குற்றம்சஞ்சீவி - IPaperசெய்திகள்தடயத்தை தேடி!தலையங்கம்பிரதான செய்தி

புரேவி பறித்த உயிர்!

-தர்சன்

"நல்ல காத்து. கடலுக்கு போனா ஏதாவது கிடைக்கும், ரண்டு நாளைக்கு சீவியத்த போக்காட்டலாம், கடலுக்கு போறன் இப்ப வருவன்... எண்டு சொல்லிட்டு போன மனுசன், மூண்டாவது நாள் பிணமாத்தான் வந்தார்” என்று சொல்லி அழுதார் 38 வயதேயான இளம் குடும்பத்தலைவியான செல்வக்குமார் வள்ளியம்மை  . புரேவிப் புயலுக்கு தன் கணவரின் உயிரை பறிகொடுத்த பெண்ணின் அவலம் அந்த அழுகையினூடாக வெளிப்பட்டது.

கடந்த முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை வடக்கில் புரேவிப் புயல் நடத்திய கோரத் அந்தத் தாண்டவத்தில் பலியான முதல் உயிர் சுழிபுரம் பெரியபுலோவைச் சேர்ந்த மீனவரான செல்வக்குமாருடையது. 37 வயதுடைய இளம் குடும்பஸ்தரான செல்வக்குமார் வறுமையின் பிடியிலும், முன்னேறத் துடித்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான அவரின் வருமானத்தில்தான் அவரது குடும்பம் மட்டும் அல்ல, பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த அவரது சகோதரியின் குடும்பம், மற்றும், தாய் தந்தையரும் தமது வாழ்வாதாரத்தைப் போக்கிவந்தனர்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் செல்வக்குமார் விபத்து ஒன்றில் சிக்கினார். வயிற்றுப் பகுதியில் சத்திரசிகிச்சையும் செய்துகொண்டார், காலிலும் பெரிய காயம் ஏற்பட்டிருந்தது. கடலுக்குச் செல்வதற்கு முடியாத நிலையில், தன்னால் இயலுமான கூலி வேலைகளையே செய்துவந்தார்.  எப்படியாவது தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் எண்ணம் மட்டுமே அவரது சிந்தனை முழுக்க நிறைந்திருந்தது.
சில நாள்களுக்கு முன்னர் தான் மீண்டும் கடற்றொழில் நடவடிக்கைகளில் இறங்கினார். கடலில் வீச்சுத் தொழிலில் இறங்கிய செல்வக்குமார் ஓரளவு வருமானத்தை ஈட்டத்தொடங்கினார். 

புரேவிப் புயல் வருவதற்கு முன்னரே அது தொடர்பில் அரசாங்கம், வளிமண்டலவியல் திணைக்களம்,ஊடகங்கள், வானிலை ஆராய்ச்சியாளர்கள், புவியியல் துறை நிபுணர்கள் போன்றோர் அது தொடர்பான எச்சரிக்கைகளை போதுமான அளவுக்கு வழங்கியிருந்தனர் மறு அறிவித்தல்வரை மீனவர்கள் எவரும் கடலுக்குத் தொழிலுக்குப் போக வேண்டாம் என்று ஊடகங்கள் மூலமும் அதுதவிர கடலோரக் கிராமங்களுக்கு ஒலிபெருக்கி மூலமாகவும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 


விதி விடவில்லை
.........
01.12.2020
செவ்வாய்க்கிழமை .

