ஏனையவைகுற்றம்சஞ்சீவி - IPaperதடயத்தை தேடி!தலையங்கம்வவுனியா

விடிகாலைக்கொலைகள்!!!

புதிய திடுக்கிடும் தகவல்களுடன்

தடயத்தை தேடி

————————–உளவாளி—————————-

17.10.2020 அதிகாலை .
மாணிக்கர் வளவு என அழைக்கப்படும் மாணிக்கர் இலுப்பைக்குளத்தின் எல்லைப் பகுதி. வயல்களினூடு வேகமாக நடந்துகொண்டிருந்தான் ஒரு இளைஞன் .அவன் ஆடைகளில் ஆங்காங்கே இரத்த திட்டுக்கள். ஒரு கையில் நீளமான காட்டுக் கத்தி . மறு கையில் கைக் கோடரி . அந்தக் கைக் கோடரியில் இருந்து சொட்டிய குருதி நிலத்தை ஈரமாக்கிக் கொண்டிருந்தது கோடரியைத் தூக்கி எறிந்துவிட்டு, நடையின் வேகத்தை அதிகரித்தான். வயல்முடிவில் ஒரு வீடு. அந்த வீட்டுக்குள் நுழைந்தவன் சத்தம் சந்தடியின்றி,அங்கு முற்றத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிமெந்து கற்களின் மேல் காட்டுக்கத்தியை வைத்துவிட்டு வேகமாகவே வெளியேற முற்பட்டான். அப்போது பின்னிருந்து ஒரு குரல் அவனை வழிமறித்தது.
" என்னடா வெள்ளனவா வெளிக்கிட்டாய்?" அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் வீட்டின் உரிமையாளர்.
"உங்களிட்ட வேண்டின காட்டுக் கத்தியைவைச்சிட்டுப் போவம் எண்டுதான் வந்தன் " என்றுவிட்டு, சில அடிகள் நடந்திருப்பான். ஆனால் மேலே நகர அவன் கால்கள் மறுத்தன. உடல் நடுங்கியது. அதே நடுக்கத்தோடு அந்த வீட்டின் உரிமையாளரை அவன் அழைத்தான்.
" ஐயா இஞ்ச எனக்கு கிட்ட வாங்கோவன் "
எதற்காக அவன் அழைக்கிறான் என்று புரியாமல் சென்ற வீட்டு உரிமையாளரின் கால்களில் அப்படியே விழுந்தான் அவன் "ஐயா என்னை காட்டிக் கொடுத்திடாதைதயுங்கோ..தம்பாவையும் அந்த வீட்டில இருந்த ரண்டு பேரையும் கொத்திப் போட்டன். என்னை காட்டிக் கொடுத்திடாதயுங்கோ" என்று சொல்லிக் கதறத் தொடங்கினான் அவன் சொல்லச் சொல்ல வீட்டுக்காரருக்கு உடல் பதறத் தொடங்கியது. ஒருவேளை அவன் சொல்வது உண்மையாக இருக்குமோ என்ற நினைப்பே அந்தப் பதறலுக்குக் காரணம். " இஞ்ச நிக்காத போ" என்று அதட்டிவிட்டு, தன் மகனை அழைத்தார்.'தம்பாவுக்கு போன் எடு" என்று அதே பதற்றத்தோடு கட்டளையிட்டார். தம்பாவின் போனுக்கு 'கோல்' விரைந்தது.
பலமுறை எடுத்தும் பதிலில்லை. பதற்றம் அதிகரிக்க, மகனோடு இன்னும் சிலரையும் அழைத்துக்கொண்டு தம்பாவின் வீட்டுக்கு ஓடினார்.
"தம்பா..!தம்பா..!"
எவ்வளவு பலமாகக் கூப்பிட்டும் எந்தப் பதிலுமில்லை ஒரே நிசப்தம். ஆனால் முற்றத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வீட்டுக்குள் ஆட்கள் இருப்பதைச் சொல்லி நின்றன. அந்தப் பொல்லாத அமைதி நடக்கக் கூடாது நடந்துவிட்டதை உணர்த்த, துணிவை வரவழைத்துக் கொண்டு யன்னலால் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தார்கள்.

