கட்டுரைகள்சிறப்புக் கட்டுரை

தமிழின அழிப்பை மறுப்பது மட்டுமே தமிழ் அரசியல்வாதிகளின் செய்கிறார்கள்!

”ஐ.நா.வுக்கு கூட்டாக ஓரிரு அறிக்கைகளை அனுப்புவதைவிட
தனித்தனியாக பல அறிக்கைகளை அனுப்புவதே சிறந்தது”

🎯 கால அவகாசம் முடிந்த பின்னர் ஆவணங்களை அனுப்புவதால் பயனுண்டா?
💥 தமிழின அழிப்பை மறுப்பது மட்டுமே தமிழ் அரசியல்வாதிகளின் செய்கிறார்கள்
💥 மனித உரிமைகள் பேரவையை தமிழர் தரப்பு சரியாகக் கையாளவில்லை

………….
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் சர்வதேச இராஜ தளங்களில் தமிழர்களின் உரிமைகளுக்காக நீண்டகாலமாக தொடர்ச்சியாக பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்துவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும்,உலகத் தமிழர் இயக்கத்தின் சர்வதேச இணைப்பாளருமான மரியதாஸ் மோகன்ராஜ் (பொஸ்கோ) , உதயன் = சஞ்சீவிக்காக வழங்கிய நேர்காணல்.

💥💥 நேர்கண்டவர் : சோபிகா

🎯கேள்வி: ஐ.நா மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத்தொடர் நாளை ( செப்ரெம்பர் 13 ஆம் திகதி) தொடங்குகின்றது. இந்த நிலையில் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் வாய்மொழிமூலமான அறிக்கை ஒன்று வெளிவரவுள்ளது. அதையொட்டிய தமிழர் தரப்பின் முன்னெடுப்புகள் எவ்வாறு அமைந்திருந்தன?

பதில்: சிங்களத் தரப்பினர் அதனை இலக்காகக்கொண்டு பல மாதங்களுக்கு முன்னரே வேலை செய்யத் தொடங்கிவிட்டார்கள்.
இதில் ஆணையாளரின் வாய்மொழிமூலமான அறிக்கை முக்கியமானதாகும். இதற்குத் தேவையான தகவல்களை ஓகஸ்ட் 22 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பித்திருக்க வேண்டும்.
ஆனால் எம்மவர்கள் அந்தக்கால எல்லைக்குள் அதற்குரிய எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்காதிருந்துவிட்டு வழமைபோன்று முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் அதுதொடர்பில் கருத்துச் சொல்பவர்களாகவே காலம்காலமாக செயற்பட்டுவருகிறார்கள். இந்தமுறையும் அதேபோன்றே செயற்பட்டார்கள்.

இந்தக் கூட்டத் தொடரை இலக்காகக் கொண்டு ஐ.நா. வின் விசேட அறிக்கையாளர்களுக்கு தமிழர்களாகிய நாங்கள் அறிக்கைகளைச் சமர்ப்பித்திருக்க முடியும். விசேட அறிக்கையாளர்கள் கொடுக்கும் அறிக்கைகளின் பிரதிபலிப்பாகத்தான் ஆணையாளரின் அறிக்கை அமைந்திருக்கும். விசேட அறிக்கையாளர்களுக்கு எங்களுடைய அறிக்கைகள் மற்றும் தமிழருக்கு எதிராக நடக்கும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் புதிய தகவல்களை நாம் தொடர்ந்தும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்தும் நாங்கள் தகவல்களைக் கொடுத்துக்கொண்டிருந்தால்தான் ஜெனீவாவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

🎯கேள்வி: அப்படியானால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை தமிழர் தரப்பு சரியாகப் பயன்படுத்தவில்லையா?

