கட்டுரைகள் சிறப்புக் கட்டுரை

முடிவு எடுத்தல் ஒரு துணிவு!

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் மாசிடோனியாவை ஆண்ட மன்னர் பிலிப். அவர் ஒரு நாள் குதிரையேற்றம் பார்க்கப் புறப்பட்டார்.  “”அப்பா, குதிரையேற்றம் என்றால் என்ன?” என்றார் மகன். “”தெஸ்ஸாலி நாட்டை சேர்ந்த பியூசிபேலஸ் என்ற குதிரையை நம் வீரர்கள் அடக்கப் போகிறார்கள். அதுதான் குதிரையேற்றம்” என்றார் தந்தை. “”நானும் தங்களுடன் கண்டிப்பாக வருவேன்” என்று அடம்பிடித்த மகனை அழைத்துச் சென்றார் தந்தை. 

குதிரையை அடக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. எவராலும் அந்தக் குதிரையை அடக்க முடியவில்லை. நிகழ்சியை அந்தச் சிறுவன்  கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். மாசிடோனியாவில் துணிச்சலும், வீரமும் கொண்ட வீரர்கள் ஒருவர் கூட இல்லையா? என்று ஏளனம் பேசினான் குதிரைக்குச் சொந்தக்காரன். இதைக் கேட்டதும், சிறுவனின் வீர மனதில் ஓர் உறுத்தல். மன்னரின் மகனாயிருந்ததால், குதிரையில் ஏறிய அனுபவம் அவனை தூண்டியது. “”அப்பா, இந்த குதிரையை நான் அடக்குகிறேன். அதற்கு தங்களின் அனுமதி வேண்டும்” என்றான். “”நீ சிறுவன், உன்னால் இந்தக் குதிரையை அடக்க முடியுமா?” என்றார் தந்தை. “”என்னால் நிச்சயமாக முடியும்” என்று சொல்லிவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தான் சிறுவன். மகனின் துணிச்சலைக் கண்டு உள்ளூர மகிழ்ந்த தந்தை, “”சரி, களத்தில் இறங்கி குதிரையை அடக்கு. நீ இந்த குதிரையை அடக்கிவிட்டால், அதையே உனக்கு பரிசாக வாங்கித் தருகிறேன்” என்று மகனை உற்சாகப்படுத்தி அனுப்பினார்.  

களமிறங்கியதும், குதிரையின் முகத்தை மெதுவாக தடவிக் கொடுத்தான். குதிரையை ஒருமுறை வலம் வந்தான். குதிரையை அது நின்று கொண்டிருந்த திசைக்கு எதிர்திசையில் திருப்பினான். குதிரை அமைதியாகவே நின்று கொண்டிருந்தது. இதையெல்லாம் மக்கள் கூட்டம் அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தது. குதிரையை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தபோதே, தடாலடியாக ஒரே தாவலில் குதிரையின் மீது ஏறி அமர்ந்தான். குதிரையின் சேணைக்கயிற்றை லாவகமாகப் பிடித்து, அதை விரட்டினான். சிறுவனுக்கு கட்டுப்பட்டு குதிரையும்  குதூகலமாக ஓடியது. கம்பீரமாக மைதானத்தை ஒரு முறை வலம் வந்தான். இதைப் பார்த்து மாசிடோனிய மக்கள் ஆரவாரத்தில் துள்ளிக் குதித்தனர். துணிச்சலான அந்த சிறுவனை தூக்கி வைத்துப் பாராட்டினர். தன் மகனின் துணிச்சலுக்கு பரிசாக “பியூசிபேலஸ்’ என்ற அந்த குதிரையை  உடனே பரிசாக வாங்கிக் கொடுத்தார். 

