மருதனார்மடம் சந்தைக் கொத்தணி யார் பொறுப்பு?

“முடிவு தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கும் நதி போல, விரிந்து விசாலமாகப் பரவிக் கொண்டே போகின்றது மருதனார்மடம் கொத்தணியின் தொற்றாளர்கள் எண்ணிக்கை. மருதனார்மடம் சந்தைக் கொத்தணி உப கொத்தணிக் குட்டிகளையும் போடும் அபாயம் இல்லாமல் இல்லை. ஆபத்துடன் கூடவே வாழ்ந்து கொண்டிருந்தாலும் ‘மருதனார்மடம் சந்தைக் கொத்தணியை’ சிந்தனையில் ஏற்றாது தனது இயல்பு வாழ்வுடன் நகர்கின்றது யாழ்ப்பாணம். தன் வாசல் படியை ‘கொரோனா’ தட்டும் வரையில் பொதுச் சிந்தனை என்பது யாழ்ப்பாணத்தவர் எவருக்கும் உதிக்கப் போவதில்லைத்தான்.”

#மருதனார்மடம்_சந்தை

வலிகாமத்தின் இதயபூமியில் மருதனார்மடம் சந்தியில் அமைந்துள்ளது மருதனார்மடம் பொதுச் சந்தை. வளம் கொழிக்கும் வலிகாமத்தில் உற்பத்தியாகும் விவசாயப் பொருள்களின் சங்கமம் இங்குதான். இலங்கைக்கு ஓர் தம்புள்ள போல யாழ்ப்பாணத்தின் குட்டித் தம்புள்ளவாக இயங்கிக் கொண்டிருந்தது மருதனார்மடம் பொதுச் சந்தை.
சூரியன் கண் விழிக்க முன்னரே களைகட்டத் தொடங்கிவிடும் மருதனார்மடம் சந்தை. சராசரியாக ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேர் வரையில் நுகர்வுக்காக வந்து செல்கின்றனர். திருமணக் காலங்களில் விசேட நிகழ்வுகளில் காலத்தில் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகம்.
240 மரக்கறி வியாபாரிகள் கடை வைத்துள்ளனர். சராசரியாக உள்ளூர் விவசாயிகள் 300பேர் வரையில் தமது உற்பத்திப் பொருள்களை இங்கு வந்து விற்பனை செய்கின்றனர். மருதனார்மடம் சந்தையை குத்தகைக்கு கொடுப்பதன் ஊடாக வலி.தெற்கு பிரதேச சபை ஒரு நாளைக்குப் பெற்றுக் கொள்ளும் வருமானம் 65 ஆயிரம். சந்தையில் நடக்கும் வியாபாரத்தின் ஒட்டுமொத்த லாபம் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்தை தாண்டும்.
சந்தையின் வெளிப்புறமாக பிரதேச சபைக்குச் சொந்தமான 39 கடைகள் உள்ளன. மருதனார்மடம் பொதுச் சந்தையில் மொத்தமாக 350பேர் வரையில் வர்த்தகர்கள், உதவியாளர்கள் என இயங்குகிறார்கள்.

#பூர்த்தியாகும்_ஒரு_மாதம்

இன்னும் இரண்டு நாள்களில் தனது பிறப்பின் முதலாவது மாதத்தை பூர்த்தி செய்கின்றது ‘மருதனார்மடம் சந்தைக் கொத்தணி’. ஆனால் இதுவரையில் இந்தக் கொத்தணியின் மூலவேர் கண்டறியப்படவுமில்லை, அதற்கான நோக்கங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தப் பரவல் தனித்து தமிழர்களின் மாவட்டமான யாழ்ப்பாணத்தில் வீரியம் காட்டியதால் ஆட்சிப் பீடத்தின் அசிரத்தை தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.
ஒரு மாதமாக மூடப்பட்டிருக்கின்றன மருதனார்மடம் சந்தையும் அதனோடு இணைந்த வர்த்தக நிலையங்களும். பிட்டுக்கு மண் சுமக்க வந்த சிவபெருமான் முதுகில் விழுந்த அடி எல்லோர் முதுகிலும் விழுந்ததைப் போன்று, மருதனார்மடம் சந்தையால் வடக்கின் எல்லாச் சந்தைகளுமே மூடு விழாக் கண்டன.
இந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட இழப்புக்களை இவற்றை மூட உத்தரவு போட்ட அதிகாரிகளோ, மக்களின் பிரதிநிதிகள் என்று மகுடம் சூட்டிக் கொண்டவர்களாலோ கணக்கிடவில்லை. விவசாயி தொடங்கி வர்த்தகர் வரையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் வகையான நட்டங்கள்.

