கட்டுரைகள் சிறப்புக் கட்டுரை

முண்டாசுக்கவி பாரதி – (சிறப்புக் கட்டுரை)

கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி என்றெல்லாம் பன்முக ஆளுமை கொண்ட புரட்சியாளன் பாரதி.

தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவு கடந்த பற்றுக் கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றிப் பாடினார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் தேசிய கவியாக போற்றப்பட்டவர். மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் விபரிக்க முடியாதவை.

டிசம்பர் 11, 1882இல் சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் அவர் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமை பெற்றுத் திகழ்ந்தார்.

சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ்மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தன. ஏழு வயதில் பாடசாலையில் படித்துவரும் பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு ‘பாரதி’ என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் ‘சுப்பிரமணிய பாரதியார்’ என அழைக்கப்பட்டார். பாரதியார் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவைக் கவிஞராக பணியாற்றினார்.

‘மீசைக் கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமை பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிபெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திசூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப்பட்டன.

சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் வீறுகொள்ளச் செய்தன. பாரதியார் பத்திரிகையின் மூலம் மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி ‘இந்தியா பத்திரிக்கைக்கு’ தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி தேசிய கவியாக அனைவராலும் போற்றப்பட்டார்.

எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

பாரதியை மக்கள் கவி, மானுடம் பாட வந்த மாகவி, புது நெறி காட்டிய புலவன்,பல்துறை அறிஞர், புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில், தமிழின் கவிதை மற்றும் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர் என்றெல்லாம் புகழ்கின்றனர். உலக தமிழர் நாவில் மக்கள் கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது .நவீன தமிழ்க் கவிதைகளுக்கு முன்னோடி அவர்.

தமிழ், தமிழர் நலன், பெண் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே தன் கவிதையால் உரக்கக் குரல் கொடுத்தவர் அவர். மகாகவி சுப்ரமணிய பாரதியார் ஒரு கவிஞனாக மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், நல்ல பத்திரிகையாசிரிராகவும் இருந்தவர்.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று பெண்ணுரிமைக்காக பாடியவரும் இவர்தான். “சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்று தீண்டாமை ஒழிப்பு குறித்து பாடியவரும் இவர்தான்.

திருநெல்வேலியில் உள்ள இந்து கல்லூரியில் 9 ஆம் வகுப்பு வரை படித்த பாரதியார், அப்போதே தமிழ் அறிஞர்களோடும், பண்டிதர்களோடும் சொற்போரில் சுதந்திரமாக ஈடுபட்டார். அதனால் அவரின் தமிழ்ப் புலமை மேலும் அதிகரித்தது.

காசிக்கு சென்று அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருத மொழியையும், இந்தி மொழியையும் கற்றறிந்தார். இது தவிர ஆங்கிலம், வங்காளம் போன்ற பிற மொழிகளிலும் தனிப் புலமை பெற்று விளங்கினார் பாரதியார்.

இத்தனை மொழிகளில் புலமை பெற்றதால் தான், “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தெளிவாகச் சொன்னார் மகாகவி.

4 ஆண்டுகள் காசியில் இருந்துவிட்டு தமிழகம் திரும்பினார் பாரதியார்.அழகிய தமிழ்க் கவிதைகள் பலவற்றிற்கு சொந்தக்காரரான பாரதியாரின் எழுத்துக்கள் முதன்முதலில் 1903ம் ஆண்டு அச்சில் வந்தன. அதன் பிறகு மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.

தன்னுடைய தீராத சுதந்திர தாகத்தை தணிக்க 1905 ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டினார். அதன் பிறகு கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ சிதம்பரம் பிள்ளை போன்றோரோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அதன் பிறகு கல்கத்தாவில் தாதாபாய் நவ்ரோஜி தலைமையில் நடைபெற்ற மகா சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது சுவாமி விவேகானந்தரின் சிஷ்யர் நிவேதிக்கா தேவியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவரிடம் ஆசி பெற்ற பாரதியார், அவரை தம் ஞயான குருவாக ஏற்றுக் கொண்டார்.

1907 ஆம் ஆண்டில் ‘இந்தியா’ என்னும் வார ஏட்டையும் ‘பால பாரதம்’ என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார் பாரதியார்.

அந்த காலகட்டத்தில்தான், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலியின் சபதம் போன்ற அமர கவிதைகள் பலவற்றை இயற்றினார்.

வறுமையில் சில காலம் வாழ்ந்த பாரதியார், 1919 ஆம் ஆண்டு மீண்டும் சென்னைக்கு வந்தார். அப்போது ராஜாஜியின் வீட்டிற்கு ஒரு முறை சென்றபோது அங்கு மகாத்மா காந்தியை சந்தித்தார்.

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம், தான் வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்றார் பாரதியார்.

அங்கு யாரும் எதிர்பாராதவிதமாக அந்த கோயில் யானை அவரை தூக்கி எறிந்தது. அதனால் தலையிலும் கையிலும் அவருக்கு காயங்கள் ஏற்பட்டன. அதனால் அவர் நோய்வாய்ப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு அவர் யானை தந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட போதும் வயிற்றுக் கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். மருந்துகளை உண்ண மறுத்த அவர் தனது 39 வது வயதில், 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

Related posts

மகாஜனாவின் வீராங்கனை சானுவின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்

கதிர்

புதிய ஜனாதிபதி, புதிய சூழல் , தமிழ் மக்கள்…?

Tharani

உலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18

Tharani