அங்கே….திகில் படங்களில் கூட காணாத கோரக் காட்சி !

இரத்தம் வழிந்தோடி குளமாகத் தேங்கி உறைந்து கிடக்க … அதன் நடுவில் தலையில் பெரும் வெட்டுக் காயங்களோடு எவ்வித அசைவும் இல்லாமல் மூன்று உடல்கள். கொஞ்சம் உற்றுப் பார்த்தபோது, ஒரு உடலில் சிறு அசைவு தெரிந்தது. அப்படியானால் ஒருவருக்கு உயிர் இருக்கிறது. முன்னெச்சரிக்கையாக அங்குள்ள எந்தப் பொருட்களிலும் தொடாமல் , அங்கிருந்து வெளியேறி ஓமந்தைப் பொலிஸில் முறைப்பாடு செய்ய ஓடினார்கள். போகும் வழியில் கொலை செய்ததாகச் சொன்ன அந்த இளைஞன் 'பாக்' ஒன்றுடன் போய்க் கொண்டிருந்தான் . அவனைத் தாண்டி இவர்களின் மோட்டார் சைக்கிள் விரைந்தது. ஏ=9 வீதியில் போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் இருந்த இரண்டு பொலிஸாரிடம் விடயத்தைச் சொல்ல, அவர்கள் சந்தேக நபரை மடக்கிப் பிடித்தனர். ஓட்டோவில் அவனை ஏற்றிக்கொண்டு ஒரு பொலிஸ்காரர் ஓமந்தைப் பொலிஸ் நிலையத்துக்குச் செல்ல, மற்றவர் தன்னுடன் முறைப்பாடு செய்தவர்களை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்தார். தலையில் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர், அவசர அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறிது நேரத் தேடுதலில் மூவரையும் கொத்திக் கொலை செய்யப்பயன்பட்ட கைக்கோடரி இரத்தக் கறைகளுடன் மீட்கப்பட்டது. இருநாட்களின் பின்னர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நபரும் உயிரிழக்க, கொலைகளின் எண்ணிக்கை மூன்றானது.


கொலையுண்டவர்=1
கோபால் குகதாசன்(தம்பா) (வயது =41)
நிரந்தர முகவரி: மேளிவனம்,மணவாளன் பட்டமுறிப்பு,மாங்குளம்.
வசிப்பிட முகவரி : மாணிக்கர் வளவு ,ஓமந்தை ,வவுனியா

நான்காம் ஆண்டுவரை கரிப்பட்டமுறிப்பு பாடசாலையில் கல்விகற்று குடும்பச் சூழ்நிலையால் கல்வியை இடைநிறுத்தியவர். பின்னர் 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து 2001 ம் ஆண்டு அமைப்பில் இருந்து விலகி காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2009 இறுதி யுத்தத்தின் பின்னர், இரண்டு வருட புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்டார். புனர்வாழ்வுக் காலத்தில் கிடைத்த இராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவினரின் நட்பு காரணமாக அவருக்கு ஓமந்தையில் காணியும் தற்காலிக வீடும் வழங்கப்பட்டது. பின்னர் அங்கேயே குடும்பத்துடன் தங்கியுள்ளார். சொந்த ஊரில் சில முரண்பாடுகள் இருந்ததால் அங்கே அவர் செல்வதில்லை. கூலி வேலை, காட்டுக்குச் சென்று தேன் எடுத்துவந்து விற்பனை செய்தல் என்பவற்றில் ஈடுபட்டார். கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் இவர் தான். இவருடைய மனைவி கிராம சமுர்த்தி சங்கப் பொருளாளராக செயற்பட்டு வருகின்றார். குடும்பத்துக்குள் ஏற்பட்டமுரண்பாடுகளையடுத்து குடும்பத்தைப் பிரிந்து தனியாகவே மாணிக்கர் வளவு வீட்டில் இருந்துள்ளார்.

