in

ஐ.நா. கண்காணிப்பை நிராகரிக்கமாட்டோம் அரசு தெரிவிப்பு!

ஐ.நா. கண்காணிப்பை நிராகரிக்கமாட்டோம் அரசு தெரிவிப்பு!

நாட்டில் அவசரகால சட்டம் நடைமுறையிலுள்ள நிலையில், சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் தேவையற்ற விதத்தில் தலையீடுகளை மேற்கொள்ளவில்லை. இதுதான் உண்மை நிலைமை. இலங்கையானது ஐ.நா.வின் அங்கத்துவ நாடாகும். அந்தவகையில அவ்வமைப்பின் கண்காணிப்புகளை நாம் நிராகரிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன்போது அவசரகால சட்டம் மற்றும் சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தின் வகிப்பாகம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட கருத்து தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் டலஸ் மேலும் கூறியவை வருமாறு,

‘நாட்டில் கடந்த ஒரு வருடகாலப்பகுதிக்குள் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், இவற்றில் பொலிஸ் மற்றும் இராணுவம் தலையிடவில்லை. குறைந்தபட்சம் தண்ணீர்தாரை பிரயோகம் மேற்கொண்டாவது, போராட்டக்காரர்களை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களின் போராட்டமொன்றின்போது பொலிஸாரால் சிலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில் அரசு ஏற்கனவே கவலை வெளியிட்டுள்ளது. இந்த ஒரு சம்பவத்தைதவிர ஏனைய சம்பவங்கள் எதுவுமே இடம்பெறவில்லை. போராட்டக்காரர்கள் தாக்கப்படவும் இல்லை. கலைக்கப்படவும் இல்லை.

அவசரகால சட்டத்தில் இரு சரத்துகள் திருத்தப்பட்டு, உணவுகளை பகிர்ந்தளிப்பதில் இராணுவம் இணைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையின்போது இராணுவத்தின் தலையீடு சாதகமா, பாதகமா? அவர்களின் சேவையை தவிர்க்க முடியுமா? அதேபோல்தான் உணவு பங்கீட்டு விடயத்திலும்.
அதேவேளை, இலங்கை ஐ.நா.வின் அங்கத்துவ நாடாகும். அவ்வமைப்பில் அங்கம் வகிப்பதை கௌரவமாக கருதும் நாடாகும். ஐ.நா.வின் கண்காணிப்புகளை நாம் ஏற்போம். நிராகரிக்கமாட்டோம். அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

எனினும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிடுவதுபோல் தற்போது நாட்டில் எதுவும் நடக்கவில்லை. தேவையற்ற விதத்தில் இராணுவ தலையீடுகள் இடம்பெறவில்லை. இதற்கு நாமே சாட்சியாளர்கள், என்றார்.

பிள்ளையார் கோயில் குளத்துக்கு பௌத்த கொடியின் வர்ணங்கள்! மக்கள் கடும் அதிருப்தி!

வர்த்தகர் மீது தாக்குதல் சந்தேகநபர் ஒருவர் கைது!