- அ.நிக்ஸன்
உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பௌடி என்ற பிரதேசத்தில் 1958 ஆம் ஆண்டு பிறந்த பிபின் லக்ஸ்மன் சிங் ராவத் (Bipin Laxman Singh Rawat) 1958 ஆம் மார்ச் மாதம் 16ஆம் திகதி பிறந்தார். இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதியாக 2019 ஆம் ஆண்டு பதவியேற்ற இவர், அதற்கு முன்னர் இந்தியாவின் இராணுவத் தளபதியாகவும் பதவி வகித்திருந்தார்.
2017 இல் இருந்து இவர் நேபாளத்துக்கும் படைத் தளபதியாகச் செயற்பட்டு
வருகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம்.ஃபில் பட்டம் வழங்கப்பட்டது. அமெரிக்காவின் ஃபோர்ட்லீவன்வொர்த்தில் உள்ள இராணுவத் தளபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் பிபின் ராவத்
பங்கெடுத்திருந்தவர். 1987 ஆம் ஆண்டு பிபின் ராவத்தின் படை, சும்டொரோங் ச்சூ பள்ளத்தாக்கில் சீன இராணுவத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டது. அன்றில் இருந்து இறக்கும் வரை இந்திய–சீன எல்லையில் இந்திய இராணுவ ஆதிக்கம்
சீனாவுக்குப் பெரும் சவலாகவே இருந்தது. 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம், மணிப்பூரில் மேற்கு தென்கிழக்கு ஆசியாவின் ஐக்கிய விடுதலை முன்னணியால் (United National Liberation Front of Western South East Asia) தாக்கு தலில் 18 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இதனால் பிபின் ராவத் தலைமையில், 21 ஆவது படைப்பிரிவின் பாராசூட் படை மேற்கொண்ட பதிலடியில் இந்திய இராணுவத்தின் இழப்பு ஈடுசெய்யப்பட்டிருந்தது.
காஷ்மீரிலும் இந்திய இராணுவத்தின் பெரும் பலத்தை பாகிஸ்தானுக்கு ராவத் வெளிப்படுத்தியிருந்தார். ஆகவே இந்தியாவின் நம்பிக்கை மிக்க ஒரு தளபதியின் மரணம், இந்திய இராணுவச் செயற்பாடுகளிலும், அதன் மூலமான பூகோள அரசியல் நகர்வுகளிலும் தாமதங்களை ஏற்படுத்தக்கூடிய அல்லது மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதொரு நெருக்கடியை மோடி அரசுக்கு உருவாகியுள்ளதெனலாம்.
ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பைத் தரமுயர்த்தும் செயற்பாட்டில் பிபின் ராவத் ஈடுபட்டிருந்தார். இதன் பின்னணியிலேயே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சென்ற திங்கட்கிழமை புதுடெல்லியில்
சந்தித்துப் பேசியிருந்தனர். அமெரிக்க எச்சரிக்கை இருந்தபோதிலும், ரஷ்யாவின் எஸ்– 400 ஏவுகணைகளைக் கொள்வளவு செய்வதில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்துகின்றது என்பதையே மோடி–புடின் சந்திப்புக் காண்பித்தது. ஆகவே
ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பைத் தரமுயர்த்தும் செயற்பாட்டில் இந்தியா
முன்னேறுமென எதிர்பார்க்கப்பட்டிருந்த ஒரு சூழலிலேயே பிபின் ராவத்தின் மரணம் நிகழ்ந்துள்ளது. அத்துடன் ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு ஏவுகணைகளைக் கொள்வளவு செய்ய முற்படுகின்றமை இந்தியாவின் அமெரிக்கச் சார்புக்
கொள்கையில் பாதிப்பை ஏற்படுத்துமென்ற விமர்சனங்களுக்கு மத்தியிலும், இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.
