in

அத்தியாவசியப் பொருள்களுக்கு இனி வடக்கில் தட்டுப்பாடில்லை!

அத்தியாவசியப் பொருள்களுக்கு இனி வடக்கில் தட்டுப்பாடில்லை கூ. சங்கங்கள் கடனடிப்படையில் பொருள் கொள்வனவுக்கு அனுமதி கூ.அபிவிருத்தி ஆணையாளர் தகவல்!

கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஊடாக அத்தியாவசியப் பொருள்களை நியாயவிலையில், கடனடிப்படையில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக வடக்கில் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக அத்தியாவசியப் பொருள்களை இனித் தட்டுப்பாடின்றிப் பெறமுடியும்.

இவ்வாறு, வடக்கு மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மு.நந்தகோபாலன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணக் கூட்டுறவுச் சங்கங்களை செயற்றிறனோடு இயங்க வைப்பது தொடர்பான கூட்டம், மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மு.நந்தகோபாலன் தலைமையில் நிகழ்நிலையில் நடைபெற்றது.

அதில், வடக்கு மாகாணக் கூட்டுறவுச் சங்கங்களின் ஆணையாளர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். அதன்போது, மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக்கொடுக்க கூட்டுறவுச் சங்கங்களிடம் பொருளாதார நிலை சாதகமாக இல்லை. எனவே கடனடிப்படையில் பொருள்களைக் கொள்வனவு செய்தால் தட்டுப்பாடின்றி அவற்றை விநியோகிக்கமுடியும் என்ற கருத்தை பலரும் முன்வைத்தனர். அதனையடுத்தே மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன், சங்கங்களுக்கான பொருள்களைக் கொள்வனவுசெய்ய கூட்டுறவுச் சங்கங்களுக்குப் பொறுப்பான கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் சிபார்சுடன் தேவையான பொருள்களைக் கடனடிப்படையில் கொள்வனவு செய்து மக்களுக்கு விநியோகிக்க முடியும்.

இதன்மூலமாக வடக்கில் அத்தியாவசியப் பொருள்களை கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக இனித் தட்டுப்பாடின்றிப் பெறமுடியும் என்பதோடு, மீண்டும் கூட்டுறவுச் சங்கங்களில் அதிகளவானோர் பயன்பெறவும் முடியும் – என்று தெரிவித்தார்.

முன்னாள் போராளி கைது! கைக்குண்டு மீட்புடன் தொடர்பு என்கிறது பொலிஸ்!

கோம்பயன்மணல் மயான மின் தகனத்துக்கு கட்டண மாற்றம்!