புரேவிப் புயல் வடக்கு கடலில் நிலைகொண்டிருந்தது. யாழ். குடாநாட்டையும் கடுமையாகத் தாக்கத் தொடங்கியது. செல்வக்குமாரின் மனைவி வள்ளியம்மை கலையில் வயலில் புல்லுப் பிடுங்குவதற்காகச் சென்றிருந்தார். போகும்போது,
 “ ஒருத்தரையும் கடலுக்குப் போகவேண்டாம் எண்டு அறிவிச்சிருக்கு. இண்டைக்கு கடலுக்குப் போகாமல் வீட்டில இருங்கோ” 
என்று கணவரிடம் சொல்லிவிட்டே வேலைக்குப் புறப்பட்டிருந்தார் வள்ளியம்மை.ஆனால் விதி யாரை விட்டது? மதியம் வரை வீட்டுக்குள் இருந்த செல்வக்குமார் மாலையானதும் கடலுக்குப் போக முற்பட்டார். அப்போதும் வேலை முடிந்து வந்துவிட்ட வள்ளியம்மை மீண்டும் தடுத்தார். ஆனால் “ போட்டு இப்ப வந்திடுவன். காத்துக்கு நல்ல மீன்படும்” என்று சொல்லிவிட்டு, வீட்டிலிருந்த செல்வக்குமார் தனது உறவினர் ஒருவருடன் மாலை 5 மணியவில் கடலுக்குப் புறப்பட்டார். புரேவிப் புயலால் கடலில் நீர்ப்பெருக்கு அதிகமாக இருந்தது. வழமையை விடவும் அதிகமாகக் கடல் கொந்தளித்தது. அப்பிடி இருந்தும் இருவரும் அசட்டுத் துணிச்சலோடு கடலில் இறங்கினர். கடல் அலையில் தள்ளாடித் தள்ளாடி நின்றபடி ஒருவாறு வலை வீசி மீன் பிடியில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் செல்வக்குமாருக்கு முட்டு இழுக்க ஆரம்பித்தது. இனியும் தாங்கமுடியாதென்ற நிலை வர, களைத்துப்போன செல்வக்குமார் கரைக்குச் செல்ல ஆயத்தமானார். தன்னோடு கூட வந்த உறவினரின் கையைப் பிடித்தபடி செல்வக்குமார் கடலில் நடக்க ஆரம்பித்தார். ஆனால் புரேவியின் தாக்கத்தால் கடலில் எழுந்த பேரலைகள் செல்வக்குமாரை நடக்கவிடாமல் தடை போட்டன. செல்வக்குமாரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றால் இருவருமே கடலில் மூழ்க வேண்டியதுதான் என நினைத்தார் கூடச் சென்ற அவரது உறவினர். அடுத்த கணமே கிருபாகரனைப் பற்றியிருந்த கையை விடுவித்து, தான் மட்டும் நீந்திக் கரையை அடைந்தார். 
கரைக்குச் சென்ற உறவினர் , தன்னைப் பின் தொடர்ந்து செல்வக்குமாரும் வந்திருப்பார் என நினைத்துத் திரும்பிப் பார்த்தார். ஆனால் அவர் வரவில்லை. கொஞ்சநேரம் காத்திருந்தும் செல்வக்குமார் மீளவில்லை.எப்படியும் சில நிமிடங்களில் வந்துவிடுவார் என்ற எண்ணத்தோடு , தன் வீட்டுக்கு நடையைக் கட்டினார்.
அப்போது வள்ளியம்மை தனியாக வரும் உறவினரைப் பார்த்து “ எங்க அவர்?” என்று கேட்டார்.

”கடலில நிண்டவன். நான் வந்திட்டன், கரையளில எங்கயும் நி்ப்பான்” என்று கூறி அவர் தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார். இரவு 8.30 மணியாகியும் செல்வக்குமார் வீடு திரும்பவில்லை.அதன் பின்னரே உறவினர்களும், ஊரவர்களும் செல்வக்குமாரைத் தேட ஆரம்பித்தனர். கடற்கரை, கடலுடன் அண்டியுள்ள காட்டுப் பகுதியெங்கும் தேடியபோதும் செல்வக்குமார் கிடைக்கவில்லை. புரேவிப் புயலில் காணாமல் போன முதல் மீனவராக செல்வக்குமார் ஊடகங்களால் அறிவிக்கப்பட்டார்.

