in , ,

மஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்

ஊடக விளம்பரத்தின் அடிப்படையில் ஆராதனைக் கூட்டத்துக்குச் சென்றவர்களால் தான் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று முன்தினம் (02) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூட்டத்தில், கையில் பத்திரிகை விளம்பரத்தை வைத்திருந்தவாறு தெரிவித்ததாவது:

“நான் நினைக்கின்றேன், நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்படவேண்டும். ஏனெனில் இந்த விளம்பரம் எனது கைகளுக்கு கிடைத்தது. கொரோனா உங்களை நெருங்காது என்று யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் விளம்பரப்படுத்தப்பட்டு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இராசாவின் தோட்டம் யாழ்ப்பாணம் 14, சுதுமலை வீதி – மானிப்பாயில் கூடுமாறு இதன்மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்குதான் கொரோனா வைரஸ்……….(சொல்ல வந்துவிட்டு பிறகு இழுக்கிறார்) ஆராதனைக்கு வருமாறுதான் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம்தான் யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலை (கொரோனா) ஏற்பட்டுள்ளது. பத்திரிகைகளில் இப்படியான விளம்பரங்களை பிரசுரிக்க இடமளிக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்குமாறு வடக்கிலுள்ள உங்களிடம் (யாரையோ பார்த்து…) கோரிக்கை விடுக்கின்றேன். இதன் உரிமையாளர் யாரென எனக்குத் தெரியாது” என்றார் பிரதமர் மஹிந்த.

ஆசிரியர் குறிப்பு:

அவர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை என்று குறிப்பிட்டது ‘உதயனைத்தான்’. பிரதமரின் கையில் இருந்த விளம்பர ‘கட்டிங்’ உதயன் பத்திரிகையில் மார்ச் மாதம் 15ம் திகதி வெளிவந்ததுதான்.