இந்தோ–பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பை மையமாகக் கொண்டு மோடி
அரசாங்கம் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்காவுடன் செய்த மூன்று
ஒப்பந்தங்களும், அமெரிக்க-இந்திய இராணுவத்தின் கூட்டுச் செயற்பாடுகளுக்குப் பெரும் ஒத்துழைப்பை வழங்குவதாக மோடி அரசு 2020 ஆம் ஆண்டு புதுடெல்லியில், அமெரிக்க முன்னாள் இராஜாங்கச் செயலாளர் மைப் பொம்பியோ
முன்னிலையில் கூறியிருந்தது. அதுவும் பாதுகாப்பு ஏவுகணையைக் கொள்வனவு செய்வதற்கான இந்திய=ரஷ்ய ஒப்பந்தம் 2018 ஆம் ஆண்டு செய்யப்பட்டவொரு நிலையிலேயே 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் செய்யப்பட்ட அந்த மூன்று
ஒப்பந்தங்கள் பற்றியும் மோடி பெருமையுடன் பேசியிருந்தார். இதன் பின்னணி
யிலேயே பிபின் ராவத் 2019 இல் முப்படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
பிபின் ராவத்தின் நம்பிக்கையுடனேயே மோடி சென்ற திங்கட்கிழமை புடினைச் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பின் பின்னணியில் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கில், சீன எல்லைப் பகுதிகளில் சீன
இராணுவத்தை எதிர்கொள்வதற்கு ரஷ்ய ஆயுதங்கள் இந்தியாவுக்கு உதவும் என்ற உண்மையை சில இந்திய ஊடகங்களும் வெளிப்படுத்தியிருந்தன.ஆனால்
இந்தியாவை மையப்படுத்திய அமெரிக்காவின் இந்தோ–பசுபிக் பாதுகாப்பு
மூலோபாயத்துக்கு இந்திய–ரஷ்ய பாதுகாப்பு ஏவுகணை ஒப்பந்தம் குறை
மதிப்பீடாகவே இருக்குமென அமெரிக்கப் பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆகவே அமெரிக்கச் சார்பு நிலைப்பாட்டில் இருந்து கொண்டு அல்ல
து அந்த நிலைப்பாட்டில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தி ரஷ்யாவுடனும் இராணுவ உறவைப் பேண முற்படும் நிலையில், பிபின் ராவத் மரணமடைந்திருப்பது இந்தியப் பாதுகாப்பு முயற்சிகளில் தற்காலிகத் தடைகளையும், தாமதங்களையும்
ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.
எம்.ஐ–15வி ஹெலிகொப்டர் புதன்கிழமை தென்னிந்தியாவின் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானமைக்குப் பனிமூட்டமான வானிலை, மின் கம்பிகளில் அல்லது மரங்களில் சிக்குதல், இயந்திரக் கோளாறு அல்லது ஹெலிகொப்டர் தரையில் இறங்குவதற்காகக் கணிப்பிடப்பட்ட தவறான உயரம் ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருந்தது.
விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டர் ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்டது. எம்.ஐ=17வி5 ஹெலிகொப்டர்கள் ஏனைய வல்லரசு நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய ஊடகங்கள் எம்.ஐ–17வி5 ஹெலிகொப்டரின் தரத்தை
கேள்விக்குட்படுத்தாமல், காலநிலை மற்றும் விமானியின் செயற்பாட்டுத் தவறுகளையே அதாவது மனிதக் காரணிகளையே விபத்துக்குப் பிரதான காரணம் என்ற வாதத்தை முன்வைக்கின்றன. சீன ஊடகங்களும் அவ்வாறான காரணங்களைக் கூறினாலும், இது இந்திய இராணுவக் கட்டமைப்பின் பலவீனம் என்ற தொனியில் விமர்சிக்கின்றன. வெளிநாட்டுச் சதி என்ற சந்தேகங்களை சீன ஊடகங்களும் முன்வைக்கவில்லை.