கொலையுண்டவர்=2
சிவனு மகேந்திரன் ( வயது= 37)
நி.முகவரி: மேளிவனம் மணவாளன் பட்டமுறிப்பு
வசிப்பிட முகவரி: உடுப்புக்குளம் ,அளம்பில்,முல்லைத்தீவு

கரிப்பட்டமுறிப்பு பாடசாலையில் 10 ஆம் ஆண்டுவரை கல்வி கற்றுள்ளார். யுத்த சூழல் காரணமாக கல்வியை இடைநிறுத்திவிட்டு கூலி வேலை செய்தார்.இறுதி யுத்தத்தின் பின், சவுதி அரேபியா சென்றார்.
மீண்டும் 2014 ம் ஆண்டு நாட்டுக்கு வந்து முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணொருவரைத் திருமணம் செய்துள்ளார். மகேந்திரனுக்கு 3 பிள்ளைகள். மனைவி ,பிள்ளைகள் முல்லைத்தீவில் வசிக்க தொழில் வாய்ப்புக்காக சொந்த ஊரான மேளிவனத்திலேயே தங்கியிருந்து விவசாயம், வியாபாரம், தேன் எடுத்து விற்பனை செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். சொந்தமாக இரண்டு உழவு இயந்திரங்கள் உண்டு. அவற்றின் மூலம் மணல் ஏற்றுதல், மணல் வியாபாரம் போன்ற தொழில் முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.


கொலையுண்டவர்=3
சுப்ரமணியம் _ சிவாகரன் ( வயது = 42)
முகவரி :மேளிவனம், மணவாளன்.

     இவர்  கரிப்பட்டமுறிப்பு பாடசாலையில் இரண்டாம் ஆண்டுவரை கல்வி கற்று குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வியை இடைநிறுத்திவிட்டு, .கூலி வேலை, தேன் எடுத்து விற்பனை செய்தல் , விவசாயம் என நாளாந்த வருமானத்துக்காக பல்வேறுபட்ட  தொழில்களில் ஈடுபட்டார். திருமணம் முடித்து ,இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில்  முதல் மனைவியை கைவிட்டார். பின்னர்   இரண்டாவதாக வேறு பெண்ணைத் ஒருவரை திருமணம் செய்தார். அந்தப் பெண் வேறு யாருமல்லர், கொலையுண்ட தம்பாவின் தங்கை தான். ஆனால் இரண்டாவது மனைவியுடனும்  கருத்து முரண்பாடு ஏற்பட்டு,  பிரிந்து  சென்று, மகேந்திரனின்(ஒன்றாகக் கொல்லப்பட்டவர்) வீட்டில் தங்கியிருந்தார்.மகேந்திரனின் தொழில் முயற்சிகளுக்கு ஒத்தாசையாக இருந்தார்.


சந்தேக நபர் ( வயது 30)

யுத்தம் காரணமாக பெற்றோருடன் இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு 1995 ஆம் ஆண்டு சென்று கன்னியாகுமரியில் வசித்தார். அங்கே நான்காம் வகுப்புவரை படித்துவிட்டு குடும்ப வறுமை நிலை காரணமாக கல்வியை இடைநிறுத்தி பெயின்ரிங் வேலையில் ஈடுபட்டார். 2015 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றார். அங்கு கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.இரண்டு வருடத்தின் பின்னர் 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார். அதன் பின் பெற்றோரின் தொடர்பின்றி, மாணிக்கர் இலுப்பைக்குளத்தில் உள்ள தாயாரின் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.
கூலி வேலை,காட்டுக்குச் சென்று தேன் எடுத்து விற்பனை செய்வது என வாழ்க்கை இவரின் வாழ்வு நகர்ந்தது.இவருக்கு ஒரு கண் இல்லை .அவுஸ்திரேலியாவில் தடுப்பில் இருந்தவேளை குழு மோதலில் ஈடுபட்டபோதே இப்படி கண் பறிபோயிருக்கலாம் என்பது ஊரவர்களின் தகவல். எல்லோருடன் நன்றாகப் பழகும் இயல்புடையவர். ஆனால் கோபம் வந்துவிட்டால் எந்த 'லெவலுக்கும்' இறங்குவார். அங்குள்ள ஒரு இளைஞனோடு இவர் நெருங்கிய நட்பாகி, அவரின் ஓட்டோவை ஒருமுறை கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். அவ்வளவுதான், மறுநாள் நாலைந்து பேரைக் கூட்டி வந்து அந்த இளைஞரை வீடு புகுந்து, வாள், இரும்பு பை, மான் கொம்பு என்பற்றால் தாக்கி இளைனரையும், மோதலைத் தடுக்க வந்த அயல் வீட்டுப் பெண்ணையும் காயப்படுத்தினார். இச் சம்பவம் தொடர்பில் தற்போதும் வழக்கு நடந்து வருகின்றது. கஞ்சா இல்லாமல் இருக்க மாட்டார். எந்த நேரமும் கஞ்சா சிறிதளவாவது வைத்திருப்பார் .ஒருமுறை நொச்சிமோட்டை பாடசாலைக்கு முன்பாக அவர் தீப்பெட்டிக்குள் கஞ்சா வைத்திருந்த போது பொலிஸாரிடம் பிடிபட்டுமுள்ளார்.” மச்சான் பார்ட்டி ஒண்டு போடுவம் வாங்கோ”

