செய்திகள் பிந்திய செய்திகள்

17200 ஏக்கரில் சிறுபோக வேளான்மைச் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை!

மட்டக்களப்பு – வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 2020 சிறுபோக வேளான்மைச் செய்கை நவகிரி பெரிய நீர்ப்பாசனத் திட்டத்திலும், மற்றும் வெல்லாவெளி சிறு நீர்ப் பாசனத் திட்டங்களினூடாகவும் சுமார் 17200 ஏக்கரில் செய்கை செய்வதென 2ம் திகதி வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற ஆரம்ப பயிர்செய்கைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கடந்த 2019-2020 பெரும்போக நெற்செய்கையின்போது அறுவடை செய்யப்பட்ட நெல்லை நெற்சந்தைப்படுத்தும் சபையூடாக நியாயவிலையில் விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்து தந்தமைக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவுக்கு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளால் நன்றி பாராட்டப்பட்டதுடன் எதிர்வரும் சிறுபோகத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை உரிய காலத்தில் இச்சபையூடாக அரசாங்கம் நெல் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு செய்து தரப்பட வேண்டும் என்றும் விவசாய பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

இக்கூட்டத்தில் நீர்ப்பாசனங்களை வினைத்திறனுடன் செயற்படுத்துவது பற்றியும், அரசாங்க உதவித்திட்டத்தில் உரவகைகளைப் பெற்றுக் கொடுப்பது பற்றியும் தரமான விதை நெல்லைப் பயன்படுத்துவது பற்றியும் ஆராயப்பட்டதுடன் செய்கை பண்ணப்படாத நெல் வயல்களில் மறு பயிர்களை உற்பத்தி செய்வது பற்றியும் இங்கு தீர்மாணிக்கப்பட்டது. நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஏ. அஸார் இங்கு கருத்து வெளியிடுகையில், இப்பிரதேசத்தின் நெற்செய்கைக்குப் போதுமான நீர் வசதி தேக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், காலை நிலமை மாற்றத்திற்கமைய பயிர்ச்செய்கைக்குத் தேவையான நீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் கே. ஜெகன்னாத் கருத்து வெளியிடுகையில், புதிய அரசாங்கம் விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கத் தீர்மானித்திருப்பதாகவும் இதற்கான அனுமதி கிடைத்ததும் நேர்த்தியான முறையில் உரவிநியோகத்தை மேற்கொள்ள தமது திணைக்களம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையுரையில் வினைத்திறனான நீர்பாசனங்களை மேற்கொண்டு காலநிலை மாற்றத்திற்கேற்ப இம்மாவட்ட விவசாயிகள் நெல்லையும், ஏனைய மறுபயிர்களையும் எதிர்வரும் சிறுபோகத்தில் உற்பத்தி செய்து கடந்த வருடப் பெரும்போகத்தில் பெற்றுக் கொண்ட நல்ல விளைச்சலைப் போன்று இப்போகத்திலும் சிறந்த தர விதை நெல்லை பயன்படுத்தி அதிக விளைச்சளைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். அரசாங்கம் உரவிநியோகத்திற்கு உதவவும், உரிய காலத்தில் அறுவடை நெல்லை கொள்வனவு செய்வதற்கும் வசதி செய்து தரும் என்றும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் எதிர்வரும் சிறுபோகத்தில் பழுகாமம் கமநல சேவைகள் பிரிவிலுள்ள 1974.8 ஹெக்டேயர் மற்றும் மண்டூர் கமநலச் சேவைப்பிரிவிலுள்ள 2494 ஹெக்டேயர் நெல் வயல்களுக்கும் 62.8 ஹெக்டேயர் மறுபயிர்களுக்கும் அரச உதவியில் உரம் விநியோகிக்க மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் ஆலாசனைக் கமைய விவசாய அமைச்சுக்கு சிபாரிசு செய்யப்பட்டு இருப்பதாகவும், அமைச்சின் சுற்றுநிருபம் எதிர்வரும் 15ஆந் திகதி வெளியானதும் அரச உதவியிலான உர விநியோகம் ஆரம்பமாகும் என்றும், சிரமங்களைத் தவிர்க்க உரிய காலத்தில் விவசாயிகள் தமது தேவைகளை முன் கூட்டியே விண்ணப்பிக்குமாறும் தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு உதவிப் பணிப்பாளர் சிராஜூன் தெரிவித்தார்.

கடந்த 2019 சிறுபோகத்தில் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 93.1 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்குமாறு சிபாரிசு செய்யப்பட்டிருப்பதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன் குறித்த நட்டஈடுகள் விவசாயிகளுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாயக் காப்புறுதிச் சபையின் உதவிப்பணிப்பாளர் கே. பாஸ்கரன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இப்பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் காட்டு யானைத் தொல்லை, நீர்ப்பாசன புனரமைப்புப் பணிகள் மற்றும் விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கும் அதசாங்க அதிபரின் உத்தரவிற்கமைய அதிகாரிகளால் உரிய தீர்வுகள் இக்கூட்டத்திலேயே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. (150)

Related posts

கோத்தா உள்ளிட்ட எண்மரை கொழும்பு மேல் நீதிமன்றமும் விடுவித்தது

G. Pragas

தியதலாவயில் இருந்து வெளியேறிய 33 மாணவர்கள்

reka sivalingam

மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

Tharani