#இழப்புக்கள்

மருதனார்மடம் சந்தையால் தனிமைப்படுத்தல், தொற்றாளராக உறுதியானால் சிகிச்சை நிலையம், குடும்பத்தினர் தனிமைப்படுத்தல் என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் வருமான இழப்புக்கு ‘கொடையளிக்கும் கோத்தா அரசின்’ 5 ஆயிரம் ரூபா போதுமா? போட்டதைபோட்டபடி விட்டு குண்டுத் தாக்குதலுக்கு பயந்தோடியதைப்போன்று, அதிகாரிகளின் தடாலாடி அறிவிப்பால் மூடப்பட்ட வர்த்தக நிலையங்களிலிருந்த எத்தனை பொருள்கள் தங்கள் காலாவதித் திகதியைக் கடந்திருக்கும். குப்பைத் தொட்டிக்குள் போகும் அவற்றுக்குப்போட்ட முதலீட்டை, வர்த்தகர்களுக்கு யார் கொடுப்பார்?
வீதிகளை சந்தைகளாக்கி விட்ட பெருமை, குளிரூட்டிய அறைக்குள் சுழல் கதிரைகளிலிருந்து முடிவுகளை எடுக்கும் ‘சம்பளத்துக்கு கடமை செய்யும்’ அதிகாரிகளையே சாரும். அப்படி அவர்களால் வீதியோரம் முளைக்கும் ‘நவீன சந்தை’ வியாபாரிகள் கேட்கும் விலைக்கு கொடுத்து விட்டு, மரக்கறிக்குரிய இறைப்புக் கூலியைக் கூட பெற முடியாமல் தவிக்கும் விவசாயின் இழப்புக்கு யார் பதில் சொல்வார்?

#பொறுப்பற்றதனம்

மருதனார்மடம் சந்தைக் கொத்தணி தொடர்பில் துறைசார் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் பொறுப்பற்றதனமே இன்று பல லட்சம் பேருக்கு மில்லியன் கணக்கான ரூபா இழப்புக்களை ஏற்படுத்தி நிற்கின்றது. முடிவு தெரியாத இந்தக் கொத்தணியால் பலர் வீதிக்கு வரும் நிலைமையையும் வரலாம். ஆனால் இது உருவாகுவதற்கு காரணமாக இருந்தவர்கள் தொடர்பில் எந்தவொரு தரப்பும் கவனத்தைக் குவிக்கவில்லை. மாகாண நிர்வாகத்தின் கீழ் முழுமையான இந்த விடயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் கூட ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதுவும் அதிகாரிகளின் பொறுப்பற்ற தனக்கு ஊக்குவிப்புப் பரிசு வழங்குவதாக இருக்கின்றது.

#எச்சரிக்கை

கொரோனா முதலாவது அலை முடிந்த சில நாள்களிலேயே மருதனார்மடம் சந்தை , கொரோனாப் பரவலுக்கு ஏதுவாகக் காணப்படுகின்றது என்ற எச்சரிக்கை கடிதம் முதன் முதலில், அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் உடுவில் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டிருந்தது.

‘11.05.2020 இலிருந்து பொதுச் சந்தையின் நிர்வகிப்பு தொடர்பில் சட்ட அதிகாரங்களையும், ஆளணிகளையும் கொண்டுள்ள பிரதேச சபையானது பொதுச் சந்தையை கொரோனா கட்டுப்பாட்டுக்குள் ஏற்ற வகையில் ஒழுங்குபடுத்தாமையும் கொரோனா கட்டுப்பாடு தொடர்பில் தாக்கம் செலுத்தும் காரணியாகவுள்ளதாக’ அந்தக் கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

