செய்திகள் பிரதான செய்தி

ஹிஸ்புல்லா ஊடாக முஸ்லிம்களுக்கு வழங்கிய ஆயுதம் ஷஹ்ரானிடம்

2009ம் ஆண்டு பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமை காத்தான்குடியில் சந்தித்த போது, அவரது அலுவலகத்தில் ரி-56 துப்பாக்கிகள் இருந்தது என்றும், அது தொடர்பில் சிலரிடம் விசாரித்த போது 1990ம் ஆண்டில் ஹிஸ்புல்லாக ஊடாக அரசால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியே அவையென அறிந்தார் என்றும் ஊடகவியலாளர் கிரிஷ்தோபர் கமலேந்திரன் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (24) சாட்சியமளித்துள்ளார்.

மேலும் கமலேந்திரன் சாட்சியமளிக்கையில்,

‘ஷஹ்ரான் குழுவுக்கம் பாரம்பரிய முஸ்லிம்களுக்கம் இடையில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வந்தன. நான் முதலில் சூபி முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்தேன். ஷஹ்ரான் குழுவினர் சூபிகளுக்குச் சொந்தமான நூறுக்கும் அதிகமான சொத்துக்களைத் தாக்கிச் சேதப்படுத்தியதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அதற்குப் பின்னர் நான் காத்தான்குடியில் ஷஹ்ரானை அவரது சிறிய அலுவலகத்தில் சந்தித்தேன். அவருடன் பேசிக் கொண்டிருந்த போது அடுத்த அறையில் ரி-56 துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். அது குறித்து ஒருவரிடம் விசாரித்த போது 1990ம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட பிறகு முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஊடாக ரணசிங்க பிரேமதாஸ நிர்வாகத்தின் போது காத்தான்குடியிலுள்ள முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியே அவையென தெரியவந்தது.

அந்த நேரத்தில் ஷஹ்ரான் குழுவினர் பகிரங்கமாகவே ஆயுதங்களைப் பயன்படுத்தினர். கடற்கரையில் ஆயுதப்பயிற்சிகளை வழங்கினர். தென்னை மரங்களில் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட ஓட்டைகள் காணப்பட்டன. இவை பகிரங்கமாகவே நடைபெற்றன. சூபிகள் மீதான தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெற்று வந்தன.

அந்த நேரத்தில் மட்டக்களப்பின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த எடிசன் குணதிலகவிடமும் காத்தான்குடி உதவிப்பொலிஸ் அத்தியட்சர் கந்தே வசந்தவிடமும் அந்த சம்பவம் குறித்து நான் கேட்டேன். அதற்கு அவர்கள் தங்களுக்கு அந்தச் சம்பவங்கள் பற்றித் தெரியும் என்றும், ஆனால் அரசியல் நெருக்குதல்கள் காரணமாகத் தீவிரவாத நடவடிக்கைகளை அலட்சியம் செய்ததாகவும் கூறினார்கள். தாங்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருப்போம் என்றும் அவர்கள் கூறினார்கள்.’ – என்றார்.

Related posts

விமான நிலையத்தில் பிசிஆர் கூடம் திறப்பு!

Tharani

மட்டு அரச அதிபரின் முக்கிய அறிவிப்பு!

G. Pragas

கடன் வழங்கும் நபர்கள் தொடர்பில் மதிப்பீட்டு பிரிவு அறிமுகம்

Tharani