in ,

மாற்­று­வ­ழி­களே தேவை!!! |வெள்ளிக்கிழமை|22.01.2021|

ஆசிரியர் தலையங்கம்

ராஜ­பக்­சக்­க­ளின் அதீத அதி­கா­ரப் பலம் கொண்ட ஆட்­சி­யின் செயற்­பா­டு­கள் அனைத்­துமே தேசிய ரீதி­யி­லும், சர்­வ­தேச ரீதி­யி­லும் மிக­வும் கடு­மை­யான விமர்­ச­னப் பார்­வைக்­குட்­ப­டத் தொடங்­கி­யுள்­ளன. இதனை அண்­மைக்­கா­ல­மாக வெளி­வந்து கொண்­டி­ருக்­கும் உல­கச் செய்­தி­கள் உறு­தி­செய்து வரு­கின்­றன.

மார்ச் மாதம் ஐ.நா மனித உரி­மைப் பேர­வை­யில் இலங்கை தொடர்­பான விட­யங்­கள் விவா­தத்­துக்கு எடுத்­துக்கொள்­ளப்­ப­டும்போது, அதனை எவ்­வாறு எதிர்­கொண்டு சமா­ளிப்­பது என்­பது தொடர்­பா­கப் பல தரப்­பி­ன­ரா­லும் தீவி­ர­மான கருத்­தா­டல்­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அத்­த­கைய சூழ­லில்­கூட அரசு நாட்­டின் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரா­ன­தும் பேரி­ன­வாத மேலா­திக்க சிந்­த­னை­யின் பாற்­பட்­ட­து­மான, புதிய அர­சி­யல் நகர்­வு­களை தீவி­ர­மா­க­வும் தொடர்ச்­சி­யா­க­வும் முன்­னெ­டுக்­கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

மனித உரி­மை­கள் தொடர்­பான சர்­வ­தேச சமூ­கத்­தின் கண்­ட­னங்­க­ளையோ, கோரிக்­கை­க­ளையோ இலங்கை அரசு சிறி­த­ள­வே­னும் கவ­னத்­திற்கொள்­வ­தாக இல்லை என்ற செய்­தி­யையே இந்த நட­வ­டிக்­கை­கள் உணர்த்­து­கின்­றன.

இது அர­சின் எதிர்­கால வலு­வான இருப்­புக்­கும், உறு­தித்­தன்­மைக்­கும் ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. எனி­னும் அரசு சிறு­பான்­மைச் சமூ­கத்­த­வர் தொடர்­பான இன, மத, மொழி விரோ­தக் கொள்­கை­க­ளில் இருந்து சிறி­த­ள­வே­னும்­கூட விட்­டுக்­கொ­டுக்­கத் தயா­ரில்லை என்­ப­தையே இத்­த­கைய நகர்­வு­கள் உறுதிசெய்­கின்­றன.

நீதி, நியா­யம், நல்­லி­ணக்­கம், சுமு­க­மான தீர்வு போன்ற சொற்­கள் அர­சின் பௌத்த தர்­மக் கோட்­பா­டு­க­ளுக்கு ஒவ்­வா­மையை ஏற்­ப­டுத்­தும் வகை­யி­லா­ன­வையோ தெரி­ய­வில்லை. அரசு அது குறித்து எந்­தச் சிந்­த­னை­யும் மன­தில் கொண்­டி­ருப்­ப­தா­க­வும் புலப்­ப­ட­வில்லை.

நீண்டகால­மா­கத் தேசிய ரீதி­யில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ராஜ­பக்ச அரசு மூலம் எந்த வகை­யி­லும், நீதி கிடைக்க வாய்ப்பு இல்லை என்ற அடிப்­ப­டை­யி­லேயே மாற்­றுக் கொள்­கை­களுக்­கான நிலை­யத்­தின் கருத்து அமைந்­துள்­ளது என்றே கூற முடி­யும். நல்­லி­ணக்­கம், பொறுப்­புக் கூறல், மனித உரி­மை­கள் தொடர்­பான விட­யங்­கள் போன்­ற­வற்­றில் இருந்து வில­கிக் கொண்டு, பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடி­யும் என்று அரசு எண்­ணி­னால், அது தனது அதி­கார வலு­வைப் பயன்­ப­டுத்தி ஒரு சர்­வா­தி­கா­ரத்­தன ஆட்­சிக்கு தயா­ரா­கு­கின்­றது என்றே அர்த்­தப்­ப­டும்.