#தொடர் கடிதங்கள்

கொரோனா இரண்டாம் அலை உருவாகிய பின்னரும் மருதனார்மடம் சந்தையின் ஆபத்துக்கள் குறித்து பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிக்கு 12.10.2020, 26.10.2020, 02.11.2020 ஆகிய தினங்களில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
‘பல தடவைகள் பரிசோதனை அறிக்கை ஊடாக வலி. தெற்கு பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டிருந்தும் அவை பெரும்பாலும் நிவர்த்தி செய்யப்படாது தொடர்ந்தும் கொரோனா பரவுவதற்கான ஏதுவான ஆபத்துக் காரணிகளுடன் மருதனார்மடம் பொதுச் சந்தை இயங்கி வருகின்றது.
இங்கிருந்து பல வியாபாரிகள் தம்புள்ள, கொழும்பு போன்ற இடங்களுக்குச் சென்று மரக்கறிகளைக் கொண்டு வருவதுடன் இங்கிருந்து மரக்கறிகளைக் கொண்டு செல்வதற்காக வேறு இடங்களில் உள்ளவர்களும் வந்து செல்கின்றனர்.
தற்போதைய கொரோனா வேகமான பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு அதற்கான ஆபத்துக் காரணிகளை குறைக்கும்பொருட்டு மருதனார்மடம் பொதுச் சந்தையின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறுமிடத்து பலருக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு’ என்று மருதனார்மடம் கொத்தணி கண்டுபிடிக்கப்படுவதற்கு சரியாக 39 நாள்களுக்கு முன்னரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

படம் – 1 – மருதனார்மடம் கொத்தணி ஏற்பட முன்னர் 20.11.2020 அன்று நீதிமன்றுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர் முன்வைத்த அறிக்கை.

படம் – 2 – மருதனார்மடம் சந்தை தொடர்பில் 18.05.2020 அன்று பொதுச் சுகாதார பரிசோதகர் அனுப்பிய கடிதம்.

படம் – 3 – கொரோனா இரண்டாம் அலையின் பின்னர் 02.11.2020 அன்று பொதுச் சுகாதார பரிசோதகர் அனுப்பிய கடிதம்.

 

#வழக்கு

மருதனார்மடம் பொதுச் சந்தையால் கொரோனா பரவல் அபாயம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 20.11.2020 அன்று, பொதுச் சுகாதார பரிசோதகரால் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையிலும் கொரோனாப் பரவலுக்கு ஏதுவான காரணிகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
‘இங்கு வெளி இடங்களான தம்புள்ள மற்றும் கொரோனா நோய் தீவிரமாக பரவுகின்ற கொழும்பு போன்ற இடங்களிலிருந்து பல வியாபாரிகள் தமது வியாபாரப் பொருள்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இத்தகையவர்கள் ஊடாக சந்தையுடன் தொடர்புபட்டவர்களுக்கு கொரோனா கடத்தப்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறு நோய்த் தாக்கம் ஏற்படுமாயின் அது பெரியளவிலான சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்பதுடன் அதன் பின் கட்டுப்படுத்துவது கடினமாகும்’ என்று முற்கூட்டிய எச்சரிக்கை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அபாயத்தை தடுப்பதற்கு 9 விடயங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற பரிந்துரை பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
‘சந்தையை புதிய கட்டடத்துக்கு மாற்றுதல், வெளிமாவட்ட வியாபாரிகள் வந்து செல்ல ஒரு நேரமும், உள்ளூர் வியாபாரிகள் வந்து செல்ல பிறிதொரு நேரமும், நுகர்வோர் வந்து செல்ல இன்னொரு நேரமும் ஒதுக்கி அந்த நேர அட்டவணையைக் காட்சிப்படுத்தல், வெளிமாவட்டம் சென்று வரும் வியாபாரிகளின் பதிவுகளைப் பேணல், மொத்த வியாபாரிகள் மற்றும் விவசாய உற்பத்திகளைக் கொண்டு வருவோர் உள்நுழைய, வெளியேற தனியான வழிகளும், நுகர்வோர் உள்நுழைய வெளியேற தனியான வழிகளும் அடையாளப்படுத்தப்படவேண்டும், பொதுச் சந்தைக்குள் நுழையும் ஒவ்வொரு இடத்திலும் 4 குழாய் நீர் தொகுதிகள் வைக்கப்பட்டு அங்கு சவர்காரம் தொடர்ச்சியாக வைக்கப்படவேண்டும் என்பதுடன் இவை தொடர்பில் தொடர் கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும்’ என்ற முக்கிய பரிந்துரைகள் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் முன்வைக்கப்பட்டிருந்தது. மன்று அதனை நடைமுறைப்படுத்துமாறும் கட்டளையிட்டிருந்தது.

