சினிமா

வெந்து தணிந்தது காடு: திரை விமர்சனம்

கருவை முட்களுக்குள், காயங்களுடன் காலம் தள்ளும் முத்து (சிம்பு), மும்பையில் பரோட்டா கடை வேலைக்குச் செல்கிறார். பகலில் கடை, இரவில் வெட்டு குத்து என புதிய உலகம் காத்திருக்கிறது அவருக்கு. மிரளும் இந்த ‘ஒன்வே’ உலகத்துக்குள் சிக்கும் முத்து, ஒரு நாள் திடீர் ஹீரோவாக, ‘படா பாய் கர்ஜி’க்கு (சாரா) நெருக்கமாகிறார். அவருக்கு எதிராக குட்டி பாய் (சித்திக்) கோஷ்டி. இருவரும் ஒருவரை ஒருவர் போட்டுத்தள்ள துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே துணி கடையில் வேலை பார்க்கும் பாவை (சித்தி இட்னானி)யுடன் காதல். இந்த மோதலும் காதலும் நடுவக்குறிச்சி முத்துவை எந்தக் களத்தில் நிறுத்துகிறது என்பதுதான் படம்.

உயர் நடுத்தர வர்க்க வாழ்க்கை முறை, ஆங்கில வசனங்கள், நாயகனின் வாய்ஸ் ஓவர், வண்ணமயமான லொகேஷன்களில் இனிமையான பாடல் காட்சிகள் என தனது வழக்கமான அம்சங்களை ஓரமாக வைத்துவிட்டு, ஜெயமோகனின் ‘கேங்ஸ்டர்’ கதையோடு களமிறங்கி இருக்கிறார் கவுதம் வாசுதேவ் மேனன். யதார்த்தமாகச் செல்லும் முதல் பாதி நிமிர்ந்து அமர வைத்தாலும் வழக்கமான தாதா மோதலுக்குள் சென்றுவிடும் இரண்டாம் பாதி பொறுமையை சோதித்து விடுகிறது. அவசர கதியில் முடிக்கப்பட்ட உணர்வைத் தரும் கிளைமாக்ஸிலும் இரண்டாம் பாகத்துக்கான முன்னோட்டத்திலும் எந்த சுவாரஸ்யமும் இல்லை!

காய்ந்த முள்ளுக்காட்டுக்குள் வியர்வை வடிந்த மெலிந்த தேகம், ஒடுங்கிய கண்களுடன் ஒரு கை சாய்த்து நடக்கும் மேனரிசத்துடன் என்ட்ரியாகும் சிம்புவைப் பார்க்கும் போது சிலிர்க்கிறது நமக்கு. ‘அடடா சிம்புவா இது?’ என்று ஆச்சரியப்பட வைக்கும் இந்த ‘முத்து’வை இதற்கு முன் இப்படி பார்த்ததில்லை. அவர் உடல்மொழி, உடலை மெலிதாக்க அவர் போட்ட உழைப்பு, 19 வயது வாலிபனின் தோற்றத்தைக் கொண்டு வந்திருக்கும் மெனக்கடல் வியக்க வைக்கிறது. மும்பை தமிழ்ப் பெண்ணாக வரும் சித்தி இட்னானி புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார். அவருக்கும் சிம்புவுக்குமான காதல் காட்சிகளில், கவுதமின் தனித்துவ மேஜிக் தெரிகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்புகுட்டி வலுவான பாத்திரத்தில் ஈர்க்கிறார். மலையாள நடிகர் நீரஜ் மாதவ், பலர் ஏற்கத் தயங்கும் கேரக்டரை சிறப்பாகச் செய்திருக்கிறார். ‘குட்டிபாய்’ சித்திக், சேர்மதுரை, பவா செல்லத்துரை, சில நிமிடங்கள் வந்தாலும் மிரட்டிவிட்டுப் போகும் ராவுத்தர், ஜாஃபர், நெல்லைப் பகுதி அண்ணாச்சியை அசலாக்கும் சாரா, பரோட்டா கடை இசக்கியாக வரும் ரிச்சர்ட் ஜேம்ஸ், அம்மா ராதிகா உட்பட அனைவருமே கதாபாத்திரத்துக்குள் கச்சிதமாக ஒன்றியிருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை, கதை நகர்வுக்குப் பக்க பலமாக ஒலிக்கிறது. பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. அவர் குரலில் ஒலிக்கும் ‘மறக்குமா நெஞ்சம்’ மனதோடு ஒட்டிக்கொள்கிறது. சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவு மும்பையை இயல்பாகக் காட்டியிருக்கிறது. திரைக்கதையில் சில பல கோளாறுகள் இருந்தாலும் ஒரு தாதா உருவாகும் கதையை, யதார்த்தமாகச் சொன்னதற்காக பார்க்கலாம், இந்த வெந்து தணிந்தது காட்டை!

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214