“”இந்தக் குதிரையை எப்படி அடக்கினாய்?” என்று வியப்படைந்து கேட்டார் தந்தை. “”சூரிய ஒளியால் குதிரையின் கண்கள் கூசிக் கொண்டிருந்தன. அதனால்தான் குதிரை கோபத்தில் துள்ளிக் குதித்தது. அப்போது ஒரு முடிவெடுத்தேன். அதன்படி குதிரை நின்று கொண்டிருந்த திசையை மாற்றி நிற்க வைத்தேன். பின்னர் அதன் மீது ஏறினேன்” என்றான் சிறுவன்.  இந்த துணிச்சலான முடிவை எடுத்த சிறுவன்தான் “எப்பொழுது நீங்கள் புதிய, தீர்க்கமான, உறுதியான முடிவெடுக்கிறீர்களோ, அப்பொழுது உங்கள் வாழ்க்கை மாற்றமடையும்’ என்ற டோனி ராபின்ஸ் என்னும் அமெரிக்க எழுத்தாளரின் வரிகளுக்கேற்ப பின்னாளில் உலகம் போற்றும் மாவீரன் அலெக்ஸாண்டரானார்.

“வாழ்க்கை என்பது நிறைய வாய்ப்புகளைக் கொண்டது. அதில் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவரது வாழ்வை நிர்ணயிக்கும்’ என்ற ஜான் சி. மேக்ஸ்வெல் என்பவரின் வரிகளுக்கேற்ப  வாய்ப்பினை நழுவவிடுதலும், பிறருக்கு வழங்கிவிடுதலும் குரங்கு கையில் ரொட்டியைத் தந்த பூனைகள் போலாகிவிடும்.

பூனைகள் இரண்டு, ஒரு வீட்டிலிருந்து ரொட்டித் துண்டை எடுத்து வந்தன. அதை இரண்டாகப் பிரித்த போது ஒரு துண்டு பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் இருந்தது. இதில் பெரிய துண்டினை யார் வைத்துக்கொள்வது? என முடிவில்லாமல் இரண்டு பூனைகளும் சண்டையிட்டன. இப்பிரச்னைக்கு முடிவு காண, ஒரு குரங்கிடம் சென்றன. குரங்கு தீர்வு காண, முதலில் சற்று பெரிதான துண்டைக் கடித்து சாப்பிட்டது. இரண்டும் சரிசமமாக இல்லை. இப்போது  கடிபட்ட ரொட்டித்  துண்டு மற்ற ரொட்டித் துண்டை விட சிறியதாகி போனது. இதைச் சமப்படுத்த இரண்டாவது ரொட்டித் துண்டைக் கடித்தது. அது இப்போது முதல் ரொட்டித் துண்டை விட சிறியதாகி போனது.  மாறி மாறி சாப்பிட்டு கடைசியில் முழு ரொட்டியையும் குரங்கு சாப்பிட்டு  முடித்தது. இப்பொழுது இரண்டு பூனைகளும் ஏமாற்றத்துடன் சென்றன. முடிவுகள் நமக்கு கிடைத்த வாய்ப்பு. தான் எடுக்க வேண்டிய முடிவினை மற்றவர் இடத்தில் விட்டுவிடுபவர் வாழ்க்கை முழுவதும் ஏமாற்றத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பார். 

“நமது எதிர்காலம் ஆச்சரியங்கள் நிறைந்தது. எனவே, நடக்க இருக்கும் நிகழ்வுகளை சரி வர உள்வாங்கி பொருத்தமான முடிவுகளை எடுக்கத் தெரியாதவர்கள், விழி இழந்தவர்கள் யானையை அடையாளங் கண்டதற்கு ஒப்பானதாகும்’ என்கிறார் மேலாண்மையியல் பேராசிரியர் ஆலன் ரோவ். 

முடிவெடுப்பது ஒரு கலை. அது ஓர் அசாத்தியமான பண்பு. முடிவெடுக்காத வாழ்க்கை இயங்குவதில்லை. முடிவெடுப்பதில் மட்டுமே வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்  அழகாகவும், வேகமாகவும் இயங்குகிறது. அதிகாலை எழுவது முதல் அன்றிரவு தூங்கும் வரை, ஒருவர் எடுக்கும் முடிவு தான் அவரை நிர்ணயிக்கிறது. விரைவாக முடிவெடுத்து பழகுகின்றவருக்கு, இந்த உலகம் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளத் தயாராக இருக்கிறது. தோல்வியாளர்கள் அன்றைய சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கிறார்கள். வெற்றியாளர்கள் தாங்கள் அடைய வேண்டிய இலட்சியத்திற்காக முடிவெடுக்கிறார்கள்.