ஏற்­க­னவே இலங்­கை­யில் ஏகப்­பட்ட பிரச்­சி­னை­கள். அவற்­றுக்­கெல்­லாம் முகங்­கொ­டுத்து, தீர்வுகாணு­மாறு பல தரப்­பு­க­ளும் வலி­யு­றுத்தி வரு­கின்­றன. இத்­த­கைய சூழ்­நி­லை­யில், ஆட்­சிப் பீடத்­தில் அமர்ந்­தி­ருப்­ப­வர்­க­ளின் நகர்­வு­கள் மேலும் புதி­ய­பு­திய பிரச்­சி­னை­க­ளையே உரு­வாக்­கு­கின்­றன.

இதன் மூலம், தமது பேரி­ன­வா­தச் சிந்­த­னை­க­ளுக்கு அதி­கா­ரத் தரப்பு வலுச்­சேர்க்க முனை­வது வெளிப்­படை. அத்­தோடு இத்­த­கைய சிக்­க­லான நகர்­வு­க­ளால் அரசு சிறு­பான்மை சமூ­கத்­த­வ­ரின் நீதிக்­கான குரலை மேலும்­மே­லும் உதா­சீ­னம் செய்­கின்­றது.

குறிப்­பாக அர­சின் மறை­மு­கத் தலை­யீடு மற்­றும் மறை­கர அழுத்­தங்­கள் என்­பன நீதி நிர்­வா­கத்­து­றை­யின் சுயா­தீ­னச் செயற்­பாட்­டுக்கு நெருக்­க­டி­களை கொடுப்­ப­னவாக பல தரப்­பி­ன­ரா­லும் வெளிப்­ப­டை­யா­கவே சந்­தே­கம் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்­தச் சூழ்­நி­லை­யில் சிறு­பான்­மை­யி­ன­ரின் பிரச்­சி­னைக்கு, நீதி­யான தீர்­வி­னைக் காணும் முயற்­சி­கள் பார­பட்­ச­மற்ற முறை­யில் முன்­னெ­டுப்­ப­தென்­பது சாத்­தி­ய­மில்லை.

நாடா­ளு­மன்­றத்­தில் அல்­லது சர்­வ­தேச விசா­ரணை அமர்­வு­களில் குரல் கொடுப்­ப­தன் மூல­மும், அறிக்­கை­கள் சமர்ப்­பிப்­ப­தன் மூல­மும் முன்­வைக்­கப்­ப­டும் நீதிக்­கான கோரிக்­கை­கள் எவையும் தீர்­வு­க­ளைப் பெற்­றுத் தரப்­போ­வ­தில்லை. அப்­ப­டிப் பெற்­றுத்­தந்­தா­லும் அது அர்த்­த­மும் ஆரோக்­கி­ய­மா­ன­தும் மனித உரி­மை­க­ளின் மனித நேயத்­தின் அடிப்­ப­டை­யி­லா­ன­து­மான தீர்­வாக இருக்­காது.

அனைத்­துப் பிரச்­சி­னை­கள் தொடர்­பா­ன­து­மான பேச்­சுக்­கள், அதி­கா­ரப் பொறி­மு­றை­கள், விவா­தங்­கள், சர்­வ­தேச சபை அமர்­வு­கள் என அனைத்­துமே வெறு­மனே சம்­பி­ர­தாயபூர்­வ­மா­ன­வை­யா­கத் தொடர்ந்­தும் இருக்­கு­மெ­னில்…. அதற்­கான மாற்று வழி குறித்­துத் தீர்க்­க­மாக யோசிக்க வேண்­டும். இல்லா­வி­டில் பிரச்­சி­னை­கள் யாவும் எக்­கா­லத்­தி­லும் தீர்க்­கப்­ப­டாத வெறும் பேசு­பொ­ரு­ளாக மட்­டுமே இருக்­கும்.

சர்வமும் படைமயம்? | புதன்கிழமை | 20.01.2021 |

வவுனியா மருத்துவமனை ஊழியர்களுக்கும் கொரோனாத் தொற்று!!