செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாசகம் பெற்ற வயோதிபர் சாவு; பசிக்கொடுமையா? விசாரணை தீவிரம்!

யாழ்ப்பாணம் – முற்றவெளி முனியப்பர் ஆலயத்துக்கு அண்மையில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (11) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக யாசகம் பெற்று தமது வாழ்வை முற்றவெளிப் பகுதியில் கழித்து வந்த குறித்த முதியவர், நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக பட்டினியால் உயிரிழந்துள்ளாரா என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரே பட்டினியால் உயிரிழந்தாரா? என்பது தொடர்பில் உறுதியாகக் கூற முடியும் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

66 வயது மதிக்கத்தக்க வெள்ளை முடி கொண்ட முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவர் அடையாளம் காணப்படவில்லை. எனவே உறவினர்கள் யாராவது இருப்பின் யாழ் போதனா வைத்திய சாலையுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

“முதியவரின் சடலம் இன்று பிற்பகல் கண்டறியப்பட்டது. அவரை அடையாளம் காண முடியவில்லை” என்று பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் அறிக்கை சமர்ப்பித்தனர். முதியவரின் இறப்பு விசாரணையை முன்னெடுக்க திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாருக்கு கட்டளை வழங்கிய நீதிவான், விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

இதனையடு்த்து திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், இன்று மாலை இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார்.

“வயோதிபர் கடந்த சில நாட்களாக எங்கும் செல்லாது இங்கேயே இருந்தார். நான் சில நாட்கள் அவருக்கு கஞ்சி வழங்கியுள்ளேன். அதனைவிட அவருக்கு உணவு கிடைப்பதாக நான் அறியவில்லை. யாருமே அவருக்குக் உணவு கொண்டு வந்து வழங்குவதையும் நான் கண்டதில்லை”

இவ்வாறு அந்தப் பகுதியில் பணியாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர், இறப்பு விசாரணையில் தெரிவித்துள்ளார்.

சடலம் அடையாளம் காண்பதற்காக யாழ் போதனாவில் வைக்கப்பட்டுள்ளது. சடலத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் எவரும் உரிமை கோராதவிடத்து அரச செலவில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,

“யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சனின் ஏற்பாட்டில் முனியப்பர் கோவிலடியில் உள்ள அனைவருக்கும் யாழ்ப்பாணம் நகரில் இயங்கும் ஹோட்டல்கள் இரண்டினால் சுழற்சி முறையில் இலவச உணவு கடந்த 20 நாள்களாக வழங்கப்பட்டு வந்தது”

இதனை குறித்து பிரிவுக்குப் பொறுப்பான கிராம சேவையாளர் உறுதிப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை தடை – குவைத் அறிவிப்பு..!

Tharani

ஜேர்மன் நாட்டு பிரதிநிதிகள் ஓட்டமாவடிக்கு விஜயம்

G. Pragas

யாழில் மிதி வெடி மீட்பு!

reka sivalingam