in , ,

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது!!

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சற்றுமுன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். நகர காவல்படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்று (8) இரவு சுமார் 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன் 6 மணி நேர விசாரணையின் பின்னர் இன்று (9) முன்னிரவு 1.45 மணியளவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுக்கான காரணமாக புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக கைது தொடர்பான ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வி.மணிவண்ணன் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்படுகின்றார்.

யாழ்ப்பாணம் நகரத்தைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக தண்டப் பணத்தை அறவிடும் செயற்பாட்டுக்காக யாழ். நகரக் காவல்படை என்னும் பாதுகாப்பு பணிக்குழு யாழ்ப்பாணம் மாநகர சபையால் உருவாக்கப்பட்டது.

மாநகர சபை ஊழியர்கள் ஐவரைக் கொண்ட இந்தக் குழு பொது இடங்களில் குப்பை கொண்டுவோர், பொது இடங்களில் வெற்றிலை உமிழ்வோரிடம் தண்டம் அறவிடும் செயற்பாட்டில் ஈடுபடும் என்று முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்திருந்தார்.

அந்தக் குழுவுக்குப் பயன்படுத்திய சீருடை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதையடுத்து அந்தக் குழுவின் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டதுடன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர். அந்தச் சீருடைகளைப் பெற்றுக் கொண்ட பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளுக்காக வாக்குமூலமும், சீருடையும் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு விசாரணைக்கு யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் ஆகியோர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

சுமார் 6 மணி நேர விசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடிகாமம் சந்தியில் மின் சமிக்ஞை பொருத்தல்!

தமிழன் செய்து விட்டான் என்ற காழ்ப்புணர்ச்சியே மணிவண்ணன் கைது!