந்தச் சிறிய தீவு பேரரசுகள் பங்கிடும் அப்பமாகத்தான் இருக்கின்றது. ஏற்கனவே இது சீனமயப்பட்டு விட்டது. இந்த சீன மயமாக்கலுக்கு எதிராக ஒருபுறம் இந்தியா பலாலி விமான நிலையத்தைத் திறக்கக் கேட்டது. இன்னொருபுறம் கலாசார மண்டபத்தைக் கட்டிக் கொண்டிருக்கின்றது.

தமிழ்ப் பகுதியை அது இந்திய மயப்படுத்தக் கேட்கின்றது. ஆனால், சோபா உடன்படிக்கையையும் மிலேனியம் சலேன்ஞ் உடன்படிக்கையையும் எதிர்த்த ராஜபக்சக்கள் இந்திய கலாசார மண்டபத்தை எதிர்க்கவில்லை. பலாலி விமான நிலையம் திறக்கப்பட்டதையும் எதிர்க்கவில்லை. அவர்கள் இந்தியாவோடு ஒரு சுதாகரிப்புக் கொள்கையைப் பயன்படுத்துகின்றார்கள். இந்தியாவைக் கையாண்டால் எல்லாவற்றையும் வெற்றியாகக் கையாளலாம் என அவர்களுக்குத் தெரிகிறது. வெளியுறவுக் கொள்கையின் உயர்நிலை அங்கு தான் உள்ளது. சீனாவை மடியில் வைத்துக்கொண்டு இந்தியாவுக்கும் போக்குக் காட்டினால், உலகத்தை ஓரளவுக்குக் கையாளலாம் என அவர்கள் நம்புகின்றார்கள்.அந்த நம்பிக்கையின் அடைப்படையிலேயே வரப்போகின்ற வெளியுறவுக் கொள்கையும் அமையுமாக இருந்தால் முதலாவது ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தை விட இரண்டாவது ராஜபக்சக்களின் ஆட்சிக்காலம் பெரியளவில் வித்தியாசமாக இருக்கும் வாய்ப்புக்கள் இல்லை.அவர்கள் அபிவிருத்தியை முதன்மைப்படுத்துகின்றார்கள்.

அபிவிருத்திக்கு அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம். மிலேனியம் சலேஞ்சில் அவர்கள் பெறப்போகும் உதவி மிகப்பெரியது. அந்த உதவியை இப்போது அவர்கள் நிராகரிக்கின்றார்கள். அதே சமயம் அதில் அவர்கள் சுதாகரிப்புக்குப் போனால் மேற்கோடும் அவர்கள் சுதாகரிக்கத் தொடங்குவார்கள்.ஆனால், ஒரு விடயத்தை அவர்கள் மறந்து விட்டார்கள். கடந்த தேர்தலில் வெளிநாடுகளுடன் நாங்கள் உடன்படிக்கை செய்ய மாட்டோம், செய்தாலும் மறுபரிசீலனை செய்வோம் என்று எல்லோருமே சொன்னார்கள். மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார்கள். அவை எல்லாம் தேர்தல் வாக்குறுதிகள் தான். அதில் யதார்த்தம் கிடையாது. ஆனால், ஒரு வெளியுறவுக் கொள்கை சார்ந்த தேர்தல் வாக்குறுதியை கொடுக்க வேண்டிய விமான நிலையமும் கலாசர மண்டபமும் சீன மயமாதலுக்கு எதிரான விளைவுகள்.மத்தள விமான நிலையத்தை இந்தியா கேட்பது கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைக் கேட்பது எல்லாமே சீன மயமாதலின் எதிர் விளைவுகள். சீனமயமாதல் எனப்படுவது யுத்தவெற்றிவாதத்தின் சகோதரம்.அப்படி பார்த்தால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு தரத் தயாரற்ற ஒர் அரசியல் தான் சீனாவை நோக்கித் தள்ளியது. பொறுப்புக் கூறலுக்கு தயாரற்ற ஒர் அரசியல் தான் சீனாவை நோக்கித் தள்ளியது. சீனமயமாதலின் விளைவு தான் ஏனைய நாடுகளும் இவ்வாறான உடன்படிக்கைகளுக்கு கேட்பது.இந்த உடன்படிக்கைகளைச் செய்யாமல் இருப்பதென்றால் அவர்கள் செய்ய வேண்டியது தமிழ் மக்களோடு ஓர் உடன்படிக்கை. இந்தச் சிறிய தீவின் சகநிர்மாணிகள் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மூவருமே என்பதை ஏற்றுக்கொண்டு ஒரு தீர்வை அவர்கள் வழங்குவார்களாக இருந்தால், இந்த அழகிய தீவை மூன்று இனங்களும் சந்தோசமாகப் பங்கிட்டு உண்ணலாம். இல்லையென்றால் இச் சிறிய தீவு பேரரசுகள் பங்கிடும் ஓர் அப்பமாக மாறிவிடும்.அது நிச்சயமாக மைத்திரி, கட்சி தாவ முன் சாப்பிட்ட அப்பம் அல்ல.

Related posts

குழந்தைகள் நல்லவராவதும் தீயவராவதும் பெற்றோர் கைகளில்

Tharani

யானைகள் சரணாலயமாக மாறும் குப்பை மேடு – (சிறப்பு பார்வை)

G. Pragas

ஐநாவில் இருந்து வெளியேறினாலும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடரும்

Tharani