செய்திகள்யாழ்ப்பாணம்

அரிசி விலையைக் குறைக்க மாட்டோம்! அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிப்பு!

அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது என்று யாழ்.மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் யாழ்.மாவட்டச் செயலரிடம் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ்.மாவட்டச் செயலருக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் அரவசால் கடந்த 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக நிர்ணயிக்கப்பட்ட 210 ரூபா விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது. நெல் விலை அதிகரித்துள்ளது. எனவே குறைந்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்து தந்தால், அரசின் நிர்ணய விலைக்கு விற்பனை செய்வோம் என்று அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் கொழும்பிலுள்ள நுகர்வோர் அதிகார சபைத் தலைமையகத்துடன் கலந்துரையாடப்பட்டது. ஆட்டக்காரி அரிசியும் நாட்டரிசி என்ற வகைக்குள்ளேயே உள்ளடங்கும் என்றும், எனவே கட்டுப்பாட்டு விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணத்திலுள்ள அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர், அவ்வாறு விற்பனை செய்ய முடியாது. அரிசியை சந்தைக்கு வழங்காவிட்டால், யாழ்ப்பாணத்தில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் குறிப்பிட்டுள்ளார். யாழ்.மாவட்டத்தில் ஒரு கிலோ குத்தரிசி கிலோ 350 ரூபா வரையில் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282