1893ஆம் ஆண்டு மே மாதம், ஒரு வழக்கு தொடர்பாக, தென்ஆப்பிரிக்காவில் உள்ள டர்பனிலிருந்து  பிரிட்டோரியாவுக்கு புறப்பட்டார் காந்தி. இரயிலில் முதல் வகுப்பில் பயணிப்பதற்கான பயணச் சீட்டை வைத்திருந்தார். இரவு ஒன்பது மணியளவில் அவர் சென்ற இரயில்  மாரிட்ஸ்பர்க் என்னு நகரினை அடைந்தது. அப்போது இரயிலில் வந்த பரிசோதனை அதிகாரி, காந்தியை பொருட்கள் ஏற்றி வரும் இரயில் பெட்டிக்கு போகச் சொன்னார். அதற்கு காந்தி “”என்னிடம் முதல் வகுப்பு பயணச் சீட்டு உள்ளதே” என்றார். ஆனாலும் நிறவெறியில் ஊறிப்போன ஒரு வெள்ளையன் அவரை தன்னுடன் பயணிக்கக் கூடாது எனக் கூறியதால் அதிகாரி மிகவும் பிடிவாதமாய் இருந்தார். காந்தி மறுக்கவே, ஒரு போலீஸ்காரரை அழைத்து காந்தியை அவரது  பெட்டிகளோடு இரயில் பெட்டியிலிருந்து தூக்கி எறிந்தார். தூக்கியெறியப்பட்ட வேதனை ஒரு பக்கம். கடுங்குளிர் மறுபக்கம். இரயிலும் புறப்பட்டுப் போனது. ஊர் புதிது. நள்ளிரவு. துணையென்று எவருமில்லை. அடுத்து என்ன செய்வது? என சிந்தித்தார். வெள்ளையனிடம் பெற்ற அவமானத்தோடு இந்தியாவிற்கு திரும்புவதா? அல்லது நிறவெறிக்கு எதிராக போராடுவதா? என நெடுநேரம் யோசித்தார்.அதே இரவில் விடியலாக துணிந்து ஒரு முடிவெடுத்தார். ஆம்! போராடுவது என முடிவு எடுத்தார். அடுத்த தொடர் வண்டியில் பிரிட்டோரியாவுக்கு முன்னேறினார்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

என்ற வள்ளுவரின் வரிகளுக்கேற்ப அன்று துணிவாக எடுத்த முடிவினால்தான் இரயில் பெட்டியிலிருந்து தூக்கி எறிந்த வெள்ளையரை, நம் மகாத்மாவால்  இந்திய மண்ணிலிருந்து  தூக்கி எறிய முடிந்தது.

ஒவ்வொரு செயலுக்கும் கிரிக்கெட் பந்தினைப் போல இரண்டு விளைவுகள் இருக்கும். ஒன்று ஆட்டக்காரரை தோற்கச் செய்யும் , அல்லது ரன் எடுக்க உதவும். பந்து வீச்சாளரின் கையிலிருந்து ஆட்டக்காரர் அதை தடுத்தாட எடுக்கும் நேரம் தோராயமாக ஒரு விநாடிக்கும் குறைந்த நேரம் ஆகும். இக்குறுகிய  நேரத்தில் அப்பந்தினை  சரியாக கணித்து ஆடினால், ஒரு ரன் முதல் ஆறு ரன் வரை எடுக்க முடியும். கணிக்கத் தவறினால் ஆவுட் ஆவதைத் தவிர வேறு வழியில்லை. கிரிக்கெட் விளையாட்டினை உலகம் ஆர்வத்தோடு பார்க்கின்றது.  காரணம், பிரச்னை என்னும் ஒரு பந்து ஒரு மனிதனை நோக்கி வருகின்றது. அந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத அளவிற்கு பதினோரு பேர் சுற்றி இருக்கிறார்கள். இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையில் ஒருவர் அதை எப்படி கையாள்கிறார்? என்பதையும், ஒவ்வொரு, பந்துக்கும் அவர் எடுக்கின்ற முடிவுகளால் ஏற்படும் விளைவை  அறிந்து கொள்வதற்குத்தான் அவ்வரங்கத்தில் பத்தாயிரம் பேர்களும், பெரிய திரைகளில் லட்சக்கணக்கிலும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, ஒவ்வொரு பந்தினைப்போல், ஒவ்வொரு செயலுக்கும் சரியாக முடிவெடுப்பவரே ஆட்ட நாயகனாவதைப் போல் உலக நாயகனாகின்றார்.  

