செய்திகள் பிரதான செய்தி மலையகம்

பாடசாலைகளுக்கான நிதித்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் – வேலு

பெருந் தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான இந்தியாவின் உதவித் திட்டத்தின் கீழ் கண்டி மாவட்டத்தில் உள்ள 3 தமிழ்ப் பாடசாலைகளுக்கும் நிதி ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும், அத்திட்டம் எவ்வித தங்குதடையுமின்றி உரிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (19) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,

மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்கள் உட்பட பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள குறைந்த வசதிகளைக் கொண்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக 1000 மில்லியன் ரூபாயை முதலீடு செய்வதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டிருந்தது.

மூன்று கட்டங்களாக இந்நிதியை பகிர்ந்தளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் முதற்கட்டமாக 300 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. இதற்கான புரிந்தணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் போது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இந்நிலையில் மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதை துரிதப்படுத்துவதற்கு கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த இராதாகிருஷ்ணன் தீவிர முயற்சிகளை முன்னெடுத்திருந்தார். அவர் தலைமையில் அபிவிருத்திக்கான உத்தேச பட்டியலும் தயாரிக்கப்பட்டது.

குறிப்பாக எனது வேண்டுகோளின் பிரகாரம் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணனின் பரிந்தரைக்கமைய கண்டி மாவட்டத்தில் மூன்று தமிழ் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்குவதற்கு ஏற்பாடாகி இருந்தது.

இதன்படி கண்டி விவேகானந்த தமிழ் வித்தியாலயம், குண்டசாலை விவேகானந்தா தமிழ் வித்தியாலயம், நாவலப்பிட்டிய டெம்பெஸ்டோர் தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றில் சுமார் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவிருந்தன.

இதற்கிடையில்தான் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுவிட்டது. ஆட்சிமாற்றம் ஏற்படுவது ஜனநாயக பண்பு. ஆனால், முன்னெடுக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் ஒருபோதும் கைவிடப்படக்கூடாது. எனினும், அரசியல் பழிவாங்கலுக்காக புதிய அரசாங்கம் பல திட்டங்களை கைவிட்டுள்ளது. ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களைகூட மீள்பரிசீலனை செய்கின்றது.

சிலவேளை பாடசாலை அபிவிருத்தி விடயத்திலும் இந்த அரசாங்கம் அரசியலை திணிக்கக்கூடும். பெருந்தொட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் நிறுத்தப்பட்டது போல், பாடசாலைகளுக்கான ஒதுக்கீடுகளிலும் கைவைக்கக் கூடும்.

எனவே, இந்தியாவின் நிதி உதவியின் கீழ் கண்டி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதி அவ்வாறே கிடைக்கப்பெற்று, அபிவிருத்திகளும் உரிய வகையில் இடம்பெறவேண்டும். இது விடயத்தில் எவரும் அரசியலை திணிக்க முற்படக்கூடாது – என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கபில சந்திரசேன நாட்டில் இல்லை!

G. Pragas

ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் தங்கம் வென்ற மலையக இளைஞன்

Tharani

ரணில் பிரதமராக இருந்தால் கொரோனாவிற்கும் அவரையே காரணம் காட்டியிருப்பார்கள் ?

reka sivalingam

Leave a Comment