16 ஆம் திகதி தம்பாவிடம் இருந்து இப்படி ஒரு அழைப்பு போனில் வர, அவரின் நண்பர்களான மகேந்திரனும், சிவாகரனும் குஷியாகி விட்டனர். அன்று மதியம் இரண்டு மணிக்கே தம்பாவை ஓமந்தைக்குச் சென்று சந்தித்து 'பார்ட்டிக்கான' ஆயத்தவேலைகளில் இறங்கினர்.பியர், சாப்பாடு வாங்கிக் கொண்டு புறப்பட்டவர்கள், தம்பாவின் மனைவி வீட்டுக்கும் சென்றனர். ஆனால் தம்பா வீட்டுக்குள் போகாமல் வீதியிலேயே நின்றுகொண்டார்.அங்கு தம்பாவுடன் சேர்ந்து வாழுமாறு அவரது மனைவியிடம், மகேந்திரனும், சிவாகரனும் கோரினர். அதற்கு " அவர் குடியை விட்டால், நானே போய் சேர்ந்து வாழுவன்" என்று தம்பாவின் மனைவி பதிலளித்துள்ளார்.சிறிது நேரம் அவருடன் உரையாடி விட்டு, அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். நண்பர்களுக்கு விருந்து வைக்க, தனக்குப் பழக்கமான வீடொன்றில் சோறும், இன்னொரு வீட்டில் நாலரைக் கிலோ கோழியிறைச்சிக் கறியும் சமைக்கச் சொல்லி தம்பா கேட்டுள்ளார்.அவர்களும் சம்மதிக்க, இரவு அவற்றை தான் இருக்கும் வீட்டுக்கு கொண்டு சென்றார் தம்பா. அதன் பிறகு தொடங்கியது பார்ட்டி.

நீங்களும் உதயன் சுடர்ஒளி, சஞ்சீவியை PDF ஆக பெற கீழுள்ள லிங்கை அழுத்தி எமது VIBER குழுமத்தில் இணையுங்கள்.

https://invite.viber.com/?g2=AQAX5Yy5hJpkc0s9iOvoyeGlrT53JMxQFnmrhdUy5QU%2FPcVl2TND0LvdD517TOqz&lang=en

16 ஆம் திகதி இரவு பன்னிரண்டு மணியளவில் சிவகரன் தம்பாவின் தாயாருக்கு( தன் மனைவியின் தாயருக்கு) கோல் எடுத்தார்.

