in

பெயர் எதுவாகிலும்…! #ஆசிரியர் தலையங்கம்

ஆசிரியர் தலையங்கம் 13.01.2021 புதன்கிழமை

பல்கலைக் கழகத் தூபி விவகாரம் வேறொரு கோணத்தில் தொடர்ந்தும் எரிவதற்கான சமிக்ஞைகளே அதிகம். இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீளவும் அமைக்கப்படுவதற்கான அடிக்கல் நேற்றுமுன்தினம் நடப்பட்டது. அத்தோடு, மாணவர்கள் மேற்கொண்ட உணவுத் தவிர்ப்புப் போராட்டம்  முடிவுக்கும் வந்திருந்தது. ஆனால் அதன் பின்னர் புதிய பூதமொன்று கிளம்பியிருக்கிறது.

‘முள்ளிவாய்க்கால் தூபியை யாழ். பல்கலைக் கழகத்தில் அமைக்க, மானியங்கள் ஆணைக்குழு அனுமதிக்காது. அதற்கான சுற்றுநிருபமும் அனுப்பப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு தூபிக்கு அனுமதி பெறுவதுபோல காலத்தை இழுத்தடித்துவிட்டு, அங்கே சமாதானத் தூபியே அமைக்கப்படும்’ என்று தமிழ் சிவில் சமூகம் எழுப்பிய சந்தேகம் புதிய குழப்பத்தை உண்டுபண்ணியிருந்தது.

இந்த நிலையில் யாழ். பல்கலைக்கழத் துணைவேந்தர் கூறிய கருத்தும் அங்கே சமாதானத் தூபியே அமைக்கப்படவுள்ளதை உறுதி செய்துள்ளது. ஆயினும் ‘முன்னர் இருந்த தூபியின் வடிவத்திலேயே மீளவும் தூபி நிறுவப்படும். ஆனால் பெயர் மட்டும் சமாதானத்தூபி என்று வைக்கப்படும்’ என ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனால் தூபியின் பெயரை மாற்ற மாணவர் தரப்பு இணங்குமா என்பது கேள்விக்குறியே.

இருப்பினும் முன்னர் இருந்த அதே தோற்றத்தோடு, எறிகணைகள் வீழும் நிலத்தில் எழும் அவலக் கரங்களை குறியீடாகக் கொண்டு அமைக்கப்பட்டு அதற்கு என்ன பெயர் வைத்தாலும், எல்லோர் மனதிலும் அது முள்ளிவாய்க்கால் தூபி என்றுதான் நினைவில் நிற்கும். போர் முடிவடைந்து பதினொரு வருடங்கள் தாண்டியும், நல்லூரில் உள்ள பூங்காவை கிட்டுப் பூங்கா என்று சொன்னால் தான் எவருக்கும் அடையாளம் தெரிகிறது. அப்படி நிறைய இடங்கள் உள்ளன. முதலில் என்ன பெயர் வைக்கிறோமோ அதுதான் கடைசிவரை நிலைக்கிறது. சிலவேளைகளில் அந்தப் பெயருக்குரிய விடயம் அழிந்திருந்தாலும் கூட, பழைய பெயரும், அதன் நினைவுகளும் இன்னும் அழியாமல் இருக்கின்றன. கிளிநொச்சியில் இப்போதும் பலர் பஸ்ஸில் பயணிக்கும்போது ‘புலிகளின் குரலடியில இறக்கம்’ என்று சொல்வார்கள். இப்போது புலிகளும் இல்லை, புலிகளின் குரலும் இல்லை, அந்த வானொலி நிலையம் அமைந்திருந்த அடையாளமும் இல்லை. ஆனால் மக்களின் மனதில் இன்னமும் அது புலிகளின் குரலடி தான்.

பாகுபலி படத்தில், நாயகனான பாகுபலி இறந்து பல வருடங்களுக்கு பின்னர் அவனை விடவும் தன்னையே மக்கள் மனதில் நினைக்கவேண்டும் என வில்லனான பல்வாள்தேவன் திட்டமிடுகிறான். தனக்கு ஒரு பிரமாண்டமான சிலை அமைக்கிறான். ஆனால் அதை வைக்கும் போது மக்களுக்கு பாகுபலியின் நினைவு வந்து எல்லோரும் ‘பாகுபலி, பாகுபலி’ என முழக்கமிடுவர். உண்மையான பல்வாள்தேவனின் சிலையை விடவும், அருவமான பாகுபலியின் சிலையே பேருருக் கொண்டு நிற்கும்.

அதைப்போல பல்கலைக் கழகத்தில், மீளெழப்போகின்ற தூபிக்கு சமாதானத்தூபி என்றோ, பொது நினைவேந்தல் தூபி என்றோ, போரால் கொல்லப்பட்ட சகலருக்குமான நினைவிடம் என்றோ அல்லது போர்வெற்றித் தூபி என்றோகூட பெயரை வைத்துக்கொண்டாலும், அது என்றென்றைக்கும் எல்லோர் மனதிலும் முள்ளிவாய்க்கால் தூபியாகவே நினைவில் நிற்கும். ஆனாலும் எம் இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரத்தை அடுத்துவரும் தலைமுறைகளும் அறிந்துகொள்ள முள்ளிவாய்க்கால் தூபி என்பதைத் தவிர வேறு எந்தப் பெயரும் அதற்குப் பொருத்தமாய் இராது.

வெள்ளக்காடாகியுள்ள வடக்கு!! – தொடரவுள்ளது கன மழை!

படுகொலை வழக்கில் இருந்து பிள்ளையான் உட்பட ஐவர் விடுதலை!