1917இல் ரஷ்யப் புரட்சியின் வெற்றியடைந்தது. தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, தொழிற்சாலையையே நிர்வாகம் செய்யும் பொறுப்பு தரப்பட்டது. தொழிலாளர்களே முதலாளிகளானார்கள். ஆனால் அவர்கள் மாமேதை லெனினிடம் எங்களுக்கு நிர்வாகம் செய்வதில் முன் அனுபவம் இல்லை என முறையிட்டனர்.  அப்போது லெனின், “நல்ல முடிவுகள் அனுபவத்தால் வரும்; அனுபவங்கள் சரியில்லாத  முடிவுகளால் கிடைக்கும்’ என்பதை அறிந்து  “”தெரியாததை தெரிந்து கொள்வோம்; தவறுகளைத் திருத்திக் கொள்வோம்” என்று அவர்களுக்கு கூறினார். அதன்படி தொழிலாளிகள் முடிவெடுக்கத் தொடங்கினர். சிறந்த முதலாளிகளானார்கள். ஒரு மலைப்பாங்கான கிராமம். தவத்தில் சிறந்த ஞானி ஒருவர் வருகை தந்தார். ஞான திருஷ்டியின் மகிமையால் அவரைக் காண வந்த ஒவ்வொருவருக்கும், பின்னாளில் நடக்கவிருப்பதைத் தெரிவித்தார். அனைவரும் அதைக் கேட்டு மகிழ்ந்தனர். இதனையறிந்த அந்த கிராமத்து சிறுவன் ஒருவன் முனிவர் முன் வந்து நின்றான். அவனது வலது கை மட்டும் மூடி இருந்தது. “”சுவாமி! எனது  கையில் என்ன இருக்கிறது?” என்று சிறுவன் கேட்டான். அச்சிறுவனிடம், “”குழந்தாய்!  உனது கையில் ஓர் உயிர் இருக்கிறது” என்று கண்ணை மூடியவாரே கூறினார் முனிவர். சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம், அவன் கைக்குள் இருந்த சிறு புழுவினை எப்படி முனிவர் கண்டுபிடித்தார்? என ஆச்சரியப்பட்டான். மீண்டும் முனிவரிடம், “”அந்த புழு உயிருடன் இருக்கிறதா? இறந்துவிட்டதா?” என கேட்டான். ஒரு கணம் யோசித்துவிட்டு “அது உன் கையில் தான் இருக்கிறது என்றார் முனிவர். கூடியிருந்தவர்கள் எல்லாம் குழப்பத்தோடு முனிவரைப் பார்த்தனர். “”ஏன் சுவாமி! ஒன்று உயிரோடு இருக்கிறது என்று சொல்லுங்கள், இல்லையெனில் உயிரில்லை என்று சொல்லுங்கள். ஏன் பொதுவான பதிலைச் சொல்கிறீர்கள்?” என்றனர். அதற்கு முனிவர்,  “”ஐயன்மீர்! நான் அச்சிறுவனின் கையில் இருக்கின்ற புழுவினை, உயிரோடு இருக்கிறது என்று சொன்னால், அவன் அப்புழுவை தனது கைக்குள்ளே நசுக்கி உயிரற்றதாக்கிவிடுவான். அப்போது என் வாக்கு பொய்யாகிவிடும். அதே நேரத்தில் அது உயிரற்றதாக இருக்கிறது என்று சொன்னால், அப்புழுவினை நசுக்காமல் அப்படியே  உயிரோடு என்னிடம் காட்டியிருப்பான். அதனால் தான் அந்த புழுவின் வாழ்க்கை உன்னிடம் இருக்கிறது என கூறினேன்” என்றார். கண்ணுக்கெதிரே உள்ள செயல்பாடு புதிராக இருந்தால், புத்திசாலித்தனமே சரியான முடிவெடுக்கும். முடிவெடுப்பதை தள்ளிப் போடுபவர்கள் தோல்விக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவ்வப்போது முடிவெடுப்பவர்கள் வாழ்க்கையில் சாதாரணமாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அடிக்கடி முடிவெடுப்பவர்கள் சிறந்த மனிதர்கள். விரைவில் நல்ல முடிவுகளை எடுப்பவர்கள் வாழ்வின் இலட்சியவாதி. எல்லா முடிவுகளும் நல்ல சிந்தனையாலும் சமூகத்தினுடைய வளர்ச்சிக்காகவும் இருக்கின்றபோது அந்த முடிவு வரலாற்றில் தடம் பதிக்கின்றது.

