செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

மண்ணுக்காய் மரணித்த வீரர்களை மரம் நட்டு நினைவு கொள்வோம் – ஐங்கரநேசன்

கார்த்திகையில் மரங்களை நடுதல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரம் அல்ல அது தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்கின்ற ஒரு தேசியச் செயற்பாடு என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக இன்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் கார்த்திகை மாதம் தனித்தவமான இன்னுமொரு சிறப்பினைக் கொண்டுள்ளது. மண்ணுக்காக மரணித்த வீரர்களைக் கூட்டாக நினைவிற்கொள்ளும் நாள் அடங்குகிறது. மரவழிபாட்டைத் தமது தொல்வழிபாட்டு முறையாகக்கொண்ட தமிழர்கள் இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்து, அவற்றை உயிருள்ள நினைவுச் சின்னங்களாகப் போற்றிய பண்பாட்டு மரபையும் கொண்டிருக்கின்றனர்.

தேசியம் என்பது ஒர் வெற்று அரசியற் சொல்லாடல் அல்ல இது ஒரு இனத்தின் வாழ்புலம் மொழி, வரலாறு, பண்பாடு, மத நம்பிக்கைகள் ஆகிய ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட கூறுகளின் திரட்சியான ஒரு வாழ்க்கை முறையாகும். அந்த வகையில், கார்த்திகைமாத மரநடுகை என்பது சூழலியல் நோக்கிலும் தமிழ்த் தேசிய நோக்கிலும் மிகவும் பொருத்தப்பாடான ஒன்றாகும்.

வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுது உண்ணுகின்றோம். ஆனால், இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று, வருடம் பூராவும் மரங்களை நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும்.

கார்த்திகையில் மரங்களை நடுகை செய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரம் அல்ல் அது தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்கின்ற ஒரு தேசியச்செயற்பாடும் ஆகும். எனவே, இப்புனித கார்த்திகையில் ஆளுக்கொரு மரம் நடுவோம். நாளுக்கொரு வரம் பெறுவோம் – என்றார்.

Related posts

புதிய பிரதமரை வாழ்த்திய டொனால்ட் ட்ரம்ப்

Bavan

அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரருக்கு புற்றுநோய்

G. Pragas

உள்நாட்டு முதலீட்டை ஊக்குவிக்க சட்டத்தரணிகளிடம் கோரிக்கை

கதிர்