கட்டுரைகள் செய்திகள்

வறட்சி தரும் வாழ்க்கை சுமைகள்

நாட்டில் கடும் வறட்சி தொடர்ந்த வண்ணமே காணப்படுகிறது. அடுத்து வரக்கூடிய நாட்களில் இந்த வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாமென புவியியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியிருக்கிறார்கள். இந்த வறட்சி காரணமாக நீர் நிலைகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் மின்னுற்பத்தி 20 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக ஆய்வறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்கு மாற்று வழி தேட வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. வறட்சியால் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதோடு, மின்சாரத்துக்கும் பெரும் நெருக்கடி ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

அடுத்து வரக்கூடிய ஆறு மாதங்களுக்கு அவசரமாக மின்சாரத்தை கூடிய விலையில் கொள்வனவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியிருக்கின்றார். ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்திருப்பதாகவும் மீண்டும் அடுத்த ஆறு மாதங்களுக்கும் இதே அடிப்படையில் மின்சாரத்தை கொள்வனவு செய்யும் நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். மக்களுக்குச் சென்றடைய வேண்டிய பணம் வீண் விரயமாகும் ஒரு அவல நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் மின்சாரத்தை சிக்கனமாகக் கையாள வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது

அடுத்தது சுமார் இரண்டு மாதங்களுக்கும் கூடுதலாக மக்கள் தண்ணீரைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். குடிநீருக்கும், ஏனைய தேவைப்பாடுகளுக்கான நீரையும் பெற்றுக் கொள்வதில் மக்கள் படுகின்ற அவஸ்தை மிகவும் கவலை தரக்கூடியதாகவே உள்ளது. நாடு வரண்டு போயுள்ளதால் கிணறுகளில் நீர் மட்டம் அடி மட்டத்தில் உள்ளன. அதேபோன்று ஆறுகள், குளங்களும் முழுமையாக வற்றிப்போய் காய்ந்து போயுள்ளன. அன்றாடப் பாவனைக்கான தண்ணீரைக்கூட பெற்றுக்கொள்ள இயலாத நிலையே காணப்படுகிறது.

எமது நாடு இயற்கை வளங்கள் நிறைந்த நாடு. முன்பெல்லாம் தண்ணீருக்குப் பஞ்சமில்லாத பூமியாகவே காணமுடிந்தது. காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களால் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள்ளும் நிலை உருவானது. இந்தச் சவால்கள் தானாக ஏற்பட்டதல்ல மக்களின் செயற்பாடுகளில் உருவான தவறுகளே இதற்குக் காரணமாகும். எமது பூமி பசுமை பூமி என வர்ணிக்கப்பட்ட நிலமாகும். நீர் வளம்தான் எமது பெரும் சொத்தாகக் காணப்பட்ட காலமொன்று இருந்தது. இன்று அந்த நிலை முற்றிலும் மாறுபட்டதாகியுள்ளது.

மனிதர்களின் முறையற்ற செயற்பாடுகளும், நடவடிக்கைகளுமே நாட்டை இந்த நிலையில் காண வேண்டிய அவலம் தோன்றியுள்ளது. இயற்கைச்சூழல் நிறைந்த ஆயிரக்கணக்கான காட்டு வளங்கள் அழிக்கப்பட்டமை இதற்கான பிரதான காரணமாகும். பெரும்பாலான கிராமப்புறங்கள் இன்று சிறிய நகரங்களாகவும், பெரு நகரங்களாகவும் மாற்றம் பெற்று வருகின்றன. மக்கள் தொகை நகர்ப்புறங்களில் அதிகரித்துவருவதால் அன்றாடம் தேவைப்படும் குடிநீரை அவர்களால் பெற்றுக்கொள்ளவியலாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த முடியவில்லை. பெருமளவு குடிநீர் வீண்விரயமாவதை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.

நகர்ப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் வாழும் மக்கள் தமது நீர்த்தேவைக்காக குழாய் நீரையே நம்பியுள்ளனர். அது நாட்டின் சனத்தொகையில் 41 சதவீதமென நீர் வழங்கல் திணைக்களம் தெரிவிக்கின்றது. அதன் அறிக்கையின்படி தண்ணீரோடு முழுமையாக தொடர்புபட்டோர் தொகை 2.4 மில்லியன் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த மக்களுக்கான குழாய்நீர் விநியோகமானது வீடுகளுக்காக வருடாந்தம் 1,10,000 இணைப்புகள் பெற்றுக் கொடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மேலும் 1,50,000 இணைப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு குழாய் நீர் இணைப்புகளை பெற்றுக்கொடுக்க பாவனையாளர்களிடமிருந்து 20 ஆயிரம் ரூபா பெற்றுக்கொள்ளப்படுகின்றது. இந்தக் கட்டணங்களை ஒரே தடவையில் கட்ட முடியாத நிலை பரவலாகவே காணப்படுவதால் அரசாங்கம் அதனை தவணை முறையில் கட்டுவதற்கு வசதிகளை செய்து கொடுக்கத் தீர்மானித்துள்ளது. 2.4 மில்லியன் வீடுகளுக்கு தற்போது இணைப்புகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக குழாய் கட்டமைப்பு வசதிகள் இல்லாத பிரதேசங்களை உள்வாங்கி நீர் விநியோக குழாய் வசதிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

ஆரம்பக் கட்டத்தில் செலுத்தப்பட வேண்டிய 20 ஆயிரம் ரூபாவையும் தவணை அடிப்படையில் 12 மாதங்களில் செலுத்தி முடிப்பதற்கு மாற்று வழித்திட்டத்தை தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஆரம்பக் கட்டணத்தை 2000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. மீதியை தவணை அடிப்படையில் செலுத்தி முடிக்க முடியும். வாழ்வாதார நெருக்கடிக்குள் துவண்டு வாழும் குடும்பங்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாகவே காணமுடிகிறது.

நீர் வழங்கள், வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவநாணயக்கார தெரிவித்திருப்பது போன்று எமது மக்கள் தண்ணீரை வீண்விரயம் செய்வதால் தான் எல்லோருக்கும் போதுமான நீர் விநியோகத்தைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீரைச்சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் வீண் விரயத்தையும் வீண் செலவுகளையும் தவிர்த்துக்கொள்ள முடியும் குழாய் நீரைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் மாதாந்தம் செலுத்தும் கட்டணத்தைவிட இரண்டு, மூன்று மடங்கு கூடுதலான நிதியை இந்த நீர்வசதியைப் பெற்றுக்கொடுக்க செலவிடப்படுகின்றது. எனவேதான் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் செலவிடும் பணம் எங்கிருந்து வருகின்றது என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அது மக்களிடம் அறவிடப்படும் வரிப்பணம். இதனை சரிவரப்புரிந்துகொண்டால் நிச்சயமாக இத்தகைய சவால்களிலிருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடியதாக இருக்கும். உண்மையிலேயே தண்ணீரின்றி அதுவும் குடிநீரின்றி மக்களால் வாழ முடியாது அந்த பெறுமதிமிக்க வளத்தை வீண் விரயம் செய்யாமல் கட்டுப்படுத்தப்பட்ட ரீதியல் பயன்படுத்தும் மனநிலைக்கு ஒவ்வொரு பிரஜையும் மாறவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றோம்.

Related posts

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

Tharani

அரச உத்தரவை மீறி தொழிற்சாலைக்கு ஊழியர்களை அழைத்தமைக்கு எதிர்ப்பு!

G. Pragas

கொரோனா பரிசோதனை ஒன்றுக்கு 30 ஆயிரம் செலவு!

reka sivalingam

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.