செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

மேற்கு நாடுகளால் தொடர்ந்து தமிழர்களுக்கு ஏமாற்றம்தான்! -சாள்ஸ் எம்.பி.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையைக் கையாளுகின்ற நாடுகள், தமிழர் பிரச்சினையில் ஒரு மென்போக்கைக் கடைபிடித்து வருகின்றன. அத்துடன் மேற்குலக நாடுகளும் தமிழர் தரப்பை ஏமாற்றுகின்ற சூழ்நிலைதான் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமை உதவி ஆணையாளர் இலங்கை தொடர்பான பரிந்துரைகளை முன்வைத்துள்ளார். வடக்கு-கிழக்கில் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தால் நீண்ட காலமாக துன்புறுத்தப்பட்ட நிலையில், 2009ஆம் ஆண்டு இனப்படுகொலைகள் தமிழர் தாயகத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

இது தொடர்பில் சர்வதேச நாடுகள் ஊடாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கைத் தமிழர்கள் தமக்கு ஒரு தீர்வு வரும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள் – இருக்கின்றார்கள்.

ஆனால் சர்வதேச நாடுகளை பொறுத்தவரையில், இலங்கையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக அமெரிக்கா போன்ற நாடுகள் தமிழர்களின் விடயங்களை பகடைக்காயாக நகர்த்துகின்றன. சர்வதேச விசாரணை வேண்டும் என்று தொடர்ச்சியாக தாயகம், புலத்தில் இருக்கின்ற சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஒருமித்துக் கோரிக்கை முன்வைத்துள்ள போதும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை கையாளுகின்ற நாடுகள் தமிழர் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மென்போக்கைக் கடைபிடித்து வருகின்றன.

இந்த மென்போக்கை சர்வதேசம் கைவிட்டு, காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – என்றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214