எம்.ஐ–17வி5 ஹெலிகொப்டர், எம்.ஐ–17வி ஹெலிகொப்டரின் மேம்படுத்தப்பட்ட உற்பத்தியாகும். இது அதிக சக்தி வாய்ந்த இயந்திரங்கள் மற்றும் மேம்பட்ட
மின்னணு சாதனங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது என்று பீஜிங்கைத் தளமாகக் கொண்ட இராணுவ நிபுணரான வெய் டொன்ஸ்கியு (Wei Dongxu) குளோபல் ரைம்ஸ் செய்தி இணையத்தளத்துக்கு
கூறியுள்ளார்.இந்திய முப்படைகளை ரஷ்யாவுடன் இணைத்து நவீனமயப்படுத்தும்
திட்டங்களில் பிபின் ராவத் ஈடுபட்டிருந்தார் என்றும் அவருடைய மரணத்தின் பின்னர் அந்தச் செயற்பாடுகள் தடைப்படலாமெனவும் வெய் டொன்ஸ்கியு மற்றுமொரு சீன ஊடகத்துக்குக் கூறியுள்ளார்.
வெளிநாட்டு தொழில்நுட்பப் பரிமாற்றங்களுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹெலிகொப்டர்கள், அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து
இறக்குமதி செய்யப்பட்ட ஹெலிகொப்டர்கள் உட்பட பல வகையான கலப்பு
உதிரிப்பாகங்கள் கொண்ட ஹெலிகொப்டர்களையும் இந்திய இராணுவம்
பயன்படுத்துகின்றது. மாறுபட்ட உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்ட
ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்துவதாலும் இந்திய இராணுவத்துக்கு இப்படியான விபத்துச்
சிக்கல்கள் ஏற்படுவதாகவும் வெய் டொன்ஸ்கியு விபரித்துள்ளார். தனக்கென ஒழுங்கமைப்பட்ட இராணுவத் தளபாடங்களை இந்திய இராணுவம் பயன்படுத்துவதில்லை என்றும் தளர்வுப் போக்கையே இந்திய இராணுவம் கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
2019 இல் இந்தியாவின் விமானம் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் 2013 இல் இந்திய நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் உட்பட பல
விபத்துகளுக்கான காரணங்கள் எதனையும் இந்திய இராணுவம் இதுவரை
கண்டறியவில்லை என்றும், மனித மூளையினால் அந்தத் தவறுகளைக் கண்டறிய
முடியுமெனவும் குளோபல் ரைம்ஸ் சுட்டிக்காட்டுகின்றது.
வானிலை சீராகும் வரை பிபின் ராவ் பயணம் செய்த ஹெலிகொப்டரைத் தாமதமாக்கி விமானி மிகவும் கவனமாக அல்லது திறமையாகப் பறந்திருந்தால் அல்லது தரைப் பராமரிப்புக் குழுவினர் ஹெலிகொப்டரைச் சிறப்பாக வழிநடத்தியிருந்தால், விபத்தைத் தவிர்த்திருக்கலாமெனவும், இந்த விபத்து இந்திய இராணுவத்தின் தயார்நிலையற்ற பாதுகாப்புக் குறைபாடு என்றும் குளோபல் ரைம்ஸ் பாதுகாப்புப் பத்தி எழுத்தாளர் கூறுகிறார்.
இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இந்தியப் படைகளின் செயற்பாடுகளும் இவ்வாறான தயாரற்ற தன்மையைக் கொண்டது எனக் கூறும் குளோபல் ரைம்ஸ், எல்லைப் பிரச்சினை மீளவும் மூண்டால், இந்திய
இராணுவத்தால் சீன இராணுவத்துக்குப் பெரிய பாதிப்புகள் ஏற்பாட
வாய்ப்பில்லை என்றும் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றது.ஆகவே பிபின் ராவின்
மரணத்தைச் சீனச் செய்தி ஊடகங்கள் மறைமுகமாக் கொண்டாடுகின்றன
என்பதும் அந்தப் பத்தி எழுத்துக்களின் மறைமுகத் தகவலாகத் தெரிகின்றது.
2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தாய்வான் நாட்டின் பொதுப் பணியாளர்களின் தலைவர் ஜெனரல் ஷென் யி-மிங் உட்பட மேலும் இரு ஜெனரல்கள் கொல்லப்பட்ட ஹெலிகொப்டர் விபத்தைவிட, பிபின் ராவத்தின் ஹெலிகொப்டர் விபத்து மிகவும் பயங்கரமானதென இந்திய பாதுகாப்புத்துறை அறிஞர் இந்திய அறிஞர் பிரம்மா செல்லனே (Brahma Chellaney) விபரிக்கிறார்.
