செய்திகள் விளையாட்டு

ரஷிட்கானின் சாதனையுடன் சொந்த மண்ணில் பங்களாதேஷை வீழ்த்தியது ஆப்கான்!

ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியை அதன் சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மறக்க முடியாத ஒரு டெஸ்ட் வெற்றியை பெற்றுள்ளது.

397 ரன்கள் இலக்கை எதிர்த்து 2வது இன்னிங்ஸை ஆடிவந்த பங்களாதேஷ் அணி 5ம் நாளான இன்று கன மழை காரணமாக ஆட்டம் நடைபெறுமோ இல்லையோ என்ற ஐயம் ஏற்பட்டது. 3 முறை மழையினால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் கடைசியில் நடுவர்கள் ஆப்கான் அணிக்கு 18.3 ஓவர்களை அளித்தனர். இதில் விழுந்த 4 விக்கெட்டுகளில் ரஷீத் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும் டெஸ்ட்டில் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஒரு உத்வேகக் கேப்டனாக பேட்டிங்கிலும் திறமையைக் காட்ட ஆப்கான் அணி 224 ரன்களில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 173 ரன்களுக்கு மடிந்தது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் இருதயம் நொறுங்கியது.

ரஷீத் கான் அறிமுக டெஸ்ட்டிலேயே 51 ரன்களையும் அடித்து 11 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தினார், ஒட்டுமொத்தமாக இந்த டபுள் செய்த கேப்டன்களில் இம்ரான் கான், ஆலன் பார்டருக்கு அடுத்ததாகத் திகழ்கிறார் ரஷீத் கான்.

20 வயது ரஷீத் கான் ஒரேயொரு டெஸ்ட் கொண்ட தொடரில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தினார். 2வது இன்னிங்ஸில் 49 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். இதனுடன் சேர்த்து முதல் இன்னிங்சில் 51 ரன்களையும் ரஷீத் கான் விளாசியது முக்கியப் பங்காற்றியது. ரஷீத் கான் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார், இந்த விருதை இந்தப் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முகமது நபிக்கு ரஷீத் கான் அர்ப்பணித்தார்.

ஆனால் முகமது நபி தொடர்ந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ரசிகர்களை மகிழ்விப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட் உலகிற்குள் அனுமதிக்கப்பட்ட ஆப்கான் அணியின் 2வது டெஸ்ட் வெற்றியாகும் இது. மொத்தம் 3 டெஸ்ட் போட்டிகளில் 2வது வெற்றியாகும் இது.

முதல் இன்னிங்சில் ரஹமத் ஷா அடித்த சதம் ஆப்கான் அணியின் முதல் சதநாயகர் என்ற பெயரை அவருக்குப் பெற்றுத்தந்தது, பிறகு அஷ்கர் ஆப்கானின் அபாரமான 92 ரன்கள் ரஷீத் கானின் 51 ரன்கள் ஆகியவற்றுடன் ஆப்கான் அணி முதல் இன்னிங்சில் 342 ரன்கள் எடுக்க, பங்களாதேஷ் அணி முகமது நபி 3 விக்கெட்டுகளையும் ரஷீத் கான் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்ற 205 ரன்களுக்கு மடிந்தது. 2வது இன்னிங்சில் ஆப்கான் அணி மீண்டும் அஷ்கர் ஆப்கானின் அரைசதத்துடன் 260 ரன்கள் எடுக்க பங்களாதேஷ் அணிக்கு 398 ரன்கள் என்ற பெரிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

2வது இன்னிங்சில் மீண்டும் வங்கதேச பேட்ஸ்மென்கள் ஸ்பின் பிட்சில் திணறி 136/6 என்று சரிவு கண்டனர், தோல்வி உறுதி என்ற நிலையில் பங்களாதேஷை மழைதான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இருந்தது, மழையும் கிட்டத்தட்ட காப்பாற்றியது, ஆனால் கடைசியில் கைவிட்டது.

5ம் நாள் கனமழையினால் ஆட்டம் கிட்டத்தட்ட முழுதும் பாதிக்கப்பட்டது என்றுதான் கூற வேண்டும், கடைசியில் 18.3 ஓவர்கள் சாத்தியம் என்ற நிலை இருந்தது. இதில் ரஷீத் மீதமுள்ள 4 விக்கெட்டுகளில் மூன்றைக் கைப்பற்ற 3.2 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் ஆட்டம் பரபரப்பான முறையில் ஆப்கான் வெற்றியாக முடிந்த்து.

ஒரு மணி நேர ஆட்டம் இருக்கும் நிலையில் ஜாகிர் கான், ஷாகிப் அல் ஹசனை (44) விக்கெட் கீப்பர் கேட்சுக்கு வெளியேற்றினார். ஷார்ட் வைடு டெலிவரியை அவர் கட் செய்ய முயன்றார், தேவையில்லாத ஷாட்டில் ஆட்டமிழந்தார். ரஷீத் கான் மெஹதி ஹசன் மிராஸை எல்.பி.செய்தார், தைஜுல் விக்கெட்டையும் ரஷீத் வீழ்த்தினார். ஆனால் தைஜுல் நொட் அவுட் ஏனெனில் அவருடைய மட்டையில் பந்து பட்டது, ஆனால் நடுவர் தீர்ப்பை மேல்முறையீடு செய்ய வங்கதேசத்திடம் ரிவியூ மீதமில்லை. ஒருவேளை இந்த முடிவை திருப்ப முடிந்திருந்தால் இந்தத் தர்மசங்கடமான தோல்வியிலிருந்து வங்கதேசன் தப்பினாலும் தப்பியிருக்கலாம்.

11 விக்கெட்டுகள் 51 ரன்கள் எடுத்து டபுள் சாதனையை தன் முதல் டெஸ்ட் கேப்டன்சியிலேயே நிகழ்த்தியவர் ஆனார் ரஷீத் கான். மொத்தமாக இந்த டபுள் சாதனையை நிகழ்த்திய 3வது கேப்டன் ஆனார் ரஷீத் கான், இதற்கு முன்பாக இம்ரான் கான், ஆலன் பார்டர்தான் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். சௌமியா சர்க்காரையும் ரஷீத் கான் வீழ்த்தி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். ஆட்ட நாயகன் ரஷீத் கான்.

Related posts

பாதுகாப்பற்ற கிணற்றால் சிறுமி பலி

reka sivalingam

பாண் விலையை 10 ரூபாயால் குறைக்க இணக்கம்?

கதிர்

இலங்கை எழுத்தாளரின் நூலுக்கு கின்னஸ் விருது!

Bavan