in ,

விசுவாசத்தை காட்டும் பொலிஸாரின் வன்மமே ‘உதயன்’ மீதான வழக்கு!

யாழ்ப்பாணப் பொலிஸார் தாம் விசுவாசம் வைத்திருப்பவர்களை திருப்திப்படுததவே, வன்மத்துடன் உதயன் பத்திரிகை மீது பொய்யான தகவல்களை வழங்கி, நீதிமன்றை தவறாக வழிநடத்தும் நோக்குடன் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில், ‘உதயன் பத்திரிகை’ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.திருக்குமரன் எடுத்துரைத்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் அன்று, அவரது ஒளிப்படத்துடன் உதயன் பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.

இது தொடர்பில் டிசெம்பர் மாதம் 4ம் திகதி யாழ்ப்பாணப் பொலிஸாரால் நீதிமன்றுக்கு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஒளிப்படம் பிரசுரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு மார்ச் மாதம் 26ம் திகதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மீண்டும் டிசெம்பர் 7ம் திகதி நகர்த்தல் பத்திரம் சமர்ப்பித்து வழக்கை எடுக்க பொலிஸார் கோரினர். இதன்போது தமது வழக்கு விசாரணைக்கு வாக்குமூலம் வழங்க உதயன் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது என்று நீதிமன்றில் குறிப்பிட்டனர்.

இதற்கு அமைவாக நீதிமன்றால், உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் கு.டிலீப்அமுதன் ஆகியோரை மன்றில் நேற்றைய தினம் முன்னிலையாகுமாறு அழைப்பு அனுப்பப்பட்டது.

மன்றில் உதயன் பத்திரிகையின் சார்பில், மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரனின் நெறிப்படுத்தலில், ம.டெனிசியஸ், தி.கணாதீபன், த.திவாகர், எஸ்.ரிசிகேசன், பு.அபிதன் ஆகியோர் முன்னிலையாகினர்.

வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.பீற்றர்போல் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் பிரசுரிக்கப்பட்ட செய்தி தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தினரால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாக்குமூலம் வழங்குமாறு உதயன் பத்திரிகையிடம் கோரப்படவில்லை என்றும், வேறொரு செய்தி தொடர்பில் வாக்குமூலம் வழங்க வருமாறு கோரப்பட்டதற்கு உதயன் பத்திரிகையின் சார்பில் பதிலளிக்கப்பட்டது என்பதையும் சட்டத்தரணி வி.திருக்குமரன் எடுத்தியம்பினார்.

அத்துடன் ஈ.சரவணபவன், தான் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையம் சென்ற சந்தர்ப்பத்தில், நீண்ட நேரம் அவரைக் காக்க வைத்துவிட்டு, ஒளிப்படம் பிரசுரிக்கப்பட்ட செய்தி தொடர்பில் கேட்கப்பட்டது. அதற்கும் அவர் மறுப்புத் தெரிவிக்கவில்லை. செய்திகள் தொடர்பில் ஆசிரியர்பீடத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கூறினார் என்பதையும் மன்றில் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

பொலிஸார் தமக்கு வேண்டிய யாரையோ திருப்திப்படுத்த தமது விசுவாசத்தைக் காண்பிக்க வன்மத்துடன், மன்றை பிழையாக வழிநடத்தியுள்ளனர் என்று சட்டத்தரணி எடுத்துரைத்தார். அத்துடன் தமது கட்சிக்காரர்கள் வாக்குமூலம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று காலை 9 மணியிலிருந்து 12 மணிக்குள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறுகுற்றத்தடுப்பு பிரிவில் வாக்குமூலத்தை வழங்குமாறு நீதிவான் குறிப்பிட்டார்.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படத்துடன் சிங்கள, ஆங்கில மற்றும் வேறு தமிழ் ஊடகங்கள் செய்திகளைப் பிரசுரித்துள்ள நிலையில், உதயன் பத்திரிகை மீது வேண்டுமென்று, தமது விசுவாசத்தை யாருக்கோ காட்டுவதற்கு பொலிஸார் இவ்வாறான வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர் என்று சட்டத்தரணி வி.திருக்குமரன் மன்றில் எடுத்துரைத்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு மார்ச் மாதம் 19ம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.

உயர்தர பாட விதானங்களில் இணைகிறது ஆயுர்வேத வைத்திய முறை!

பதவியேற்றார் பைடன்!!!