செய்திகள்வவுனியா

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வவுனியாவில்  நேற்றுப் போராட்டம்!

வவுனியா ஏ-9 வீதி, தபால் திணைக்கள அலுவலகத்துக்கு அருகாமையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் போராட்டத்தின் 1950ஆவது நாளான நேற்றையதினம், சிறப்புக் கவனவீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டம் தொடர்பில் அவர்கள் தெரிவித்ததாவது:
இலங்கையின் பொருளாதாரம் தற்போது மிகவும் நவிவடைந்துள்ளது. இலங்கை நாளுக்கு நாள் வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றது. இந்தப் பொருளாதார நெருக்கடி, சிங்கள அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தியிருக்கின்றது. 1957ஆம் ஆண்டிலிருந்து சிங்களவர்கள் எமக்கு இழைத்த ஒவ்வொரு அட்டூழியத்தின் அடிப்படையிலும், எமது தாயகத்தில் தமிழர்களின் வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்துக்கும் சிங்களவர்கள் எதிரிகளாக இருந்து வருகின்றனர்.

இப்போது எமது எதிரி மிகவும் பலவீனமாக இருக்கின்றான். அழிந்து வரும் இலங்கையில் இருந்து எங்களை விடுவிக்க இதுவே சிறந்த நேரம். எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒன்றுபட்ட பிரேரணையை முன்வைக்கும் நேரம் இது. எங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க பொதுவாக்கெடுப்பு நடத்தலாம். தமிழ் எம்.பி.க்கள் புலம்பெயர் தமிழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். ஏனெனில் அவர்கள் புத்திசாலிகள், நன்கு படித்தவர்கள், பணக்காரர்கள், சுதந்திரமாக சிந்திக்கக் கூடியவர்கள். கடந்த கால வரலாறுகளின் அடிப்படையில் நடைமுறை தீர்வுகளை அவர்களலால் பரிந்துரைக்க முடியும்.

புலம்பெயர் தமிழ் மக்கள் எம்மீது அக்கறை கொண்டுள்ளமைக்காகவும், எமது தாயகத்தின் விடுதலைக்கான கோரிக்கைக்காகவும் இலங்கையின் 52 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை அடைக்கத் தயாராகவுள்ளமைக்காகவும் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். போரின் காரணமாக புலம்பெயர் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறினர், இலங்கையில் எங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முழு உரிமை அவர்களுக்கு உள்ளது – என்றனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994