இந்தக் ஹெலிகொப்டர் விபத்து, நிலப்பரப்புகளை ஆக்கிரமிக்கும் சீன அரசுக்கு எதிரான பாதுகாப்பில் ஈடுபட்ட ஒரு முக்கிய நபரை அகற்றியுள்ளது. இந்த
விபத்துக்குப் பின்னால் பீஜிங் இருந்தது என்ற தொனியை பிரம்மா செல்லனே
பகிரங்கப்படுத்துகிறார். தாய்வான் ஹெலிகொப்டர் விபத்துக்குப் பின்னாலும் பீஜிங் இருந்தது என்ற கருத்தையும் பிரம்மா செல்லனே இத் தருணத்தில்
வெளிப்படுத்தியுள்ளார்.இதனால் வரும் நாட்களில் இந்திய–சீன வர்த்தக உறவிலும் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்ற கருத்துக்களும் இல்லாமலில்லை.
ஆனால் பிபின் ராவின் மரணத்தினால் இந்திய–சீன உறவு இதுவரை பாதிக்கவில்லை எனவும் உறவு தொடருவதாகவும் சிங்ஹவா பல்கலைக்கழகத்தின் தேசிய வியூகக் கழக ஆராய்ச்சித் துறை இயக்குநர் கியான் ஃபெங் சீன ஊடகம்
ஒன்றுக்குக் கூறியுள்ளார். இந்திய ஊடகங்களும் இந்திய–சீன விரிசல் ஏற்படும் என்ற வாதத்தை முன்வைக்கவில்லை.ஆனால் பிபின் ராவத்தின் மரணத்தின்
பின்னால் பீஜிங் உள்ளது என்ற பிரம்மா செல்லனேயின் மறைமுக வாதத்தை
ஆதாரமாகக் கொண்டு, சீனா மீதான பகைமையை இந்திய ஆங்கில ஊடகங்கள்
வெளிப்படுத்துகின்றன.
இந்தியா மாறினாலும் சரி, மாறாவிட்டாலும் சரி, இந்தியாவின் மிகப் பெரிய எதிரி இந்திய முப்படைகளின் பின்தங்கிய நிலைதான் என்ற உண்மையை இந்தியா
ஒருபோதும் ஏற்காதென சீனாவின் சர்வதேச ஆய்வுக் கழகத்தின் ஆசிய–பசிபிக் ஆய்வுத் துறையின் இயக்குநர் லான் ஜியான்க்சு கூறுகிறார்.இந்தியாவுக்குச் சீனா
எதிரியல்ல. அதன் பின்தங்கிய நிலைதான் பிரதான எதிரியென்றும் அவர் அடித்துக் கூறுகிறார்.
செல்வாக்கு மிக்க பிபின் ராவத் மரணமடைந்ததால் இந்திய இராணுவம் கட்டுப்பாட்டை இழந்து தனித்துப் போகக்கூடும் என்பதை மோடி அரசு உணர்ந்து கொள்ள வேண்டுமென குளோபல் ரைம்ஸ் ஆசிரியர் தலையங்கம் எச்சரிக்கின்றது.பிபின் ராவத்தின் மரணத்துக்கு நியுயோர்க் ரைம்ஸ் இரங்கல் வெளியிட்டிருக்கின்றது.
ஆனால் இந்திய–ரஷ்ய ஏவுகணைப் பாதுகாப்பு நகர்வுகள் தொடர்பான எதிர்
விமர்சனங்களைச் சற்றுத் தணிக்கை செய்திருக்கின்றது. இந்தியப் பாதுகாப்புத்துறை மீள் கட்டமைப்பட வேண்டுமென்ற தொனியிலும் அமெரிக்காவின் பொக்ஸ் தொலைக்காட்சி விமர்சனங்களை அவிழ்த்துள்ளது. ஆகவே பிபின் ராவத்தின்
மரணத்தின் பின்னரான சூழலில் அமெரிக்க–சீன ஊடகங்களின் விமர்சனங்கள் இந்தியாவின் சுயாதீனத் தன்மையை கேள்விக்குட்படுத்தத் தொடங்கியுள்ளன.