மகாபாரத யுத்தம் தொடங்குவதற்கு முன்னர், பாண்டவர்களும் கெüரவர்களும் ஆயத்தமானர்கள். துரியோதனன் தனது நட்பு நாட்டு மன்னர்களுக்கெல்லாம் தூது அனுப்பி தனது படையை வலிமையாக்கினார். பாண்டவர்களும் தங்களது படையைப் பெருக்கினார்கள். இரு சாரரும் பகவான் கிருஷ்ணரின் துணையை நாடவேண்டும் என தீர்மானித்தனர். துரியோதனனும், அர்ச்சுனனும் துவாரகையிலிருந்த கண்ணனைப் பார்க்க வந்தனர். கண்ணன் கண்களை மூடி படுத்திருந்தார். துரியோதனன் கண்ணன் தலையருகே இருந்த ஆசனத்தில் அமர்ந்தார். அர்ச்சுனன் கண்ணன் காலருகே இருந்த ஆசனத்தில் அமர்ந்தார். கண்ணன் கண்விழித்ததும், இருவரிடமும் வந்த நோக்கத்தைக் கேட்டார். இருவரும் பாரதப் போரில் கண்ணனின் உதவி தேவை என்றனர். 

அதற்கு கண்ணன், “”நீங்கள் இருவருமே வேண்டியவர்கள்தான். ஆகையால் எனது படைவீரர்கள்  அனைவரையும் தரட்டுமா? அல்லது நான் ஒருவனே துணையாக வரட்டுமா? நான் போரில் ஆயுதத்தை கையில் தொடமாட்டேன். இந்த இரு துணையில் எது வேண்டும்?” என்று முதல் வாய்ப்பாக துரியோதனிடம் கேட்டார்.  “”கண்ணா!  உன் படைவீரர்கள் அனைவரையும் தந்தால் போதுமானது” என்றார் துரியோதனன்.  “”பரந்தாமா!  நீ எங்களுக்கு துணையாக இருந்தாலே போதும். உன் துணையிருந்தால்  நாங்கள் வெற்றிபெறுவது உறுதி. எங்கே துரியோதனன் தங்களை துணையாக கேட்டுவிடுவானோ என்று அஞ்சினேன். நல்லவேளை அவன் உன்னை கேட்காமல், உனது படையை மட்டும் கேட்டான்” என்றார் அர்ச்சுனன். 

வெறும் எண்ணிக்கையை மட்டும் தேர்வு செய்ததால் துரியோதனன் மகாபாரத போரில் தோற்றான். சரியான தேர்வினைச் செய்யாவிட்டால் எத்தனை துணையிருந்தும் தோல்வியடைவார்கள் என்பதற்கு துரியோதனன் ஓர் எடுத்துக்காட்டு.      

முடிவெடுத்தல், ஒரு துணிவு! சிறந்த முடிவே,  வரலாறு!

Related posts

காட்டுமிராண்டித் தனத்தின் கூடம் அல்ல பல்கலைக்கழகம்!

Tharani

மார்ச்சில் விடிவு கிடைக்குமா?.

G. Pragas

நன்றி… ஓர் அழகான வீரம்!

Tharani