in , ,

யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி சற்றுமுன் இடித்தழிப்பு!!

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்துக்குள் உள்ள நினைவுத் தூபி இன்று (08) இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால் யாரால் தூபி அழிக்கப்படுகின்றது என்பது தொடர்பான தெளிவான தகவல் கிடைக்கவில்லை.

எனினும் அரச உத்தரவுக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

எனினும், நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.

தற்போது இந்த நினைவிடம் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் முற்றம், பொங்குதமிழ் நினைவாலயம், மாவீரர் நினைவுச் சின்னம் உள்ள பகுதியில் மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு, ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு இடித்தழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவல் அறிந்த பல்கலைக் கழக மாணவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் பல்கலைக் கழக வாயிலுக்கு முன்பாகக் குழுமியுள்ளனர். அதனால் அங்கு பதற்றமான ஒரு நிலைமை காணப்படுகின்றது.

கொரோனாவைச்சாட்டி சிவில் நிர்வாகம் இராணுவ மயமாகிறது – சூக்கா!!

யாழ்.பல்கலை முன் பதற்றம் தொடர்கிறது; பொலிஸாரும் கடும் அச்சுறுத்தல்!!!