பதில்: அது உண்மைதான்,மனித உரிமைகள் ஆணையகம் தொடர்பில் எம்மவர்கள் தவறான புரிதலிலேயே உள்ளனர். அதாவது பாதிக்கப்பட்ட தரப்புகள் தமது பாதிப்புக்களுக்கான நீதிகேட்கும் இடத்தில் வந்துநின்றுகொண்டு இராஜந்திரம் செய்வதாக எம்மவர்களில் பலர் நாடகமாடுகின்றனர். அதனை விடுத்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் தமக்கான நீதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் ஒவ்வொரு கூட்டத்தொடர் தொடங்குவதற்கு மூன்று கிழமைக்கு முன்னர் எழுத்துமூல அறிக்கைகளினை ஐ.நா வின் அங்கீகாரம் பெற்ற (ECOSOC) அமைப்புக்களின் ஊடாக அனுப்பிவைக்க வேண்டும் .அத்துடன் கூட்டத்தொடர் நடைபெறும் போது பிரதான அவையில் வாய்மூல அறிக்கைகளினை பதிவுசெய்யவதுடன் பக்க அறை நிகழ்வுகளை செயவதனூடாக எமது பிரச்சினையை அங்கு பேசுபொருளாக்க வேண்டும்.மேலும் ஐ.நா வின் நிபுணர்கள் மற்றும் சிறப்பு அறிகையாளர்கள் ஆகியோருடன் தனிப்பட்ட சந்திப்புக்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு எமது பிரச்சினைகளை தெளிவுபடுத்த வேண்டும்.

அதேபோன்று மனித உரிமைகள் ஆணையகத்தின் கீழ் 9 ஒப்பந்த ஆய்வுக்குழுக்கள் (Treaty Bodies)உள்ளன. ஒவ்வொரு ஒப்பந்த ஆய்வுகுழுக்களின் (Treaty Bodies) கீழும் நாங்கள் வழக்குகளை பதிவு செய்யலாம். ஆனால் நாங்கள் இதுவரை எந்தவொரு வழக்கும் பதிவுசெய்யப்படவில்லை. இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உள்ள வழிவகைகளையே தமிழர் தரப்பு சரியாகக் கையாளவில்லை. அல்லது பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

🎯கேள்வி: கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக தாயகத்து உறவுகளோடு இணைந்து புலம்பெயர் அமைப்புக்களும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டங்களில் பங்கேற்ற போதிலும் இலங்கை அரசு மீது ஏன் ஒரு காத்திரமான சர்வதேச விசாரணையை கொண்டுவர முடியவில்லை சற்று விரிவாக கூற முடியுமா?

பதில்: பெருமான்மையான தமிழ் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக ஐ.நா வுக்கான மேன்முறையீடுகளை அனுப்புவதோடு நின்றுவிடுகிரார்களே தவிர அவர்கள் ஐ.நா செயற்திட்ட பொறிமுறைகளுக்குள் சரியான முறையில் செயற்படவில்லை என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். ஐ.நா. மனித உரிமைகள் சபை இலங்கை தொடர்பான பிரச்சினையை தொடர்ந்தும் வெவ்வேறுவிதமான அமர்வுகளில் விவாதித்துக் கொண்டிருக்கின்றது. அதற்கான காரணம் அங்கு இடம்பெற்ற கொடூரமான மனித உரிமை மீறல்களே ஆகும். ஐ. நா வில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் அனைத்தும் நாடுகளினால் முன்வைக்கப்பட்டு வாக்களிக்கப்படுகின்றன. இருந்தபோதும் இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பை எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. ஆகவே தமிழர்களாகிய நாம் எமக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டும்.

🎯கேள்வி: கால அவகாசம் முடிந்த பின்னரும் ஐ.நா. வுக்கு அறிக்கைகள் அனுப்புவதால் ஏதும் பயனுண்டா?

பதில் : பாதிக்கப்பட்ட தரப்புக்கள் தொடர்ச்சியாக அறிக்கைகளை அனுப்புவது நல்லதே. இந்த கூட்டத்தொடருக்கான கால அவகாசம் முடிந்த பின்னர் அனுப்பும் கடிதங்கள் அடுத்த அமர்வுக்கானதாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் அவையும் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பினூடாக அனுப்பப்பட்டதாக இருக்க வேண்டும். ஐ.நா சபையின் பொறிமுறையின் கீழ் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் ஊடாக அனுப்பப்படும் கடிதங்கள்,அறிக்கைகள் அங்கு பதிவு செய்யப்படும். பல நாடுகளும் எமது கோரிக்கைகளை கண்டுகொள்ளும்.

