செய்திகள் பிரதான செய்தி மலையகம்

1000 ரூபாய் பொறிமுறை தெரியாமல் அரசு தடுமாறுகிறது

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ள நிலையில், அப்பொறிமுறையை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தெரியாமல் அரசாங்கம் திண்டாடிவருகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் விமர்சித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

தெளிவான கொள்கையோ, தூரநோக்கு சிந்தனையோ இந்த அரசாங்கத்திடம் கிடையாது என்பதையே இது உறுதிப்படுத்துகின்றது. ஆயிரம் ரூபாய் சம்பளம் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு காலத்தை இழுத்தடித்து, தொழிலாளர்களை ஏமாற்றாமல் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான தெளிவான பொறிமுறை என்னவென்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1500 ரூபாய் வருமானம் கிடைப்பது உறுதிசெய்யப்படும் என ஜனாதிபதி தேர்தலின்போது நாம் அறிவித்திருந்தோம். அதற்கான பொறிமுறை என்னவென்றும் தெளிவாக எடுத்துரைத்தோம்.

எதிரணியில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கியிருந்தார்.

இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச வேதனமாக ஆயிரம் ரூபாய் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கட்டளையை ஜனாதிபதி பிறப்பித்திருந்தார். ஆனால் அது எவ்வாறு சாத்தியப்படும் என்பது பற்றி அவர் உரிய தெளிவுபடுத்தல்களை முன்வைக்கவில்லை.

இருந்தும் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கிடைத்துவிட்டது என்பதுபோல் ஆளுங்கட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் பிரமாண்ட அறிவிப்புகளை விடுத்தனர்.

எனினும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வாறு சம்பள உயர்வை வழங்குவது என தெரியாமல் அரசாங்கம் தடுமாறுகின்றது. மறுபுறத்தில் நிறுவனங்களும் கைவிரிக்கும் போக்கிலேயே கருத்துரைத்து வருகின்றன.

நிறுவனங்களுக்கு வரிச்சலுகை மற்றும் நிவாரணங்களை வழங்குவதன் ஊடாக ஆயிரம் ரூபாய் இலக்கை எட்டலாம் என ஆரம்பத்தில் கூறிய பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன, ஆயிரத்துக்கு மேல் வருமானம் பெறுவது பற்றிய வழிமுறையை ஆராய வேண்டும் என தற்போது அறிவிப்பு விடுக்கின்றார்.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கிடைப்பதற்கு நாம் எதிர்ப்பு வெளியிடவில்லை. அதற்கான தெளிவான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்வைத்தால் முழுமையான ஆதரவை வழங்குவோம். நிறுவனங்களுக்கும் உரிய அழுத்தங்களை பிரயோகிப்போம்.

ஆனால், ஆயிரம் ரூபாயை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதே இந்த அரசாங்கத்தின் கபட நோக்கமாக இருக்கின்றது. அடுத்த கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்வரை இத்தொகையை எவ்வாறு வழங்குவது என்பது பற்றிய தெளிவான கொள்கையும் இல்லை. எனவேதான், இந்த விடயத்தில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு என்னவென்பதை அறிவிக்குமாறு வலியுறுத்துகின்றோம் – என்றார்.

Related posts

ரஜினியை சந்தித்த பிரணவ்

Bavan

மதுபானசால யில் கொள்ளை! மதுப்பிரியர்கள் கைவரிசை

G. Pragas

ஹெரோயின் பொதி செய்யும் போது வசமாக சிக்கிய மூவர்

G. Pragas