செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

விஞ்ஞாபனத்தை நம்பி எப்படி வாக்களிப்பது – கேட்கிறார் விக்கி

வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்தை நம்பி நாம் எவ்வாறு வாக்களிக்க முடியும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாராந்தம் கேள்வி பதிலில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்துள்ள நிலையில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த முடியுமா? என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,

தென்னிலங்கையின் இரு பிரதான கூட்டுக்கட்சிகளின் சிங்கள வேட்பாளர்கள் தமது 13 அம்சக் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து 5 கட்சிகளுடன் கூட்டாகப் பேசுவதற்கு தயாராக இருக்கவில்லை என்பதுடன் தேர்தல் விஞ்ஞாபனங்களை மாத்திரமே வெளியிட்டுள்ளார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொருளாதார விடயங்கள் குறித்தே குறிப்பிடப்பட்டிருந்ததென்றும் இனப் பிரச்சினை குறித்து எந்த ஒரு தீர்வையும் அவர் முன்வைக்கவில்லை.

இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிளவுபடாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. இந்நிலையில், ஒப்பீட்டளவில் சஜித் பிரேமதாசவினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து சில நல்ல விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது.

ஆயினும் தமிழ் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளான சுயநிர்ணய உரிமை, வடக்கு, கிழக்கு இணைப்பு, சமஷ்டி, தேசிய இறைமை ஆகியவை குறித்து அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை.

ஆகவே இந்த தேர்தல் விஞ்ஞாபனங்கள் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் திருப்திகரமான ஒன்றாக அமையவில்லை என தெரிவித்துள்ளார்.2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது வெளிப்படையாக எந்த ஒரு உறுதி மொழியையும் பெற்றுக்கொள்ளாமல் தமிழ் மக்கள் வாக்களித்து ஏமாற்றமடைந்தனர்.

இவ்வாறான நிலை நீடித்தால் காலக்கிரமத்தில் தமிழ் மக்கள் தங்கள் மாகாணங்களில் சிறுபான்மையினராக ஆகிவிடுவர். எனவே மீண்டும் ஒருமுறை வெளிப்படைத்தன்மை இல்லாத தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை நம்பி எவ்வாறு எமது மக்கள் ஆதரவு அளிக்க முடியும். எனவே நாம் தீர்மானித்த எமது கட்சியின் முன்னைய நிலைப்பாடான, சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி எமது விரலால் சுட்டிக்காட்டுவதற்கான தார்மீக உரிமை எமக்கு இல்லை என்பதே கட்சியின் நிலைப்பாடு.

ஜனநாயக ரீதியாகத் தேர்தலில் வாக்களிக்கும் மக்களின் ஜனநாயக உரிமையை மதிக்கிறேன். யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேர்வாகும் – என்றார்.

Related posts

இரண்டு தடவைகள் சாட்சியமளித்தார் பிரதமர்

G. Pragas

சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்கும் படி எமது விரலால் சுட்டிக் காட்ட முடியாது

G. Pragas

மிளாகாய் தூள் வீசியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் – பிமல்

G. Pragas

Leave a Comment