கிழக்கு மாகாணம் சிறப்புக் கட்டுரை செய்திகள் பிந்திய செய்திகள்

யானைகள் சரணாலயமாக மாறும் குப்பை மேடு – (சிறப்பு பார்வை)

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சூடுபத்தினசேனை, மஜ்மாநகர் கிராமத்தில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் யானைகளில் சரணாலயமாக மாறி வருவதால் உயிரிழப்புக்கள் இடம்பெற நேரிடும் என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் கடந்த அரசாங்கத்தினால் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீடு இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டம் உள்ளது. ஆனால் அதனைக் கூட உயர் அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாமல் சேவை செய்வதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறித்த சூடுபத்தினசேனை கிராமத்தில் ஓட்டமாவடி பிரதேச சபையினால் திண்மக்கழிவு தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதனை அண்மித்து வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது.

ஆனால் தற்போது திண்மக்கழிவு தொழிற்சாலை இயங்காத நிலையிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக சூடுபத்தினசேனை பகுதியில் அதிக குப்பைகள் காணப்படுகின்றது. இதனால் குறித்த பகுதி யானைகளின் வசிப்பிடமாக மாறி வருவதுடன், அதனை அண்மித்த பகுதியிலுள்ள விவசாய நிலங்களை கை விட வேண்டிய நிலையில் உள்ளது. சூடுபத்தினசேனையில் மரங்களின் சருகுகளைக் கொண்டு இயற்கை பசளை தயாரிப்பதற்காக ஓட்டமாவடி பிரதேச சபைக்கு 05 ஏக்கர் நெற்காணி ஓட்டமாவடி பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டது. ஆனால் பல வருடங்கள் சென்றும் இன்று வரை இத்தொழிற்சாலை இயங்க முடியாமல் உள்ளது. மேலும் இவ்விடத்தில் துர்நாற்றம் வீசக் கூடிய குப்பைகள், கோழி எச்சங்கள், மாட்டின் கழிவுகள், மலசல கழிவுகள் போன்றவை கொட்டப்படுகின்றன.

இப்பிரதேசத்தில் 1971ம் ஆண்டு ஓட்டமாவடி பிரதேச சபையால் இங்கு குடியிருந்த மக்களுக்கு கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதும் இக்கிணற்றை குடிநீருக்காக இங்கு வசிக்கும் மக்கள் பாவித்து வருகின்றனர். இக் கிணற்றை யானைகள் கோடை காலங்களில் நீர் அருந்துவதற்காக ஒரு பகுதியை உடைத்துள்ளது. 1978ம் ஆண்டு வீசிய சூறாவளியினால் இப்பகுதியில் தனது குழந்தையை இழந்த தாய் இன்றும் உயிரோடு உள்ளார். இந்திய இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் ஏற்பட்ட மோதலினால் இப்பகுதியில் வசித்த மக்கள் தமது அனைத்து உடைமைகளையும் கை விட்டு விட்டு சென்றனர். அன்றைய மோதலின் துப்பாக்கி ரவைகளின் துளைப்புகள் இன்று கூட இக் கிணற்றில் அடையாளமாக உள்ளது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மக்கள் வாழ்ந்த கிராமத்தை குப்பை கொட்டும் இடமாக ஓட்டமாவடி பிரதேச சபை மாற்றியதற்கு என்ன காரணம்? இங்கு கொட்டப்படுகின்ற கோழி கழிவுகள் எல்லாம் துர்நாற்றம் எடுத்து புழுக்களாக மாறி விவசய நிலங்களில் பரவுகின்றது. அத்துடன் மாட்டின் எலும்புகள் எல்லாம் பாதையோரமாக கொட்டப்பட்டு கிடக்கின்றன. இதனால் பல கட்டாக்காலி நாய்கள் திரிகின்றன.

பறவைகளின் அட்டகாசமும் அதிகமாக உள்ளது. அத்தோடு பல பறவைகள் இப்பகுதிகளுக்கு வருகை தந்து கோழி மற்றும் மாட்டில் கழிவுகளை அருகில் உள்ள வேளாண்மை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் போட்டு விட்டு செல்கின்றது. இவ்விடயம் மேட்டு நிலமாக இருக்கிறது. எங்களது நெற் காணிகள் பள்ளத்தில் இருக்கிறது. மழை காலங்களில் இங்கு இருக்கின்ற மழை நீர் எங்களது வயல் நிலங்களுக்கும் வருவதனால் நிறைய விவசாயிகள் தொற்று கிருமி நோய்க்கு ஆளாகியுள்ளார்கள் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு மாலை 06 மணியானதும் யானைகளின் அட்டகாசம். இக்குப்பைகளுக்கு வரும் யானைகள் விவாசாயிகளின் வேளாண்மைகளை சேதப்படுத்துவதும், குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்து தோட்டங்களை அழிப்பதும் பல வருடங்களாக நடந்து வருகின்றது. மேலும் அல்மஜ்மா மேற்கு, கிழக்கு என்று ஆரம்பித்த யானைகள் இப்போது நாவலடி, பாலைநகர் போன்ற பகுதிகளையும் பதம் பார்க்க ஆரம்பித்து விட்டது. இனிவரும் காலங்களில் உயிர்ச்சேதம் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரதேச பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த அரசாங்கத்தினால் திட்டமிட்டல் எதுவும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட திண்மக்கழிவு தொழிற்சாலை இயங்கினால் அதனூடாக பிரதேச சபைக்கு வருமானம் வருவதுடன், அத்தொழிற்சாலையால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரதேசத்தினைச் சேர்ந்த பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது. இதனை எதற்காக ஆரம்பித்தோம் அதன் நோக்கம் என்ன என்று தெரியாமல் பிரதேச சபை பிரிவில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரிக்கும் இடமாகவே காணப்படுகின்றது.

இறைச்சிக் கடைகளின் கொண்டுவரப்படும் எச்சங்களை உண்பதற்காக நாய்கள் மற்றும் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில், கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் காட்டுப் பகுதிகளில் இருந்து யானைகள் வருகை தருவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்துவதன் மூலம் அல்லது இறைச்சிக் கழிவுகளை கொட்டாது உக்கக் கூடிய குப்பைகளை மாத்திரம் சேகரித்து கூட்டுப் பசளைகளை முறையாக தயாரிப்பதன் மூலம் இப்பகுதி மக்கள் காலங்காலமாக எதிர்நோக்கி வந்த யானைப் பிரச்சனைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும்.

இக்குப்பைகளால் கஷ்டப்படும் ஏழை விவசாயிகளினதும், மீள்குடியேற்றப்பட்டுள்ள இக்கிராம மக்கள் படும் கஷ்டத்தினை கருத்தில் கொண்டு உள்ளுராட்சி மன்ற உயர் அதிகாரி மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர், உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Related posts

ஸ்ரீரங்கா மற்றும் ஐவருக்கு பிணை!

G. Pragas

மின்கம்பியில் சிக்கி பாதுகாப்புப் படை வீரர் பலி!

Tharani

ஜனாதிபதி பெயரை பயன்படுத்தி நிதி மோசடி; இருவர் கைது

Tharani

Leave a Comment