செய்திகள் பிரதான செய்தி

ஷானியின் இடமாற்றம்; இளம் ஊடகவியலாளர்கள் கண்டனம்!

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவை, அந்த பதவியில் இருந்து அகற்றி, காலி பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக் குழு எடுத்த முடிவுக்கு, இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் ​எதிர்ப்பை வௌியிட்டுள்ளது.

இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தால் தேசியப் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளக் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

11 பேரைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியமை, பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர கொலை, ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட விசாரணைகளும் ஷானி அபேசேகரவின் மேற்பார்வையில் இடம்பெற்றவையாகும்.

அந்த குற்றங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில், இலங்கையில் அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள், மீண்டும் அதிகாரத்துக்கு வந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து மாற்றப்படுவது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயமாகும். இந்த விசாரணைகளை மழுங்கடிக்கச் செய்யவே ஷானி அபேசேகரவை இடமாற்றியுள்ளதாக நாம் உறுதியாக நம்புகின்றோம். அரசாங்கமொன்றுக்கு அவ்வாறான தேவை ஒன்று இருக்கலாம்.

எனினும் சுயாதீன ஆணைக் குழுவான தேசிய பொலிஸ் ஆணைக் குழு, அரசாங்கத்தின் அந்த விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப குறுகிய தீர்மானங்களை எடுக்கும் நிறுவனமாக இருப்பது மிக மோசமன நிலைமை என்பதுடன் அது அரசியலமைப்பின் நோக்கங்களை அழிக்கும் நடவடிக்கையாகும்.

அரசியலமைப்பின் ஊடாக சுயாதீன ஆணைக் குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் நோக்கம், அரச சேவையை அரசியல் தலையீடுகளின்றி முன்னெடுப்பதாகும். அதிகாரத்துக்கு வரும் அரசாங்கத்தின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்றால்போல் செயற்படுவது, ஆணைக் குழுக்களின் பணிகள் மற்றும் பணிப்பட்டியலில் சேராது. அதனால், உங்கள் ஆணைக் குழு எடுத்துள்ள தீர்மானத்தை நீக்கி, ஷானி அபேசேகரவை மீளவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு நியமித்து விசாரணைகளை விரைவாக முடிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். – என்றுள்ளது.

Related posts

அதிபர் சேவை தரம் – 3 ஆட்சேர்ப்பு முறைகேடு: டக்ளஸ் நடவடிக்கை

Tharani

இன்றைய நாள் இராசி பலன்

Tharani

ஊரடங்கு நீடிப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல்!

Bavan