வீட்டிலிருந்த குடும்பப் பெண்ணை வெட்டிக்கொன்று கொள்ளை!

வீட்டுக்கு வேலை செய்ய வந்த இருவர், அங்கிருந்த பெண்ணிடம் உணவுவாங்கி உட்கொண்ட பின்னர், அவரை வெட்டிக்கொன்றுவிட்டு நகைகளை அபகரித்துச் சென்றனர்.
இந்தப் பயங்கர சம்பவம், நேற்று இடம்பெற்றது. சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச்சம்பவம், மட்டக்களப்பு அரசடி பார் வீதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டுக்கு வழமையாக வேலைக்கு செல்லும் தந்தையும் மகளுமே இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளைக்கொண்டு பொலிஸார் தெரிவித்தனர்.

“எங்களுக்கு பசிக்கிறது. சாப்பாடு தாருங்கள்“ என்று, கொலை செய்யப்பட்ட பெண்ணிடம் சாப்பாடு வாங்கி உண்ட பின்னரே இந்தச்செயலை அவர்கள் செய்துள்ளனர்.
அந்த இருவரும் திடீரென குறித்த வீட்டின் உரிமையாளரான பெண் மீது கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். கழுத்தை வெட்டிய பின் தாலிக்கொடியை அறுத்தெடுத்துள்ளனர். தோடுகளை கழற்ற முடியாமல், காதுகளை வெட்டி எடுத்துச்சென்றுள்ளமையும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குறித்த பெண்ணை கொலை செய்த இருவரும் அங்கிருந்த தங்க நகைகளை களவாடிச் சென்ற நிலையில் வீதியில் நின்றவர்கள் அவர்களின் உடைகளில் குருதிக்கறை உள்ளதை கண்டு சந்தேகம் கொண்டு துரத்திச்சென்று இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், செல்வராஜா தயாவதி (வயது – 50) என்பவரே கொல்லப்பட்டார். பொலிஸார் விசாரணையைத் தொடர்கின்றனர்.

Exit mobile version