வலையில் சிக்கிய சடலம்

செல்வக்குமார் காணாமல் போய் மூன்றாவது நாளான கடந்த வியாழக்கிழமை இரவு( 03.12.2020) காரைநகர் ஊரிக் கடலில் தொழிலுக்குச் சென்ற மீனவர்களுடைய வலையில் சடலம் ஒன்று ஒதுங்கிருப்பதை அவதானித்தனர். ஏற்கனவே செல்வக்குமார் காணாமல் போனது தொடர்பில் அந்த மீனவர்கள் அறிந்திருந்ததால் அது தொடர்பில் உறவினர்களிடம் தெரிவித்தனர். ”கறுத்த காற்சட்டை பனியனுடன் ஒரு ஆணின் சடலம்” இந்த அடையாளத்தை மீனவர்கள் உறவினர்களுக்கு கூறினர் .
பதறிப்போனார் வள்ளியம்மை.
செல்வக்குமார் தொழிலுக்குச் செல்லும்போது அந்த உடையைத்தான் அணிந்திருந்தார். வள்ளியம்மை வேண்டாத கடவுள் இல்லை. “அந்தச் சடலம் செல்வக்குமாருடையதாக இருக்கக் கூடாது ”என்று நேர்த்தியும் வைத்தார். 
உடனேயே செல்வக்குமாரின் உறவினர்கள் காரைநகர், ஊரிப்பகுதிக்கு இரவோடிரவாக விரைந்தனர். அங்கிருந்து மீனவர்களின் படகில் ஏறிச் சென்று,கடலில் வலையில் சிக்கியபடி இருந்த சடலத்தை அவதானித்தனர்.

 உடல் வீங்கி ..
நுர்நாற்றம் வீச...
அந்தச் சடலத்தை கூர்ந்து பார்த்தனர்.
அது செல்வக்குமாரேதான்!
 வள்ளியம்மையின் நேர்த்திக் கடன் பலிக்கவேயில்லை. அத்தனை தெய்வங்களும் வள்ளியம்மையைக் கைவிட்டன. சடலத்தை அடையாளம் கண்ட உறவினர்கள் போனில் தகவல் சொல்ல, நிலை குலைந்தார் வள்ளியம்மை . கதறி அழுதார். ஆற்றொணாத் துயரத்தால் பேச்சு மூச்சற்றவளாக அமர்ந்துகொண்டார். 
சம்பவ இடத்துக்குச் ( ஊரிப்பகுதி) சென்ற பொலிஸார், இரவானாதால் சட்டத்தின் பிரகாரம் சடலத்தை மீட்பதில் உள்ள சிக்கல்களால், அதை அங்கேயே கடலில் கட்டிவிட்டு கரை திரும்பினர். மறுநாள் வெள்ளிக்கிழமை ( 04.12.2020 ) காலை நீதிவானின் அனுமதியுடன் சடலம் மீட்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் வள்ளியம்மையின் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, மாலை இறுதிக் கிரியைகளின் பின்னர் தகனம் செல்வக்குமாரின் சடலம் தகனம் செய்யப்பட்டது.

கடற்படையின் அலட்சியம்


செல்வக்குமார் காணாமல் போனபோது, அது தொடர்பில் உறவினர்கள் உடனடியாகவே கடற்படையினருக்கு தகவல் வழங்கியிருந்தனர். எனினும் அது தொடர்பில் அலட்சியமாகவே கடற்டையினர் நடந்து கொண்டனர் என்று அந்தப்பகுதி மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். “புயல் அதிகமாக உள்ளதால், இப்போது கடலில் தேடுவதில் சிரமம், மேலதிகாரிகளுக்கு தகவலை வழங்கி அவர்களின் அனுமதியைப் பெற்ற பின்னரே தேடுவது தொடர்பில் முடிவு செய்வோம்” என்று கடற்படையினர் தெரிவித்தனர் என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். செல்வக்குமார் காணாமல் போனதற்கு மறுநாளே கடற்படையினர் தேடுதலில் இறங்கினர். புயல் உக்கிரமடைந்ததால், மீனவர்களை கடலில் இறங்கி செல்வக்குமாரைத் தேடுவதற்கு கடற்படையினர் அனுமதித்திருக்கவில்லை.

 ஆனால் இந்த அவலச் சாவுக்கு முழுக்க முழுக்க செல்வக்குமாரே காரணம். இத்தனை அறிவிப்புகள் விடுக்கப்பட்டும், மனைவி திரும்பத் திரும்பத் தடுத்தும் புரேவியை ஒரு பொருட்டாகவே போனதால் தன்னுயிரை அவர் இழந்ததோடு, தன்னை நம்பி நின்ற மனைவி,பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிவிட்டார். செல்வக்குமாரின் இழப்பு, பேரிடர் அறிவிப்புக்களை உதாசீனம் செய்வோருக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். இனியாவது உரிய அறிவுறுத்தல்களை பின்பற்றி, வீணான உயிரிழப்புகளையும், சொத்தழிவுகளையும் தடுப்போம்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266