செய்திகள்பிரதான செய்தி

எரிபொருள் விநியோகத்தில் இராணுவத்தின் தலையீடு தேவையற்றது; சட்டத்தரணி  ஸ்ரீகாந்தா சுட்டிக்காட்டு! 

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இராணுவத்தின் தலையீடு தேவையற்றது என்று தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.  ஊடகங்களுக்கு நேற்றுமுன்தினம் அனுப்பிவைக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

நாடு எதிர்கொண்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் பெரும் குழப்பநிலைகளும் பல்வேறு வள்முறை சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. எரிபொருளுக்காக அனைத்து வேலைகளையும் விட்டு மக்கள் நாள்கணக்கில் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
இதன்போது பொதுமக்கள் மத்தியில் சில வேளைகளில் முரண்பாடுகளும் சச்சரவுகளும் ஏற்படுவது ஆச்சரியமானது அல்ல.

இந்த நீண்ட வரிசைகளில் ஒழுங்கு முறைகளை மீறி, சமூகப் பொறுப்பற்று செயற்படும் பல நபர்களும் எம் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர். இதனால் சகல எரிபொருள் நிலையங்களும் விநியோக நடவடிக்கைகளை நேர்மையாக மேற்கொள்வதாக கருதமுடியாமல் உள்ளது.

எரிபொருளுக்கான நீண்ட வரிசைகளில் சில சந்தர்ப்பங்களில் ஏற்படும் அமைதியின்மையைக் கையாள்வதற்கு இராணுவத்தை ஈடுபடுத்தும்போது பிரச்சினை மோசமடைவதையும் கண்மூடித்தனமான அடக்குமுறையாக விஸ்வரூபம் எடுப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
கடந்த 18 ஆம் திகதி முல்லைத்தீவு, விசுவமடுவில் பொதுமக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையில் ஏற்பட்ட மோதலும்,அதை அடுத்து ஏவப்பட்ட அடக்குமுறை அட்டகாசமும் இந்த நெருக்கடியான கால கட்டத்தில் இனிமேலும் நிகழக்கூடாது.

எனவே எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து இராணுவத்தை முற்றாக விலக்கிக் கொள்வதன் மூலமே  அடக்குமுறைகள் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த முடியும். எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டும் பொறுப்பு பொலிஸ் துறைக்கே உரியது. இதில் இராணுவத் தலையீடு தேவையற்றது.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் இதுவே பொருத்தமான அணுகுமுறை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். எரிபொருள் விநியோக விடயத்தில் சகலரின் ஒத்துழைப்பையும் கோரியுள்ள வட மாகாண ஆளுநர், இதைக் கவனத்திற்கொள்ள முன்வர வேண்டும் என விரும்புகின்றோம்.- என்றுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994