செய்திகள் பிரதான செய்தி

போதைப்பொருள் தொடர்பில் 28 பேர் கைது!

சர்வதேச கடற்பிராந்தியத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் இதுவரை 28 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஈரானிய பிரஜைகள் 14 பேரும் பாகிஸ்தான் பிரஜைகள் நால்வரும் இலங்கை பிரஜைகள் 10 பேரும் அடங்குவதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் பயணித்த 2 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

படகுகளுடன் சந்தேகநபர்கள் நாளை (05) கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பாதுகாப்புத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

தென் கடற்பிராந்தியத்திலிருந்து 1100 கிலோமீற்றர் தொலைவில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றுடன் நேற்று முன்தினம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 600 கோடி ரூபாவிற்கும் அதிகமாகும் என கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது.

கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் கடந்த சனிக்கிழமை முதல் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

ரோந்து நடவடிக்கையின்போது, படகொன்றிலிருந்து சுமார் 75 கிலோகிராம் ஹெரோயினும் சுமார் 50 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டிருந்தன.

சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டதுடன் 7 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் மறுதினம் வரக்காபொல பகுதியில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இருவரும் 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், 330 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயினும் சுமார் 50 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தாபரிப்பு பண முறுகல்! எரியூட்டப்பட்ட பெண் பலி!

Tharani

வடக்கில் தனிமை மையங்கள் இன்னும் உருவாகும் – இராணுவத் தளபதி

Bavan

தீப்பரவல் கட்டுக்குள் வந்தது!

G. Pragas