🎯கேள்வி : தமிழ் தேசிய கட்சிகள் தனித்தனியாக கடிதங்களை அனுப்புகிறார்கள். இது எந்த அளவுக்கு தாக்கத்தை செலுத்தும்? கூட்டாக அனுப்புவது சிறந்ததா? தனித்தனியாக அனுப்புவது பயனுள்ளதா?

பதில் : ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஒரு கோரிக்கைகயை முன்வைத்து பல அமைப்புக்கள் அறிக்கைகளை அனுப்பலாம். அதுவே பலமானதாக இருக்கும். அதே போல் அரசியல் கட்சியினரோ சிவில் அமைப்புக்களோ தனித்தனியாக அனுப்புவது பயனுள்ளது.
ஆனால் தனித் தனியாக கடிதங்கள் அனுப்புவதால் மட்டும் பயனில்லை. ஐ.நா சபைக்குள் தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டும். துறைசார்ந்து அறிக்கைகளை தொடர்ச்சியாக அனுப்ப வேண்டும். கால அவகாசம் கொடுத்து, அறிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அப்போது நாம் அனுப்ப வேண்டும். ஆனால் எமது தமிழ் தரப்புக்கள் மேற்படி வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக செய்யாமல் தனியே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை மட்டும் பார்த்தே தமது பதில் கடிதங்களை அனுப்புகிறார்கள். இவை பயனற்றவை.

🎯கேள்வி : நீங்கள் இதுவரை எந்த அமைப்பினூடாக அறிக்கைகளை அனுப்பி வருகிறீர்கள்?

பதில் : உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் 192 இற்கு மேற்பட்ட ஐ.நா வின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் ஊடாக 300 க்கு மேற்பட்ட அறிக்கைகளை இதுவரை காலமும் அனுப்பியுள்ளோம். இம்முறை மனித உரிமைகள் சபையின் 48 ஆவது கூட்டத்தொடரில் உலகம் முழுவதிலுமுள்ள 7000 ஆயிரம் அமைப்புகளின் அங்கீகாரத்துடன்ஐ.நா வின் ECOSOC அங்கீகாரம் பெற்ற 192 அமைப்புகள் ஊடாகவும் பல அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளோம்.
எமது இந்த முயற்சியின் பலனாக பல நாடுகளின் நாடாளுமன்றங்களில் எமது பிரச்சனை தொடர்பாக பேசப்படுகிறது.

🎯கேள்வி: ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள மற்றும் விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள் குறித்து பகிரமுடியுமா ?

பதில்: கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் சிங்கள சிவில் அமைப்புக்கள் ஐ.நா கூட்டத் தொடர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக அறிக்கைகளை அனுப்புகின்றனர் . ஆனால் தாயகத்தில் தமிழ் தேசியம் பேசும் எமது அரசியல் தலைமைகள் அறிக்கைகளை சரியான நேரத்தில் அனுப்புவதில் அக்கறை காட்டுவதில்லை .வெறுமனே அவர்கள் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதிலும் ஊடகங்கள் முன்னால் தாங்கள் வழங்கும் பேட்டிகளை வைத்து கொண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட அனைத்துலக சமூகம் முடிவு எடுக்காது என்பதை அவர்கள் உணரவேண்டும்.

உலகத் தமிழர் இயக்கமாகிய நாம் ஐ.நா வின் சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளபடியால் நாங்கள் அறிந்தவரை தமிழர் தரப்பிலிருந்து அழுத்தங்கள் மிகவும் குறைவாக உள்ளன என்றே கூறிக்கொள்ளலாம். எங்கள் தரப்பில் இதுவரை உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இந்த வருடம் ஆரம்பித்தது முதல் 60 எழுத்துமூல அறிக்கைகள் வரை சமர்ப்பித்திருக்கிறோம். மற்றும் மிரட்டல்கள்,கைதுகள் உள்ளிட்ட பாதிப்புக்கள் குறித்த சுமார் 140 அறிக்கைகள் சமர்ப்பித்திருக்கின்றோம்.