" நாங்கள் இப்ப தம்பாண்ணை வீட்ட தான் நிக்கிறம். நாளைக்கு காலமை வந்திருவம். இண்டைக்கு இஞ்ச பார்ட்டி .பெடியள் வந்து சாப்பிட்டு போட்டாங்கள். 5 கிலோ அரிசி 5 , 5 கிலோ கோழி இறைச்சி வேண்டி சமைக்க குடுத்தனாங்கள் .எல்லாம் முடிஞ்சுது… நாளைக்கு விடிய வருவன். உங்கட மகளோட என்னை சேர்த்து வைக்க வேணும். அப்பிடிச் சேர்த்து வைக்காட்டி நான் சாக வேண்டியதுதான் " என்று அழுதழுது கதைத்துள்ளார். அப்போது போனை தனது மகளிடம் ( சிவாகரனின் இரண்டாவது மனைவியிடம்) கொடுத்துள்ளார் தம்பாவின் தாயார். அவரும் சிவாகரனுடன் கதைத்துள்ளார். " நான் காலமை 7 மணிக்கு வந்திடுவன்" என்று மனைவியிடம் சொல்லியிருக்கிறார் சிவாகரன். அப்போது அருகில் இருந்த தம்பாவும் தன் தாயாருடன் அதே போனில் கதைத்துள்ளார். " என்ர காணியை மகேந்திரனுக்கு எழுதிக் குடுக்கப் போறன். ஆரும் கேட்டால் மகன்ர காணி தான் அவன் தான் குடுத்தவன் எண்டு சொல்லுங்கோ" எனச் சொல்லியுள்ளார்.