#முன்னேற்றம் இல்லை

இதன் பின்னர் 25.11.2020 அன்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர் நீதிமன்றுக்கு முன் வைத்த அறிக்கையில், தாம் முன்வைத்த முக்கிய பரிந்துரைகள் செயற்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ளார். இதன் பின்னரும் 09.12.2020 அன்று நீதிமன்றுக்கு முன்வைத்த அறிக்கையிலும், விலை கூறும் இடத்தில் அதிகளவானோர் ஒன்று கூடுகின்றனர் என்பதும், நேர அட்டவணை காட்சிப்படுத்தப்படவில்லை என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

#ஒத்துழைப்பின்மை

பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாத இவ்வாறானதொரு சூழலிலேயே, எழுமாற்றுப் பரிசோதனையில் மருதனார்மடம் சந்தையில் வியாபாரம் செய்பவரும், மருதனார்மடம் சந்தியில் முச்சக்கர வண்டிச் சாரதியுமாக உள்ளவர் கொரோனாத் தொற்றுடன் 11.12.2020 அன்று அடையாளம் காணப்பட்டார்.
உடனடியாகச் சந்தை வியாபாரிகள் அதனுடன் தொடர்புடையோர் என்று பல தரப்பினருக்கும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 151பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட, மருதனார்மடத்தில் புதிய கொரோனாக் கொத்தணி கண்டுபிடிக்கப்பட்டது.

#குற்றச்சாட்டுகள்

மருதனார்மடம் சந்தைக்கு பொறுப்பாக இருப்பது சுன்னாகம் – வலி.தெற்கு பிரதேச சபை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்டபட்ட சபை. தவிசாளர் தர்சன் தங்கள் சபை மீது வேண்டுமென்று களங்கம் கற்பிப்பதற்காகவே இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன என்று கூறுகின்றார்.
‘மருதனார்மடம் புதிய சந்தை கட்டத் திறப்பு விழாவைத் தடுப்பதற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளாவே இதனை நாம் சந்தேகின்றோம். பிரதேச சபையின் பெயரைக் கெடுப்பதற்காக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியல் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை இது’ என்று தர்சன் குறிப்பிடுகின்றார்.
பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் அனுப்பப்பட்ட முன்னெச்சரிக்கை கடிதங்கள், உடுவில் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரியிடமிருந்து தமது சபையின் செயலருக்கு கிடைத்ததை ஏற்றுக் கொள்ளும் அவர், அந்தக் கடிதங்கள் சுன்னாகம் பிரதேச சபைக்கு மாத்திரம் விசேடமாக அங்கீகரிக்கப்பட்ட ஆளணியாக உள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதாகச் சொல்கின்றார்.
தமது சபைக்குரிய பொதுச் சுகாதார பரிசோதகரே அவற்றை நடைமுறைப்படுத்தியிருக்கவேண்டும் என்றும், நீதிமன்றுக்கு இந்த விடயம் செல்லும் வரையில் அவரிடமிருந்து எந்தவொரு அறிவுறுத்தல்கள், ஆலோசனைகள் எவையும் தனக்கோ சபையின் செயலருக்கோ கிடைக்கவில்லை எனவும் தர்சன் தெரிவித்தார்.
உடுவில் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரியுடன் தொலைபேசியூடாக அடிக்கடி தொடர்பில் இருந்ததாகவும் ,அவர் கூட மருதனார்மடம் சந்தை தொடர்பில் குறைகளைச் சொல்லவில்லை எனவும், தனது சபைக்குரிய பொதுச் சுகாதாரப் பரிசோதகரும் எதுவும் அறிக்கையிடாததால், மருதனர்மடம் சந்தை பிரச்சினை இல்லாமல் இயங்கியதாக தான் நம்பியதாகவும் தவிசாளர் கூறுகின்றார்.

