செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழில் பிரபல அரசியல் ஆய்வாளர் வீட்டில் கொள்ளை! இலக்கு வேறாக இருக்கலாமென சந்தேகம்!

யாழ்ப்பாணம் – உரும்பிராயில் உள்ள அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கத்தின் வீட்டில் இன்று (08) பகல் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் அறியவருவதாவது, நேற்று (07) மாலை 4.30 மணியளவில் பொலிஸ் சீருடையில் சென்ற இருவர் இனம்தெரியாத நபரொருவர் குறித்து யோதிலிங்கத்திடம் விசாரித்துள்ளனர். இதன்போது அவர் குறித்த நபரை தெரியாது எனக் கூறியுள்ளார். பின்னர் இரவு 8.30 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்ற மர்ம நபர்கள் வீட்டின் அழைப்பு மணியை பலமுறை அழுத்தியுள்ளனர்.

மனைவி, பிள்ளைகள் வெளியூர் சென்ற நிலையில் தனித்திருந்த யோதிலிங்கம் வெளியில் வந்து பார்த்த போது யாரும் இருக்கவில்லை. இந்நிலையில் இன்று (08) காலை அவர் தனது அலுவலகத்துக்கு சென்று மதியம் வீடு திரும்பிய போது அவரது வீடு உடைக்கப்பட்டிருந்தது.

இதன்போது வீட்டின் பிரதான வாசல் கதவு, அறைக்கதவு, அலுமாரிகள் என்பன உடைக்கப்பட்டு வீட்டின் அறைக்குள் ஆடைகள் ஏனைய பொருள்கள் எல்லாம் சிதறுண்ட நிலையில் இருந்தன. எனினும் அங்கிருந்த இரண்டு கை மணிக்கூடுகளும் சிறிய தொகை பணம், இவையெதுவும் கொள்ளை போகாத நிலையில் அங்கிருந்த யோதிலிங்கம் பாவித்த ஸ்மார்ட் கைபேசி ஒன்றும், புதிய ஸ்மார்ட் கைபேசி ஒன்றும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸாருக்கு இரு தடவைகள் அறிவிக்கப்பட்டது. எனினும் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் வருகைதந்த பொலிஸார் சிதறுண்ட நிலையில் இருந்த பொருள்களை கைபேசியில் படமெடுத்து சென்றனர். ஆயினும் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்களின் கை ரேகை தொடர்பில் எவ்வித பரிசோதனைகளையும் செய்யவில்லை.

இதேவேளை பணம், மற்றும் வேறு பொருள்கள் இருந்தும் கைபேசி மாத்திரம் கொள்ளையடிக்கப்பட்டமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என்று யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Related posts

புலிகளின் சரித்திரத்தில் சிறுவர் போராளிகள் கிடையாது! – கருணா

G. Pragas

மாணவர்களுக்கான வவுச்சர்கள் பாடசாலைக்கு அனுப்பி வைப்பு

reka sivalingam

திடீரென பற்றி எரிந்த முச்சக்ர வண்டி

G. Pragas