ஈழத் தமிழ்ப் பெண் நோர்வேயில் எம்.பியானார்!
ஈழத் தமிழ்ப் பெண்ணான ஹம்சி, நோர்வேயில் தொழிற்கட்சி சார்பாகப் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நோர்வேயில் எட்டு ஆண்டுகள் நீடித்த பழமைவாதிகளது ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது. அங்கு எதிர்க்கட்சியாகிய தொழிற்கட்சி தலைமையில் புதிய அரசு அமையவுள்ளது.
புலம் பெயர்ந்து நோர்வேயில் வசித்து வருகின்ற வெளிநாட்டுப் பூர்வீக இனங்களின் சார்பில் பலர் இந்த முறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி உள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று வயதில் நோர்வேக்குப் புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்ப் பெண் ஹம்ஸி குணரட்ணமும் அவர்களில் ஒருவர். ஹம்சாயினி என்னும் இயற்பெயர் கொண்ட ஹம்ஸி ஒஸ்லோ நகரத்தின் துணை மேயராவார். தொழிற்கட்சி உறுப்பினரான அவர் நோர்ட்டிக் நாடு ஒன்றின் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகிய முதல் தமிழ்ப் பெண் என்ற அந்தஸ்தைப் பெறுகிறார்.
2011 இல் நோர்வேயின் உத்தாயா தீவில் தொழிற்கட்சி இளைஞர் அணியின் விடுமுறைகால முகாமில் இடம்பெற்ற கூட்டுப் படுகொலையில் சுமார் 69 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். அந்த இளைஞர் அணியில் இணைந்திருந்த ஹம்ஸி, கொலையாளியின் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி மீண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.