செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்திமுல்லைத்தீவு

இயற்கை அழிப்புகளை சுட்டிய ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு

முல்லைத்தீவு – மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் காடழிப்பு மற்றும் சட்டவிரோத மணலகழ்வு ஆகியவற்றை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டாரென ஊடகவியலாளர் ஒருவர் மீது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரால் கடந்த புதன்கிழமை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாந்தை கிழக்கின் மாபியாக்கள் என மக்களால் அறியப்பட்டோருக்கு பொலிஸ் பாதுகாப்புடன் அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் துணை புரிகின்றனர் என மக்கள் தெரிவித்த கருத்து செய்தியாக கடந்த 7ஆம் திகதி பிரசுகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எமது பிரதேசத்தில் சட்டவிரோத செயல் புரிவோருக்கு அரச அதிகாரிகள் துணைபோகவில்லை. இதுதொடர்பில் ஆராயாது செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரை விசாரணைக்குட்படுத்த வேண்டும் என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் ஊடகவியலாளர் ஆகியாரை பொலிஸ் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதன்போது செய்தியுடன் தொடர்பில்லாதவரை அழைத்து விசாரணை இடம்பெறுகிறது. மக்கள் தெரிவிக்கும் கருத்தை செய்தியாக்கம் செய்யும் ஊடக பணிக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவது கவலையளிக்கிறது என ஊடகவியலாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் பத்திரிகை நிறுவனத்துடன் பொலிஸார் தொடர்பு பிரசுரமான செய்தி தொடர்பில் செய்தியாளரை அடையாளப்படுத்துமாறு கோரியுள்ளனர்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஆண்டு முறிப்பில் சட்டவிரோத தேக்கு மரங்கள் அறுக்கப்படுவது தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு அவர்களது ஒளிப்பட கருவிகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282