in

வாய்ப்புக்களை கோட்டை விட்ட இந்திய அணி!! – அவுஸ்திரேலியா நிதானம்!!

இந்தியாவுக்கு எதிரான 3அவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி தற்போது 2 இலக்குகுள் இழப்புக்கு 164 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், ரி-20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 என்ற அடிப்படையில் ஆஸி அணி தன்வசமாக்கியது. ரி-20 தொடரை 2-1 என்ற அடிப்படையில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 இலக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் இந்திய அணி 8 இலக்குகள் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3ஆவது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியுள்ளது. 4ஆவது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15ஆம் திகதி தொடங்குகிறது.

நாணயச் சுழற்சியில் வென்ற ஆஸி. அணித் தலைவர் டிம் பெயின், துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வோர்னர், 5 ஓட்டங்களுடன் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மழையால் ஆட்டம் தடைபட்டது. ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது புகோவ்ஸ்கியும் லபுசானும் நிதானமாக விளையாடினார்கள். 22ஆவது பந்துப் பரிமாற்றத்தை அஸ்வின் வீசியபோது, புகோவ்ஸ்கி வழங்கிய எளிதான பிடியை நழுவவிட்டார் ரிஷப் பந்த்.

அடுத்ததாக சிராஜ் வீசிய பவுன்சர் பந்திலும் ரிஷப் பந்திடம் பிடி கொடுத்தார் புகோவ்ஸ்கி. எனினும் கடினமான அந்த பிடியையும் நழுவவிட்டார் ரிஷப் பந்த். மூன்றாம் நடுவர் கவனித்து ஆட்டமிழப்பு இல்லை என்று அறிவித்தார்.

இதுபோதாதென்று எளிதான ரன் அவுட் ஒன்றையும் பும்ரா நழுவ விட்டார். 29ஆவது பந்துப்பரிமாற்றத்தில் புகோவ்ஸ்கி அடித்த பந்தை பவுண்டரி அருகே தடுத்த பும்ராவுக்குக் கால் இடறியது. அப்போது மூன்றாவது ஒட்டத்துக்கு முயன்ற புகோவ்ஸ்கி, பாதி தூரத்தைத் தாண்டி ஓடி வந்துவிட்டார். ஆனால் லபுசான் அந்த மூன்றாவது ஓட்டத்தை மறுக்கவே மீண்டும் திரும்பி ஓடினார் புகோவ்ஸ்கி. பும்ரா வீசிய த்ரோ பலவீனமாக இருந்ததால் அது விக்கெட் காப்பாளருக்கு வந்து சேர்வதற்குள் கிரீஸுக்குத் திரும்பிவிட்டார் புகோவ்ஸ்கி.

மூன்று வாய்ப்புகளில் இருந்து தப்பிய புகோவ்ஸ்கி, தனது அறிமுக ஆட்டத்திலேயே 79 பந்துகளில் அரை சதத்தை எடுத்தார்.

முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 31 பந்துப்பரிமாற்றங்களில் ஓர் இலக்கு இழப்புக்கு 93 ஓட்டங்கள் எடுத்துள்ளது. புகோவ்ஸ்கி 54, லபுசான் 34 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

பின்னர் ஆட்டம் ஆரம்பமானபோது நப்தீப் சானியின் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் புகோவ்ஸ்கி ஆட்டமிழந்தார். அவர் 110 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இப்போது களத்தில் லபுசான் 67 ஓட்டங்களுடனும், சிமித் 29 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸி அணி 164 ஓட்டங்களுக்கு இரண்டு இலக்குகளை இழந்துள்ளது.

வல்வெட்டித்துறை வாசிகள் கே.கே.எஸ். கடலில் கைது!! – பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு!!

119க்கு அழைப்பெடுத்து விளையாடியவர் கம்பி எண்ணுகின்றார்!!