#பக்கச் சார்பு

மருதனார்மடம் கொத்தணிக்கு எமது சபைக்குரிய பொதுச் சுகாதார பரிசோதகரே பொறுப்பு என்று சபையின் அமர்வில் பெரும்பாலான உறுப்பினர்கள் கூறியதாகவும், இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சந்தைக்கு வருபவர்களின் விவரங்களைப் பதிவு செய்யக் கூறுகின்றனர். அது சாத்தியமற்றது. எமது சந்தையை விட திருநெல்வேலி பொதுச் சந்தையிலேயே அதிகளவானோர் தம்புள்ள சென்று வருகின்றனர். அங்கு இவ்வாறான எந்தவொரு பரிந்துரைகளும் முன்வைக்கப்படவில்லை. எமது பிரதேச சபையைக் குற்றம் சுமத்தவேண்டும் என்பதற்காகவே இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன’ என்றும் தர்சன் தெரிவித்தார்.
மருதனார்மடம் சந்தை வியாபாரிகளுக்கு பி.சி.ஆர். சோதனை செய்வதற்கு வியாபாரிகள் விவரங்கள் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் கோரப்பட்டதை ஏற்றுக் கொள்ளும் தவிசாளர், அதனை தாம் வழங்கத் தயாராக இருந்தோம் என்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், ‘நாளை பி.சி.ஆர். செய்யப் போகின்றோம் தாருங்கள்’ என்றால் வழங்கியிருப்போம் எனவும் குறிப்பிடுகின்றார்.

#வழக்கில் ஆர்வம்

அதனை விட தமது சந்தையில் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே ஏனைய சந்தைகளில் உள்ள வியாபாரிகளுக்கு பி.சி.ஆர். சோதனை முன்னெடுக்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். எழுமாற்றுப் பரிசோதனைக்கு எம்மிடமிருந்து விவரங்களைப் பெற்றுச் சோதனை செய்யவேண்டியதில்லை என்றும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சந்தை வியாபாரிகளையும் எழுமாற்றாகச் சோதனைக்கு உட்படுத்தியிருக்க முடியும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
வியாபாரிகளின் நேர ஒழுங்கு தொடர்பான விடயத்தை காட்சிப்படுத்துமாறு முன்வைக்கப்பட்ட பரிந்துரையை செயற்படுத்த சபையின் செயலர் ஒரு வார கால அவகாசம் தேவை என்று நீதிமன்றுக்கு முன்வைத்த பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபோதும் அது செயற்படுத்தப்படவில்லை என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மன்றுக்கு அறிக்கையிட்டுள்ளார். ‘இதனைச் செயற்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது’ என்று கூறும் தவிசாளர், இந்த வழக்குத் தொடர்பில் நீதிமன்றம் தன்னை அழைக்கவில்லை எனவும், எனினும் தான் வழக்கில் முன்னிலையாவதற்கான ஆர்வத்தை கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

#கடிதங்கள் வரவில்லை

தவிசாளர் குறிப்பிடுவதைப் போன்று மருதனார்மடம் சந்தைக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரால், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டு, சுன்னாகம் பிரதேச சபையின் செயலருக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் எவையும் தனக்கு வரவில்லை என்று சுன்னாகம் பிரதேச சபைக்குரிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆர்.கார்தீபன் கூறுகின்றார்.
‘ஒரு பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை இன்னொரு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மேவ முடியாது. இருப்பினும் மே மாதம் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் மருதனார்மடம் சந்தை தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தில் குறைபாடுகள் தொடர்பான விடயங்கள் என்னால் சுட்டிக்காட்டப்பட்டன’ என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
மல்லாகம் நீதிமன்றில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்ட பின்னரே சுன்னாகம் பிரதேச சபையின் செயலரால் 19.11.2020அன்று தனக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அன்றிலிருந்து 08.12.2020 அன்று வரை மருதனார்மடம் சந்தை மற்றும் சுன்னாகம் பொதுச் சந்தை தொடர்பான அறிக்கைகள் அனுப்பப்பட்டதாகவும் கூறுகின்றார். இரண்டு சந்தைகளிலும் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் தானும் பரிந்துரைத்தபோதும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிடுகின்றார்.