  • 1. இந்த விளம்பரத்தின் அடிப்படையில் கூட்டப்பட்ட கூட்டத்தின் ஊடாகவே யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவியது என்று நாட்டின் உயர் பதவியான பிரதமர் பதவியில் அமர்ந்திருந்து கொண்டு மஹிந்த ராஜபக்ச கூறுகின்றார். விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பது அசெம்பிளி ஒவ் கோட் என்ற சபை. கொரோனா வைரஸ் பரவ காரணமாக அமைந்த அரியாலைக் கூட்டத்தை நடத்திய பிலதெல்பியா சபை. இரண்டும் வேறு வேறானவை. விளம்பரத்தில் ஆராதனை நடக்க இருப்பதாகச் சொல்லப்பட்ட பகுதி இராசாவின் தோட்டம். ஆனால் சுவிஸ் போதகர் ஆராதனை நடத்தியதோ அரியாலை, செம்மணியில். ஆகவே அதுவும் இதுவும் வேறு வேறு என்பது இது சிறு குழந்தைக்கும் புரியும். அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட, அதுவும் இரண்டு தடவைகள் ஜனாதிபதி பதவி வகித்த மஹிந்தவுக்கு இது தெரியாமல் – புரியாமல் – விளங்காமல் போனது அதிசயத்திலும் அதிசயமே.
  • 2. பத்திரிகையில் விளம்பரத்தை பிரசுரிப்பதற்கு குறித்த சபையினர் கையளித்தபோது, ‘அனுமதி இலவசம்’ எனக் குறிப்பிட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பது குறித்துச் சபையினருக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, மதபோதகர்கள் மட்டுமே ஆராதனையை நடத்துவார்கள் எனவும், தமது கூட்டத்துக்கு மக்கள் கூடமாட்டார்கள் என்றும் உறுதிமொழி குறித்த சபையினரால் வழங்கப்பட்டது. அந்த அடிப்படையிலேயே விளம்பரம் பிரசுரத்துக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • 3. எனினும் பின்னர் அந்தச் சபையின் ஆராதனை யாழ்ப்பாண பிரதேச செயலர் சா.சுதர்சனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பொலிஸார், சுகாதார அதிகாரிகள், பிரதேச செயலர் இணைந்து மேற்படி நிகழ்வைத் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பான செய்தியும் மார்ச் மாதம் 17ஆம் திகதி உதயன் பத்திரிகையில் பிரசுரமானது.
  • 4. உதயன் பத்திரிகையில் அந்த விளம்பரம் பிரசுரிக்கப்பட்டமையால் தான்- அதனை அதிகாரிகள் உதயன் மூலம் அறிந்து – அது தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவக் காரணமாக பிலதெல்பியா தேவாலய ஆராதனை நிகழ்வு எந்தவொரு ஊடகங்களிலும் பிரசுரிக்கப்படவில்லை. அதனால் அதனை எவராலும் தடுக்கவும் முடியவில்லை. எந்தவொரு விளம்பரங்களும் இல்லாமல் நடத்தப்பட்ட ஆராதனைக் கூட்டத்தாலேயே, யாழ்ப்பாணத்துக்கு கொரோனா வந்து சேர்ந்தது. இது தெரியாமல், நாட்டின் பிரதமர் ‘வடிவேலு’ தனமாக வாய்க்கு வந்ததையெல்லாம் அடித்து விடுவது அந்தப் பதவிக்கு பொருத்தமற்றது.
  • 5. பெப்ரவரி மாதத்திலிருந்து நாட்டுக்கு வரும் பயணிகள் அனைவரும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றார்கள். அப்படியிருக்கையில் காய்ச்சலுடன் சுவிஸ் போதகர் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு வந்து, கொரோனா வைரஸ் தாக்கத்துடன் நாட்டை விட்டு விமான நிலையம் ஊடாக வெளியேற அனுமதித்தது யார்?. இந்த விடயத்தில் மஹிந்தவின் அரசே யாழ்ப்பாண மக்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டும்.
  • 6. வடக்கில் மூலை முடுக்கெங்கிலும் நடக்கும் எந்த நிகழ்வானாலும் மோப்பம் பிடிக்கும் புலனாய்வுத்துறையினர் இப்படியொரு நிகழ்வு நடந்திருப்பதை அறிந்திருக்கவில்லையா?. அந்த நிகழ்வை தலைமை தாங்கி நடத்துபவர் சுவிஸிலிருந்து வந்திருந்தவர் என்ற தகவல் அவர்களுக்கு கிடைக்கவில்லையா?. மார்ச் மாதம் ஆரம்பத்திலிருந்து வெளிநாட்டிலிருந்து வருபவர்கள், வந்தவர்கள் தம்மைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலைமை இருந்தும் அதைச் செய்யாத மதபோதகரைக் கைது செய்யாமல் தடுத்தது யார்?. அவரைக் கைது செய்திருந்தால், யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவும் நிலைமை ஏற்பட்டிருக்குமா?. அவரைப் பத்திரமாக சுவிஸுக்கு அனுப்பி வைத்தது யார்?
  • 7. அண்மைக் காலமாக உதயனில் வெளியான விளம்பரத்தை அரியாலை சம்பவத்துடன் இணைத்து உதயன் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு சேறு பூசப்பட்டு வந்தது. இந்த அபாண்டமான சேறு பூசலின் பின்னணியில் இருப்பது யார் இருப்பது என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்து விட்டது.
  • 8. 35 ஆண்டுகளாகத் தமிழ்த் தேசியப் பாதையில் தடம் மாறாது பயணிக்கும் உதயனின் குரல் வளையை நசுக்குவதற்கு சாம, தான, பேத, தண்ட வழிகளையெல்லாம் பேரினவாத அரசும் அதன் புல்லுருவிகளும், ஒட்டுக்குழுவினரும் இன்றளவும் ஏவிக் கொண்டே இருக்கின்றார்கள். ஆனால், அவர்களின் அத்தனை முயற்சிகளும் உதயனை புடம்போட்டு உரமேற்றி தமிழ்த் தேசியக் குரலை இன்னமும் உயர்த்தும் ஓர்மத்தையே தந்துள்ளன. இனியும் தரும்.
  • 9. மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகின்றவர்களுக்கு உதயன் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”

வேல்ட் விசனால் மக்களுக்கு உலருணவு

படம்காட்டும் அரசியல்வாதிக எச்சரித்த மஹிந்த