செய்திகள்

யாழ் சர்வதேச வர்த்தக சந்தை 2020 – ஜனவரி 24 ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை 2020 எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சி ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி 11 ஆவது முறையாக நடைபெறவுள்ளது.

இம்முறை கண்காட்சியில் 75 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கே.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ் சர்வதேச வர்த்தக சந்தை 2020 தொடர்பாக நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் உரையாற்றினார். இந்த கண்காட்சி வடக்கிற்கான உங்களது நுழைவாயில் என்று குறிப்பிட்ட அவர் கண்காட்சியில் பங்கு கொள்வதற்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்திருப்பதாக தெரிவித்தார்.

தென் இந்தியாவின் முக்கிய வர்த்தக நிறுவனங்கள் இது தொடர்பாக ஏற்பாட்டாளர்களுடன் தொடர்புகளை முன்னெடுத்திருப்பதாகவும் கூறினார். 11 வருடங்களுக்கு முன்னர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வர்த்தக கண்காட்சியின் மூலம் வடக்கு பிரதேசம் பெருமளவில் அபிவிருத்தி அடைந்திருப்பதாகவும் அவர் கூறினார். விசேடமாக மத்திய தர தொழில் முயற்சிகள் வெகுவாக வளர்ச்சி கண்டு வருகின்றன. இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியின் மூலம் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் இத் தொழில்துறை வளர்ச்;சி அடைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாநகர சபை, சர்வதேச வர்த்தக மன்றம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகம் ஆகியன இதற்கு ஆதரவு அளிக்கின்றன. 2010 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் இடம்பெறுகின்ற ஒரு நிகழ்வாக மாறியுள்ள யாழ் சர்வதேச வர்த்தக சந்தை, விற்பனை கண்காட்சி கூடங்கள், மாலைப்பொழுது நேரடி இசை நிகழ்வுகள், மோட்டார் சைக்கிள் சாகச கண்காட்சி, வியப்பூட்டும் பரிசுகளுடன் ஒவ்வொரு மணித்தியாலயமும் அதிஷ்ட குலுக்கல் சீட்டிழுப்புக்கள். சிறுவர்களுக்கான விளையாட்டு ஏற்பாடுகளுடன் பொழுது போக்கு பூங்கா, பல்வேறு வகையான விசேட உணவுகள் அடங்கிய உணவுக் கூடம் மற்றும் பல்வேறுபட்ட கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பாகங்களில் உள்ள பொது மக்கள் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வானது புதிய ஆரம்பங்களும் பண்டிகைகளும் நிறைந்த தைப் பொங்கல் பண்டிகை இடம்பெறும் காலப்பகுதியுடன் ஒன்றிணையும் வகையில் வட மாகாணத்தில் இடம்பெறுகின்ற இத்தகைய அளவிலான தனித்துவமான ஒன்றாகவும் மிக பாரிய நிகழ்வாகவும் பிரபலமடைந்துள்ளது.

விவசாயம், விருந்தோம்பல், கல்வி, நவநாகரீகம் மற்றும் உணவு தொழில்துறைகள் அடங்கிய பல்வேறுபட்ட வர்த்தக துறைகளை கொண்ட நிகழ்வு என இது பெயர் பெற்றுள்ளதுடன் கிட்டத்தட்ட வடக்கில் உள்ள ஹோட்டல்கள் அனைத்துமே நிகழ்விற்கு வருகை தருகின்றவர்கள் தங்கவுள்ளமை காரணமாக நிரம்பி வழிவதுடன் போக்குவரத்து மற்றும் ஏனைய ஏற்பாட்டு வசதிகள் போன்ற ஏனைய சேவைகளும் இக் காலப்பகுதியில் வேகமாக வளர்ச்சி காணும்.

Related posts

சாரதி அனுமதிப் பத்திரம் பெற புதிய முறை

கதிர்

வரலாற்றில் இன்று- (24.04.2020)

Tharani

கொழும்பில் அடைமழை – மக்கள் அசௌகரியம்

Tharani