செய்திகள்

4 நாள்களில் 11 ஆயிரம் கோடி ரூபா பணத்தை அச்சிட்டது கோத்தா அரசு!

இலங்கை அரசு கடந்த 4 நாள்களில் மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை அச்சிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்ற பின்னர் இதுவரை 15 ஆயிரம் கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள மத்திய மற்றும் தென் மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன், அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்ற பின்னர், 15 ஆயிரத்து 842 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கை மத்திய வங்கி ஒரு லட்சத்து 36 ஆகியரத்து 805 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது. அரசின் நிதிச் செயற்பாடுகள் தொடர்பில் அல்லது பணம் அச்சிடுதல் தொடர்பில் பொருளாதார நிபுணர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் அல்லது எதிர்க்கட்சியினரின் கவனம் இதுவரை திரும்பவில்லை என்று ரஜித் கீர்த்தி தென்னக்கோன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் அநாவசியச் செலவுகள் அதிகரித்துள்ளன. அதேநேரம் நாட்டின் வளங்கள் விற்கப்படுகின்றன. வகைதொகையின்றிப் பணமும் அச்சிடப்படுகின்றது.
விவசாய உற்பத்திகள் இன்மை, போதியளவு உரம் இன்மை ஆகியவற்றால் பட்டினி நிலைமை உருவாகின்றது. இலங்கையின் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கின்றது. அனைத்து நகரங்களிலும் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.
இலங்கை மத்திய வங்கியின் புள்ளி விவரங்களின்படி இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி பிணை முறிகளின் முகப்புப் பெறுமதி 2020 ஆம் ஆண்டு முதலாம் திகதி 74 ஆயிரத்து 74 பில்லியனாகும். அது இப்போது ஆயிரத்து 442 பில்லியன்களாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் இலங்கை மத்திய வங்கி ஆயிரத்து 368 பில்லியன்களை அச்சிட்டுள்ளது. இந்தச் செயற்பாடுகளால் இலங்கையின் பொருளாதாரம் நூலறுந்த பட்டம் போன்று ஆகியிருக்கின்றது என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266