செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

வடக்கின் முஸ்லிம் சமூகம் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டுமென முன்மொழிவு!

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் ஆதரவாளர் வட்டத்தின் ஏற்பாட்டில் வடக்கு முஸ்லிம் சமூகத்தின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று (1) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் ஆதரவாளர் வட்டத்தின் தலைவர் ஜனாப் எம்.யூ.எம். தாஹிர் தலைமையில் யாழ் நகரில் அமைந்துள்ள பிள்ளையார் இன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் ஆதரவாளர் வட்ட ஒருங்கிணைப்பாளர் என்.எம்.அப்துல்லாஹ்சினால் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு முஸ்லிம் மக்களின் நிலைப்பாடுகள் – தீர்மானங்கள் தொடர்பில் முன்மொழிவு ஒன்று முன்வைக்கப்பட்டது.

அவர் தனது முன்மொழிவில்,

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் தமிழ் பேசும் மக்கள் என்கின்ற பொது அடையாளத்தோடு ஒற்றுமையாக, ஐக்கியமாக எழுந்து நிற்கவேண்டிய கட்டாயக் காலத்தில் இன்று நாம் எல்லோரும் இருக்கின்றோம். 1980 களின் தொடக்கம் வரை இப்பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஆரோக்கியமான உறவுநிலைகள் காணப்பட்டன. அவை சமூக, அரசியல் ரீதியாகவும் மிக இறுக்கமான பிணைப்புடனேயே காணப்பட்டன. ஆனால் துரதிஸ்டவசமாக பிற்காலத்தில் அந்த உறவு வெகுவாக பாதிக்கப்பட்டது.

இரண்டு சமூகங்களிடையேயும் நிலவிய கருத்து முரண்பாடுகள் மிகைப்படுத்தப்பட்டன. வளங்களைப் பகிர்வதில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் முதன்மைபெற்றன. இரு சமூகங்களிடையேயும் வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டு உயிர் இழப்புக்கள் ஏற்பட்டன. 1990 வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையானது இம்முரண்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தியது. இவையெதுவும் தமிழ் மக்களுக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கு எவ்வித சாதகமான விளைவுகளையும் இதுநாள்வரை பெற்றுத்தரவில்லை என்பதே எமது ஆழமான அனுபவமாகும்.

இந்த ஆழமான அனுபவத்திலிருந்து நாம் பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொள்கின்றோம். இந்த இடைவெளி ஏதோ ஒரு அடிப்படையில் குறைக்கப்படல் வேண்டும். இரு சமூகங்களும் முன்னரைப்போல ஐக்கியத்தோடும், ஒற்றுமையோடும் கைகோர்க்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அந்த ஒற்றுமையும், ஐக்கியமுமே இரண்டு சமூகங்களையும் அவர்களது தாயக மண்ணில் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும். இதனை எமது முதன்மையான பணியாகக் கருதுகின்றோம்.

இந்த வகையில் வடக்குக் கிழக்கின் முஸ்லிம் மக்களையும் தமிழ் மக்களையும் அரவணைத்துச் செல்கின்ற அடிப்படைகளைக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிக்கும் தீர்மானத்தை வடக்கு முஸ்லிம் மக்கள் சார்பில் நாம் முன்னெடுத்தோம். அந்தத் தீர்மானத்தை எமது மக்களிடம் முடியுமானவரை நாம் கொண்டு சேர்த்திருக்கின்றோம்.

அதன் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து முஸ்லிம் மக்களின் செய்திகளை அவர்களிடமும், அவர்களின் செய்திகளை முஸ்லிம் மக்களிடமும் பகிரக்கூடிய ஒரு சந்தர்ப்பமாக இன்றைய (நேற்றைய) மாபெரும் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

எனவே தமிழ் பேசும் மக்களாக தமிழ் – முஸ்லிம் மக்கள் ஒன்றினைந்து செயலாற்ற வேண்டியதன் தற்போதைய அவசியத்தை நன்கு உணர்ந்தவர்களாக நாம் அனைவரும் பயணிப்போம் என்பதை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.” – என்றார்.

Related posts

இளைஞனை கொன்ற இராணுவத்துக்கு எதிராக வீதி மறியல்!

G. Pragas

சற்றுமுன் இருவர் குணமடைந்தனர்!

G. Pragas

அரச அலுவலத்தில் புகுந்த மலைபாம்பு

Tharani