செய்திகள் பிரதான செய்தி

விளையாட்டுத்துறை பல்கலைக்கழகம் அமைக்க தீர்மானம்…!

இலங்கையில் விளையாட்டுத்துறைக்கான பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கான கலந்துரையாடலொன்றை ஆரம்பித்துள்ளதாக விளையாட்டமைச்சின் செயலாளர் ருவன் சந்திர த சில்வா தினகரனுக்குத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:

குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தற்போது விளையாட்டமைச்சின் கீழுள்ள விளையாட்டு கல்வியியல் நிறுவனத்தை பல்கலைக்கழக பட்டத்துக்கு உயர்த்தும் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் “நாம் இதுபற்றி கலந்துரையாடியுள்ளோம். விளையாட்டு கல்வியியல் நிறுவனத்தை பல்கலைக்கழ தரத்துக்கு உயர்த்தி அங்கு விசேட தேர்வுத்திட்டத்தின் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு பட்டம் பெறுவதற்கான கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போதுள்ள பல்கலைக்கழகமொன்றை விளையாட்டுத்துறை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்கள் உயர்தர பரீட்சையில் சித்திபெற்று இஸட் புள்ளி அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். அதன்மூலம் அதிகளவு வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்ய முடியும்.

தற்போது களனி, சப்ரகமுவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களில் விளையாட்டு துறைக்கான பட்டம் பெறும் வசதிகள் உள்ளன. அந்த பாடநெறியுடன் கூடிய பல்கலைக்கழகங்களை இணைத்து பல்கலைக்கழமொன்றை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடியுள்ளோம். ஆனால் இந்தப் பல்கலைக்கழகங்களை சுயாதீனமாக செயல்படுத்துவது முக்கியமென நாம் நம்புகின்றோம். ஏனென்றால் அப்போதுதான் அதிகளவு விளையாட்டு வீரர்களை அங்கு அனுப்பக் கூடியதாக இருக்கும். ஆனால் நாம் இன்னும் சரியான முடிவுக்கு வரவில்லை எனத் தெரிவித்தார்.

இதேவேளை தொழில்முறை விளையாட்டொன்றை ஆரம்பிக்கும் நோக்குடன் திட்டமொன்றை தயாரிப்பதே தமது அமைச்சின் நோக்கமென்று அவர் தெரிவித்தார். ‘விளையாட்டுத்துறை பொருளாதாரம் பற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

தற்போது உலகில் விளையாட்டுத்துறை பொருளாதாரம் தொடர்பாக மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. நாமும் அதனை இலங்கையிலும் ஏற்படுத்த விரும்புகின்றோம். அதன் மூலம் எமது விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும். அதனால் தொழிற்துறை விளையாட்டு வீரர்களை உருவாக்கவும், விளையாட்டுக்களை ஏற்பாடு செய்து விளையாட்டுத்துறை பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நாம் எதிர்பார்க்கின்றோம்” எனவும் தெரிவித்தார்.

அதேபோல் தற்போதுள்ள விளையாட்டுத்துறை சட்டத்துக்கு சில திருத்தங்களை செய்து அதனை சக்திமிக்கதாக்கவும் எதிர்பார்த்துள்ளதாகக் கூறிய விளையாட்டு அமைச்சின் செயலாளர் புதிய சட்டங்களையும் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts

மன்னாரில் தடம்புரண்ட வான்; ஒருவர் காயம்!

reka sivalingam

ஞானசார மீது குற்றச்சாட்டை பதிவு செய்ய பணிப்புரை

G. Pragas

முகாமையாளரை மாற்றியமைக்கு இலங்கை வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு!

Tharani