அன்று மாலை கேந்திரனுக்கு அவரது சகோதரன் தொலைபேசியில் அழைப்பு எடுத்தார். ஆனால் மகேந்திரன்பதிலளிக்கவில்லை. பின்னர் சிவாகரனுக்கு அவர் அழைப்பு எடுத்துள்ளார். அப்போது " தம்பாவோடு காட்டுக்குள் நிற்கிறோம். பிறகு எடுக்கிறம். நாளைக்கு காலமை வந்திடுவம்" என கூறி அழைப்பைத் துண்டித்துள்ளார்.
அதன் பின்னர் மறுநாள் காலை அவர்கள் எவரும் வீடுகளுக்கு திரும்பவில்லை. அவர்கள் கொலையுண்ட செய்தியே போனது.
………………….
அன்று வெள்ளிக்கிழமை. அன்றிரவு ஓமந்தையில் உள்ள மதுபான சாலையில் இரண்டு பியர் வேண்டி அருந்திவிட்டு, வீட்டில் உறங்கிவிட்டேன். விடிகாலை இரண்டு மணியளவில் தம்பாவின் புதிய வீட்டில் இருந்து சண்டை போடுவது போல பலமாகச் சத்தம் கேட்டது. முன்பு "வீட்டில ஆக்களில்ல அடிக்கடி பார்த்துக்கொள்" என தம்பா என்னிடம் சொல்லியிருந்தார். அதனால் இரண்டு மணியளவில் அவருடைய வீட்டுக்குச் சென்றேன். அங்கே ரோர்ச்லைட் வெளிச்சத்தில் தம்பாவும் மேலும் இரண்டு பேரும் மது அருந்திக்கொண்டு இருப்பது தெரிந்தது.
என்னைக் கண்டதும் அங்கு புதிதாக வந்தவர்களுள் உடம்பான ஒருவர் என்னுடன் முரண்பட்டார். பின்னர் தம்பாவும் மற்றைய இருவரும் என்னை அறைக்குள் இழுத்து சென்று கடுமையாகத் தாக்கினர். வெளியில் செல்லவும் விடவில்லை . சித்திரவதை செய்தனர். பின்னர் அவர்களுக்குத் தெரியாமல் தப்பிச் சென்று, வீட்டுக்குப் போய் படுத்துவிட்டேன். அப்படி வீட்டில் படுத்திருக்கும் போது அவர்கள் தாக்கிய கோபம் அதிகரித்ததே தவிர தூக்கம் வரவில்லை. அவர்களைப் பழி தீர்க்க வேண்டும் ,அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மனம் ஆவேசமானது. அதனால் வேறு ஒருவரிடம் வேலை செய்வதற்காக வேண்டிய காட்டுக் கத்தியையும் கோடரியையும் தீட்டி, கூர்மையாக்கிக் கொண்டு, தம்பா வீட்டுக்கு அதிகாலை நான்கு மணியளவில் சென்றேன். அங்கே மூன்று பேரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். எந்த அசைவும் இல்லை .. காட்டுக் கத்தியால் வெட்டுவது கஷ்டம். கோடரிதான் சரி என முடிவெடுத்து காட்டுக்கத்தியை வேலியில் சாத்திவிட்டு திரும்பி சென்று "தம்பாண்ணை தம்பாண்ணை" என்று கூப்பிட்டு பார்த்தேன்.
அங்கே சென்று பார்த்த போது என்னோடு முதலில் முரண்பட்ட தடியனை ( மகேந்திரன்) பார்க்க கோபம் கோபமாக வந்தது . தம்பா அடுத்து தடியன்( மகேந்திரன்) அடுத்து மற்றயவர் என நல்ல நித்திரையில் இருந்தனர். நான் மெதுவாக தம்பாவுக்கும் தடியனுக்கும் ( மகேந்திரனுக்கும்)மற்றயவருக்கும் நடுவில் சென்று நின்றுகொண்டேன்.முதலில் தம்பாவின் தலையில ஒரு கொத்து. எந்தச் சத்தமோ,அசைவோ இல்லை.மறுபுறம் திரும்பி தடியனுக்கு உச்சந் தலையில் கோடரியால் கொத்து.இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. எந்த அசைவும் இல்லை .அப்படியே நின்று, எட்டி மூன்றாவது ஆளுக்கும் கொத்தினேன். அந்தக் கொத்து நெற்றியில் விழுந்தது.. தப்பினால் காட்டிக் கொடுத்துவிடுவார் என்பதால் இரண்டாவது தடவையும் அவரைக் கொத்தினேன்.இரத்தம் பீறிட்டு ஓடியது.பின்னர் அங்கிருந்து வெளியேறி வேலியில் சாத்தி வைத்திருந்த காட்டுக் கத்தியையும் எடுத்து கொண்டு, கத்தியை வாங்கியவரிடம் கொடுப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்று கொடுத்துவிட்டுவந்தேன்.
…………………….
அந்தக் கோடரி என்னுடைய வாழ்வில் முக்கியமானது. அதை ஒன்றரை வருடத்துக்கு முன்னர் வாங்கினேன்.நான் காட்டுக்குச் செல்லும் போது அது தான் துணை. பல தடவைகள் நான் தேன் எடுக்கும் போது, கரடிகள் தாக் வரும். அப்போதெல்லாம், கரடிகளை இந்தக் கோடரியால் கொத்திக் கொன்றுவிட்டு தப்பியுள்ளேன்.
அண்மையில் கூட புதூர் காட்டுக்கு தேன் எடுக்கச் சென்ற போது கரடிகள் வந்துவிட்டன. கூட வந்தவர்கள் பயத்தில் மரத்தில் ஏறிவிட்டார்கள். ஆனால் நான் பயப்பிடவில்லை. இந்தக் கோடரியால்நான்கு கரடிகளை கொத்திக் கொன்றேன்
………………………….
கொலைச் சந்தேக நபரும் இதே கிராமத்தைச் சேர்ந்த இன்னும் சிலரும் மேசன் வேலைக்காக கொழும்பு சென்று, அங்கு தங்கி வேலைசெய்து வந்தனர். அப்போது சந்தேக நபர் தனக்கும் தம்பாவின் மனைவியைப்பற்றி தவறாகக் கதைத்துள்ளார். இது தம்பாவுக்கு தெரியவர, சந்தேக நபரை ஒருநாள் , இம்மை மறுமையில்லாமல் தாக்கியுள்ளார் தம்பா. எனினும் சில காலத்தின் பின்னர் இருவரும் ஒற்றுமையாகிவிட்டனர்.

……………….

