ரவிகரன், மயூரன் பிணையில் விடுதலை

குருந்தூர்மலையில் தொல்லியல் திணைக்கள ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மேற்கொண்டமைக்காக கைதுசெய்யப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் குமுழமுனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் காணி அபகரிப்புக்கு எதிரான போராட்ட குழுவின் தலைவருமான இரத்தினராசா மயூரன் ஆகியோரை பிணையில் செல்ல முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்று அனுமதியளித்துள்ளது.

குருந்தூர்மலையை அண்டிய தமிழர் நிலங்கள் தொல்லியல் திணைக்கத்தால் அபகரிப்புக்குள்ளாக்கப்பட்டமை மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கப்பட்டமை ஆகியவற்றுக்கு எதிராக நேற்றுமுன்தினம் முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் போராட்ட குழுவின் தலைவர் இரத்தினராசா மயூரன் ஆகியோர் பொலிஸரால் செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இருவரையும் தலா இரண்டு லட்சம் ரூபா ஆட்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இந்த வழக்கு 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Exit mobile version