செய்திகள்வவுனியா

தனியார் பேருந்து மோதி தந்தையும் மகனும் சாவு!

வவுனியா பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் நேற்றுக் காலை 8.50 மணியளவில் தனியார் பேருந்து –மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
குருக்கள்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த பு.சிறிதரன் (வயது – 46) மற்றும் அவரது மகனான டினோகாந் (வயது – 14) இருவரே சாவடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியா – மன்னார் பிரதான வீதியில் குருக்கள்புதுக்குளம் பகுதியில் உள்ள ஒழுங்கை ஒன்றில் இருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிள் ஒன்று ஏற முற்பட்டுள்ளது. இதன் போது மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்து மோட்டார் சைக்கிளை மோதியது. விபத்தில் மோட்டார் சைக்கிள் பேருந்தின் கீழ்ப்பகுதியில் சிக்குண்டது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சிறிதரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகனான டினோகாந் மிக மோசமாக படுகாயமடைந்து மயக்கமடைந்த நிலையில், அங்கிருந்து இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்தில் ஏற்றப்பட்டு, வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற பெருமளவு பொதுமக்கள் அங்கு குவிந்தனர். ஆத்திரமேலீட்டால், விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி, அதன் கண்ணாடிகளை மக்கள் உடைத்தனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரித்த ஊடகவியலாளரின் ஒளிப்பதிவுக் கருவியையும் உடைத்து சேதமாக்கினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. பூவரசங்குளம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214