தம்பா கிராம அபிவிருத்தி சங்க தலைவராகவும், அவருடைய மனைவி சமுர்த்தி சங்க பொருளாளராகவும் உள்ளனர். ஒருமுறை ஒரு பெண்ணுக்கு சமுர்த்தியால் வந்த உதவிக் கொடுப்பனவு கிடைக்கவில்லை. அதனைப் பெற்றுத்தர முடியுமா என தம்பாவிடம் அந்தப் பெண் கேட்டுள்ளார். அதற்கு தம்பாவும் சம்மதித்தார்.
ஆனால் அந்தப் பெண்ணுக்கு உதவிப்பணம் கொடுக்க காசு இல்லை, முடிந்துவிட்டது என்று தம்பாவின் மனைவி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் பெரும் பிரச்சினை வந்து, தம்பா தனது மனைவிக்கு அடித்துள்ளார். அப்போது தம்பாவின் மூத்த மகன் தம்பாவை தாக்கியுள்ளார். வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறி , தம்பாவுக்கும் மனைவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என எழுதி கையொப்பம் வாங்கிக் கொண்டும், அவரை வீட்டை விட்டு கலைத்துள்ளனர்.வீட்டை விட்டு வெளியேறியவர் தனக்கு நன்கு பழக்கமான வீடுகளில் தங்கினார். பின்னர் அயல் கிராமத்தில் வசிக்கும் சகோதரி ஒருவரது வீட்டில் வசிக்கத் தொடங்கியிருந்தார்.
…………..
தம்பாவுக்கு மூத்த மகனும் ,மனைவியும் சேர்ந்து அடித்தது இது முதல் தடவையல்ல. நான்கைந்து தடவை .ஒரு தடவை சைக்கிள் செயினால் தம்பாவின் கழுத்து நெரித்துள்ளனர். அப்போது கொலைச் சந்தேகநபர் தான், இருவரையும் விலக்கி , தம்பாவைக் காப்பாற்றி இருந்தார்

……………….

சகோதரி ஒருவருக்கு தொலைபேசியூடாக தொடர்கொண்ட தம்பா "மூத்த மகன் அடித்ததால் நான் விழுந்துவிட்டேன் என்னுடைய மர்ம உறுப்பை காலால் நசித்தார்கள் சாக சொல்லி அடித்தார்கள் ..
முன்னர் ஒருதடவை ஆள்வைத்து அடித்தது நான் தான் அப்ப தப்பீற்றாய் இனி தப்ப மாட்டாய் என்றும் பகல் வந்திட்டாய் இரவு என்றால் திரும்பி போக மாட்டாய் என்று மனைவி சொல்வதாக தனது சகோதரிக்கு சொல்லி அழுதுள்ளார். தான் தற்கொலை செய்யப்போவதாகவும் எனக்கு மூன்று தடவை இவ்வாறு அடித்ததாகவு சொல்லி அழுதுள்ளார். மேலும் தன்மீது வேறு பெண்களுடன் தொடர்பு என அவதூறு கூறுவதாகவும் கூறியுள்ளார்.
தம்பாவின் தாய் தம்பாவின் இரண்டாவது மகனை தொடர் கொண்டு கேட்டபோது அண்ணாவாவது அடிச்சிட்டு விட்டான் நானெண்டால் கொண்றிருப்பேன் என்று கூறியதாகவும் அது தம்பி கதைக்கவில்லை மூத்த மகன் தான் கதைத்ததாக பின்னர் அறிந்துகொண்டதாகவும் அதன் பிறகு மகளைத் தொடர்பு கொண்டு அப்பாக்கு அடிச்சவையாம் என கேட்ட போது அவன அப்பா என்று சொல்வதற்கு தெரிவில போற நாயை சொல்லலாம் என பதிலளித்ததாக சொல்கின்றார் தம்பாவின் தாயார்.முன்னர் ஒரு தடவை தம்பாவின் மூத்த மகன் வீட்டிற்கு வந்து "ஊரில பொலிசுக்கும் சிலருக்கு அடிச்சுப்போட்டன் இப்ப பிரச்சினை அதுதான் இஞ்ச வந்தனான் "என்று சொல்ல வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறி துரத்தியதாகவும் அதனால் பின்னர் ஆட்டோ ஒன்றில் வெட்டுவதற்காக வந்ததாகவும் கூறுகின்றார் தம்பாவின் தாயார்.
…………………….
செய்திகளை உடனுக்குடன் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்து UTHAYAN TV ஐ Subscribe செய்யுங்கள்

