in

யாழில் ஆசிரியைக்கு கொரோனா தொற்று! – எழுமாற்று சோதனையில் கண்டுபிடிப்பு!!

வடக்கு மாகாணத்தில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஆசிரியை ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியை பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும்வரை பாடசாலைக்குச் சென்று வந்துள்ளதால் பாடசாலையில் பலருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பஸ் ஒன்றில் பயணித்தவர்களுக்கு கேரதீவு, சங்குப்பிட்டிப் பகுதியில் வைத்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. இந்த பஸ் சுகாதாரப் பிரிவினரால் எழுமாற்றாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த மாதிரிகள் நேற்று (16) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் இருவருக்குத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒருவர் சாவகச்சேரி, தனங்கிளப்பைச் சேர்ந்தவர். மற்றையவர் மன்னாரைச் சேர்ந்தவர்.

தனங்கிளப்பில் தொற்று உறுதி செய்யப்பட்டவர் ஒரு ஆசிரியை. இவர் பூநகரியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்றார். இவர் பி.சி.ஆர். மாதிரிகள் எடுக்கப்படும்வரை பஸ் மூலம் பாடசாலைக்குச் சென்று வந்துள்ளார்.

அந்தப் பாடசாலையில் உள்ளவர்களுக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்றிரவு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பி.சி.ஆர். முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த அவர், ஆசிரியையுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்களை இனங்காணும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

இந்த ஆசிரியை சில வாரங்களுக்கு முன்னர் கருத்தரங்கு ஒன்றுக்காக மன்னார் சென்றிருந்தார் என்று கூறப்படுகின்றது. அங்கு இவருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

அதேவேளை, மன்னாரில் இருந்து வந்து தனங்கிளப்புப் பகுதியில் தங்கியிருந்த வங்கி ஊழியர்கள் சிலருக்கு சில தினங்களுக்கு முன்னர் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அவர்கள் மூலமாகத் தொற்றுப் பரவியிருக்கலாம் என்ற கோணத்திலும் சுகாதாரப் பிரிவினர் தங்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

முதல் பெண் டிஐஜி நியமனத்தை எதிர்த்து மூத்த அதிகாரிகள் வழக்கு!

ஒரு லட்சம் கோடி ரூபா வைப்பு!! – வவுனியா இளைஞருக்கு வந்தது பிரச்சினை!!