மந்தபோசணைக் குறைபாட்டுடன் துணுக்காயில் 238 குடும்பங்கள்

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்துக்குட்பட்ட கிராமங்களில்  பொருளாதார ரீதியில் மிகவும் நலிவுற்ற குடும்பங்களுக்கு பொருளாதார மறுமலர்ச்சி மையங்கள் ஊடாக  உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முல்லைத்தீவு மாவட்டச் செயலர் க.விமலநாதன் தெரிவித்தார்.

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான ஒருங்கிணைந்த பொறிமுறையின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்க கொள்கைக்கமைய மாவட்ட ரீதியாக பொருளாதார மறுமலர்ச்சி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. துணுக்காய் பிரதேசத்தில் 3 இடங்களிலுள்ள மறுமலர்ச்சி மையங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களுடன் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது  துணுக்காய் பிரதேசத்தில் பொருளாதாரம் நலிவடைந்த நிலையில் 238 குடும்பங்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 5 வயதுக்குட்பட்ட 100 சிறுவர்களும்  கர்ப்பிணித் தாய்மார்கள் 39 பேரும் மந்தபோசனைக்குட்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர்.

அவர்களுக்கான போசாக்கு ஏற்பாடுகளையும் வாழ்தாரத்தை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் பொருளாதார மறுமலர்ச்சி மையங்கள் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது– என்றார்.

Exit mobile version