https://youtube.com/channel/UCziMHJIpv58bwEJhRSv-jRg

இருவருக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என மனைவி கடிதம் எழுதி கொடுத்ததையடுத்து தான் தற்போது கட்டிவரும் வீட்டை விற்பதற்கு தம்பா முயற்சி எடுத்துள்ளார். வீட்டிற்கு தனது குடும்பத்தினர் யாரும் வரக்கூடாது எனவும் கூறியுள்ளார். எனினும் தம்பாவும் அவருடன் இருக்கும் அக்கா என்பவரும் ஒரு வாரத்திற்கு முன்னரும் வீட்டிற்கு சென்று பார்த்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

………………….

மகேந்திரன் இரண்டு உழவு இயந்திரங்களை வைத்திருந்தார் .ஆற்று மணல் அள்ளி விற்பனை செய்தும் வந்துள்ளார் . இவ்வாறான சந்தர்ப்பத்தில் வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் இவர்களுடைய கிராமத்தில் மணல் விற்பனை செய்யும் யாட் ஒன்றை அமைத்துள்ளார். இந்த யாட்டிற்கு மகேந்திரன் வேலைக்கு அதாவது மணல் ஏற்றிக் கொடுக்கும் வேலைக்கு சென்றுள்ளார். இங்கே மணல் ஏற்றி கொடுக்கும் போது இடை இடையே ஒரு சில லோட் மணலை தனது வளவிற்குள் பறித்து அதனை பின்னர் தான் விற்பனை செய்து வந்துள்ளார். இச் சம்பவங்களால் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளது. ஒருவரை ஒருவர் மாறி மாறி பொலிஸிடம் தகவல் கொடுத்து இருவருடைய மணல் வியாபாரமும் பாதிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.யாட்டும் மூடப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் ஒரு நாள் இரவு ஆறு ஏழு மோட்டார் சைக்கிளில் ஆட்களுடன் யாட் உரிமையாளர் மகேந்திரனின் வீட்டிற்கு சென்றபோது மகேந்திரன் வீட்டிற்குள் நின்றுகொண்டு தனது தாயாருக்கு தொலைபேசியில் "_ எனது வீட்டிற்கு ஆட்களோடு வந்துள்ளார் " என்று கூற தாயார் குறித்த யாட் உரிமையாளருக்கு எடுத்து "என்ன ஆட்களோடு வீட்ட போய் நிக்கிறியாம் " என்று கேட்க "இல்லை நான் இங்கால ஒராள் வீட்ட வந்தம் என்று கூறிவிட்டு அனைவரும் மகேந்திரன் வீட்டிலிருந்து சென்றுள்ளனர்.
இதன் பின்னர் குறித்த யாட் உரிமையாளர் புதூர் எனும் இடத்தில் மணல் யாட் அமைத்த போது அங்கும் மகேந்திரனின் இடைஞ்சல் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் புதூர் பகுதியில் உள்ள மணல் யாட்டிற்கு மகேந்திரனால் இடைஞ்சல் எதுவும் இல்லை எனவும் முன்பு முரண்பாடுகள் இருந்தாலும் அதை நாங்கள் அப்போதே விட்டுவிட்டோம் மகேந்திரனின் வீட்டார் வீணாக எங்கள் மீது சந்தேகப்பட்டு கதைத்து வருகின்றனர் மகேந்திரனின் தாயாரோடு பணக் கொடுகல் வாங்கல் கூட இருந்ததாகவும் தாயார் எங்கள் மீது சந்தேகப்பட்டு கதைத்ததால் தான் நாங்கள் மரண வீட்டிற்கு செல்லவில்லை .என்கிறார் குறித்த யாட் உரிமையாளர்.குறித்த யாட் உரிமையாளர் கிராமத்தில் நடந்த இரண்டு மரண வீட்டிற்கும் வரவில்லை
……………………..

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,196