பிரதான செய்தி

வீடொன்றில் இருந்து பெருந்தொகை ஹெரோயின் கண்டுபிடிப்பு!

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நபரிடம் இருந்து 6 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கெஸ்பேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து குறித்த ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு (06) குறித்த சந்தேக நபர் அம்பலாந்தோட்டை பாலத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 40 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலின் பிரகாரம் தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​கெஸ்பேவ சித்தமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த வீடு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, உடனடியாக செயல்பட்ட பொலிஸ் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வீட்டை சுற்றிவளைத்துள்ளனர். சுற்றிவளைப்பின் போது வீட்டில் இருந்த சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் வீட்டில் இருந்து 06 கிலோ 176 கிராம் ஹெரோயின் மற்றும் 19 9mm பிஸ்டல் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுற்றிவளைப்பின் போது தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்ய கெஸ்பேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் 40 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (07) அம்பலாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பிரிவு, அம்பலாந்தோட்டை மற்றும் கெஸ்பேவ பொலிஸ் நிலையங்களின் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266