செய்திகள் யாழ்ப்பாணம்

யாழில் கொரோனா தொற்றுச் சாத்தியம் குறைவு; அஞ்சாதீர்கள் – சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே காணப்படுகின்றது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்தோடு மக்கள் அதிகளவில் பதற்றம் கொள்ளத்தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொடர்பான பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன. அவ்வாறு இடம் பெறுகின்ற பரிசோதனைகள் ஊடாக வடக்கில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும் வடக்கில் உள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைகளின் போது ஒரு சிலருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே வடக்கிலுள்ளவர்களுக்கு கொரோனாப் பரவல் தற்போதைய நிலையில் இல்லை என்று உறுதியாகின்றது.

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு சென்றுள்ள இந்தியப் பிரஜை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் அறியக் கிடைத்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

குறிப்பாக இந்தியப் பிரஜை தங்கியிருந்த வீடு அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே நாம் கொரோனா வைரஸ் தொற்று எற்படாத வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் பொது மக்களும் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி எமக்கு ஒத்தழைப்புத் தரவேண்டும்.

பொது இடங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும் அத்துடன் பொது மக்கள் அவதானமாக இருந்தால் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது தற்போதைய சூழ்நிலையில் பொது மக்கள் அதிகளவில் பதற்றம் கொள்ளத் தேவையில்லை தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் மேலதிக விபரங்களை எம்மால் தெரிவிக்கமுடியும் என்று தெரிவித்தார்.

Related posts

உலக சுகாதார நிறுவனத்துக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ட்ரம்ப்

G. Pragas

விமலின் சொத்து குவிப்பு; செப்டம்பரில் விசாரணை

reka sivalingam

வன்னியில் சோதனைச்சாவடிகள் அதிகரிப்பு – ஜீனரத்ன தேரர்

G. Pragas