ஐ.நாவினுடைய வழி என்பது ஜனநாயகம் சார்ந்தது. எனவே எவ்வளவு மக்கள் அதில் பங்கேற்கிறார்கள் எனத்தான் பார்ப்பார்கள். அதிலும் குறிப்பாக சிவில் சமூக அமைப்புக்கள் எந்தளவிற்கு பங்களிக்கின்றன எனத்தான் அதிகம் பார்க்கப்படும். அந்தவகையில் 48 ஆவது கூட்டத்தொடரில் அறிக்கைகளினை சமர்ப்பிக்கும் 18 சிறப்பு அறிக்கையாளர்களுக்கும் நாங்கள் அறிக்கைகளினை அனுப்பவேண்டும். தமிழ் தரப்பிலிருந்து அவ்வாறு அறிக்கைகள் கிடைப்பதில்லை. இதனால் தமிழின அழிப்பு குற்றங்களுக்கு எதிரான நீதிவிசாரணை மற்றும் சுயநிர்ணய உரிமை என்பனவற்றை பற்றி பேசுவதை விட்டுவிட்டு நல்லிணக்கமாக ஒருங்கிணைந்து செயற்படுவதையே மக்கள் விரும்புகிறார்கள் என்ற கோணத்திலேயே அங்கு பார்க்கப்படுகின்றது. இவற்றினை நாம் புரிந்துகொண்டு செயற்படவேண்டும்.

🎯கேள்வி: காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாமென்று தமிழர் தரப்பு கோருகின்றபோதும் ஐ.நா. வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் குறித்த அலுவலகத்தை கொண்டுவருவதை ஊக்குவிப்பதன் நோக்கம் என்ன ?

பதில்: ஓகஸ்ட் 30 திகதி அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் ஐ.நா வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஒரு விடயத்தினை சுட்டிக்காட்டியிருந்தார். அதற்கு காரணம் கொழும்பை தளமாக கொண்டியங்கும் பெரும்தொகையான சிங்கள அமைப்புகள் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ( OMP)மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் (Office for Reparations) ஆகியவற்றையே செயற்படுத்துமாறு கோரிக்கைகளை அவருக்கு அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

எங்களிடம் எட்டு மாவட்டங்களிலும் தலைவர்களைக் கொண்டதாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உறவுகளின் சங்கம் உள்ளது. குறைந்தது ஒரு மாவட்டத்தில் நாற்பது அறிக்கை வீதம் எட்டு மாவட்டத்திலிருந்தும் ”எமக்கு சிறீலங்கா அரசினால் சர்வதேசத்தை ஏமாற்றும் வகையில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம் (OMP) வேண்டாம். அதில் எமக்கு நம்பிக்கை இல்லை என பல அறிக்கைகளை அனுப்பியிருக்க வேண்டும்”அதனைவிடுத்து எட்டு மாவட்ட அமைப்புக்களும் கூட்டாகச் சேர்ந்து ஒரு அறிக்கையினை மட்டுமே அனுப்பியிருந்தார்கள்.

அங்கு அறிக்கைகளின் எண்ணிக்கைதான் பார்க்கப்படும். சிங்களத் தரப்பிலிருந்து நூற்றுக்கணக்கான அறிக்கைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே அவரின் குறிப்பிட்ட அறிக்கை அமைந்துள்ளது. அவர்களுக்கு காணாமல் போனோருக்கான அலுவலகத்திலிருந்து கிடைக்கும் பணம் போதுமானது. அதனைவிட குறித்த அலுவலகங்களை விரிவுபடுத்த ஐரோப்பிய ஒன்றியத்திடம் 800 கோடி ரூபாவை சிறீலங்கா அரசாங்கம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் நான் பதிக்கப்பட்டவன் என நான் மட்டும் அறிக்கையை அனுப்பி பயன் இல்லை. ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் பல்வேறு அறிக்கைகளினை அனுப்பிவைக்கவேண்டும். கிராம மட்டத்தில் உள்ள, சனசமூக நிலையங்கள், மாதர் சங்கங்கள், ஏன் விளையாட்டு அமைப்புக்கள் ஊடாகக் கூட அறிக்கைகளை அனுப்ப முடியும்.இவற்றைக் கருத்தில்கொண்டு தயாகம் மற்றும் புலத்தில் காணப்படும் அனைத்துவிதமான அமைப்புக்களும் ( பள்ளிக்கூடங்கள்,விளயாட்டுக் கழகங்கள்,ஊர்ச் சங்கங்கள்….) அனைத்துலகப் பொறிமுறைகளை உரியவகையில் பயன்படுத்த வேண்டும்.