#பிடுங்கப்பட்ட அதிகாரங்கள்

“சுன்னாகம் பிரதேச சபைக்குரிய பொதுச் சுகாதாரப் பரிசோதகராக இருந்தபோதும், எனக்கு இருந்த அதிகாரங்கள் பல, 2018ஆம் ஆண்டு சபையை தவிசாளர் பொறுப்பேற்ற பின்னர் பிடுங்கப்பட்டுவிட்டன. வேலையாள்கள் கட்டுப்பாடு கூட மீளப்பெறப்பட்டன” என்கிறார் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கார்தீபன்.

23.11.2020அன்று நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தானும், மருதனார்மடம் சந்தைக்குரிய பொதுச் சுகாதார பரிசோதகரும் பி.ப. 2 மணியளவில் சந்தையில் வைத்து, சுன்னாகம் பிரதேச சபையின் செயலருக்கு அங்கு செய்ய முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை விளக்கமளித்துக் கொண்டிருந்ததாகவும், அங்கு வந்த சபையின் தவிசாளரும் மூன்று உறுப்பினர்களும், பொதுமக்கள், சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முன்னிலையில் தன்னுடன் முரண்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

#கூட்டுப் பொறுப்பு

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள், பிரதேச சபையின் செயலர், பிரதேச சபையின் தவிசாளர் என்று கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய இடத்தில் அது தவறவிடப்பட்டுள்ளது. சந்தையிலுள்ள சுகாதாரக் குறைபாடுகளை சுகாதாரத்துறையினர் உரிய வேளையில் சுட்டிக்காட்டியிருந்தபோதும், உள்ளூராட்சி தரப்பு அதை ஒழுங்காக நடைமுறைப்படுத்தவில்லை. கூட்டுப் பொறுப்புடன் பணியாற்றவேண்டிய அதிகாரிகளிடையேயான இடைவெளியே புதிய கொத்தணியைப் பிறப்பித்திருக்கின்றது

.

#அசிரத்தை

மருதனார்மடம் புதிய சந்தையின் கட்டுமானங்கள் முடிவுற்றும் அது நீண்ட காலம் திறக்கப்படவில்லை. சந்தையில் நெருக்கடியான நிலைமை நிலவியதற்கு இதுவும் காரணம். சந்தை வியாபாரிகள் தொடர்பான விவரங்கள் தெளிவாகவும், துல்லியமாகவும் பிரதேச சபையால் பேணப்பட்டிருக்கவில்லை. குறிப்பாக தம்புள்ள உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்குச் சென்று வரும் வியாபாரிகள் தொடர்பான தரவுகள் பிரதேச சபையிடம் சரிவர இருக்கவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை, அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகியதால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் காட்டப்பட்ட அசிரத்தை என்பனவும் மருதனார்மடம் கொத்தணிக்கு அடிப்படையாக அமைந்து விட்டது.

#செய்வீர்களா?

இந்தக் கொத்தணிக்கான ஆபத்துக்கள் தொடர்பில் போதுமான முன்னெச்சரிக்கைள் விடுக்கப்பட்டும் அது தடுக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ளாது, இந்தக் கொத்தணியைத் தடுக்கத் தவறிய குற்றவாளி அல்லது குற்றவாளிகள் யாவர்? கொத்தணியால் ஏற்பட்டுள்ள இழப்புக்கு பதில் கூறப்போவது யார்? எந்தவொரு பிரச்சினையையும் அரசியல் சாயம் பூசி விடயங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும் பிற்போக்கான மனநிலையிலிருந்து எப்போது வெளியே வரப்போகின்றோம்? வெறுமனே இந்தக் கொத்தணியையும் சாதாரணமாக கடந்து விடப்போகின்றோமா?
மாகாணத்துக்குரிய உள்ளூராட்சி மற்றும் சுகாதாரத்துறையுடன் மாத்திரம் முழுமையாகத் தங்கியுள்ள பொறுப்புக்கூறல் விவகாரத்தில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்? கொரோனாப் பரவலைத் தடுக்க முடியாது என்ற போதிலும் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருந்தும் அதனைத் தவற விட்ட தரப்புகளுக்கு எதிராக நிர்வாக ரீதியாக இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? வடக்கு ஆளுநர் இனியாவது கண் திறந்து மருதனார்மடம் கொத்தணி தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துவாரா?

 

 

Exit mobile version