🎯கேள்வி:சிறிலங்கா அரசு தமிழர்கள் மீது மேற்கொண்ட திட்டமிட்ட இன அழிப்புக்கும் போர்க்குற்றங்களுக்கு ஐ.நாவின் ஊடாக நீதியைப் பெற்று கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா?

பதில்: எமக்கு 25 பேர் கொண்ட குழுவுடன் அதற்குத் தேவையான நிதியும் இருந்தால் தமிழின அழிப்பிற்கான நீதியினை ஏழு தொடக்கம் பத்து ஆண்டுகளில் பெற்றுக்கொள்ளவதுடன் எமது தாயகத்தையும் ஒரு தனிநாடாக அங்கீகரிக்க வைப்பதற்கு 70 நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் மேலும் பத்தாண்டுகளுக்குள் மீதம் இருக்கும் 60 நாடுகளின் அங்கீகாரத்தினையும் பெற்றுக்கொள்ள முடியும். சுயநிர்ணய உரிமைகோரி போராடும் இனங்களின் தேசத்தினை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டுமெனில் ஐ.நா. பொதுச்சபையில் மூன்றில் இரண்டு பெருமான்மையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

🎯கேள்வி:சிறிலங்கா அரசு ஐ.நா.வின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது இதனை தமிழர் தரப்பு எவ்வாறு கையாளவேண்டும்?

பதில்: பராகுவே நாடாளுமன்றம்,கத்தலோனியா நாடாளுமன்றம், பார்சிலோனா நகரம்,தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தீர்மானம் மற்றும் கனடா நாடளுமன்றத் தீர்மானங்கள் போன்ற தீர்மானங்களை நிறைவேற்று வதற்கு சர்வதேச நாடுகளின் பிராந்திய மற்றும் தேசிய நாடாளுமன்றங்களுடன் இணைந்து தமிழ் உரிமை ஆர்வலர்கள் பணியாற்றல் வேண்டும். இதனூடாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலுள்ள நாடுகளுக்கு ஓர் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான வலுவான முன் முயற்சியெடுக்க அழுத்தம் கொடுக்க முடியும்.

ஐ.நா முகவர் மட்டத்தில் அதன் தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் ஆதரிக்கக்கூடிய நாடுகளைக்கொண்ட ஒரு குழுவை நாம் உருவாக்க வேண்டும். இவ் ஆதரவைப் பெற்றுக்கொள்ள அந் நாடுகளுடனிணைந்து வேலை செய்வதுடன், அதன் பாராளுமன்றங்களில் தமிழினவழிப்பை அங்கீகரிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றல் வேண்டும். அவ் வகையில் நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்கான செயற்பாட்டு வரைபு எம்மிடம் இருத்தல் அவசியம்.

🎯கேள்வி:இதில் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவங்களின் வகிபாகம் மற்றும் நகர்வுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் தமிழ் அரசியல்வாதிகளின் எந்தவொருவகையில் பங்காளர்களாக இருக்கவில்லை. மாறாக மேற்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துச் சொல்வதை மட்டும் தவறாமல் செய்கின்றனர். அந்தக் கருத்துகளில் கூட தாயகத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்பினை மறுத்து நிற்கின்றனர் என்பது இன்னும் வேதனையானது.

நன்றி.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282