in

கலையரசன் ஏன் பல்டியடித்தார்? கையொப்பங்கள் போலியா? வெட்ட வெளிச்சமாகும் திரைமறைவுத் தில்லாலங்கடிகள்!

அந்த ஒரு கடிதத்துக்கு பின்னால்….!

💥 கலையரசன் ஏன் பல்டியடித்தார்?

💥கையொப்பங்கள் போலியா?

💥வெட்ட வெளிச்சமாகும் திரைமறைவுத் தில்லாலங்கடிகள்

………
ஔண்யன்
………

தமிழ் அரசியல்பரப்பில் இப்போது தீப்பிடித்து எரியும் சர்ச்சை, தமிழரசுக் கட்சியின் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 9 பேரின் கையொப்பத்துடன் ஐ.நா. மனிதன் உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்று அனுப்ப எடுக்கப்பட்ட முயற்சிதான்.

ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தைக் கூட விஞ்சக்கூடியளவுக்கு சடுதியான திருப்பங்கள், திரைமறைவு நகர்வுகள், மிரட்டல்கள், பாய்ச்சல்கள், பதுங்கல்கள் என்று ஒரு கடிதத்தை வைத்து பெரும் அக்கப்போரே நடந்து முடிந்திருக்கிறது. ‘முடிந்துவிட்டது’ என்றும் சொல்லமுடியாது. ஏனெனில் இன்னும் அந்த விடயம் புகைந்து கொண்டுதானிருக்கிறது.

உண்மையில் அப்படி ஒரு கடிதம் எழுதப்பட்டதா? அதில் உண்மையாகவே அதில் பெயர் குறிப்பிடப்பட்ட 9 பேரும் கையொப்பமிட்டனரா? இல்லையேல், எவரேனும் போலிக் கையெழுத்துகளை வைத்து தயாரித்தார்களா? அந்தக் கடிதத்தை அனுப்பவிடாமல் தடுத்தவர்கள் யார்? அதற்காக செய்யப்பட்ட தகிடுதத்தங்கள் என்னென்ன?

இந்த மாற்றுக்கடிதம் உருவாகும் விடயத்துக்கு பிள்ளையார் சுழி போட்டதே தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்தான். கூட்டமைப்பின் சார்பில் ஐ.நா.வுக்கு அனுப்பப்படவுள்ள கடிதத்தில் ‘படையினரும், புலிகளும் செய்த போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும்’ என தருஸ்மன் அறிக்கையில் சொல்லப்பட்ட விடயத்தை மேற்கோள் காட்டியிருந்தார் அதைத் தயாரித்த சுமந்திரன்.

இது ஊடகங்களில் எப்படியோ கசிந்துவிட, தமிழ் மக்களிடையே ஒரு கொதிநிலை உருவானது. “பாதிக்கப்பட்டது நாம், கொன்று குவித்தது எம்மை. அத்தோடு புலிகள் இப்போது இல்லை. ஆனால் போரை நடத்தியவர்களும், இலங்கை அரசாங்கமும் , படைகளும் இப்போதுமிருக்கின்றன. எனவே படையினரின் போர்க்குற்ற விசாரணையை மட்டும் கோராமல், புலிகள் செய்ததாக அரச தரப்பால் சொல்லப்படுகின்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலும் விசாரிக்கக் கோருவது எந்தவகையில் நியாயம்?. அதுவும் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளாகச் சொல்லப்படும் கூட்டமைப்பே இப்படித் துரோகமிழைக்கலாமா?” என்ற கேள்வி நாலாபுறமும் கிளம்பியது.

💪 💪 💪பொங்கிய மூவர் அணி

இந்தக் கொதிநிலையால், தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு ‘சூம்’ செயலி மூலம் கூடியது. உண்மையில் அந்தக் கூட்டம், தமிழ்த் தேசியக் கட்சிகள் சார்பில் ஐ.நாவுக்கு அனுப்பிய கடிதத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கையொப்பமிட்டமைக்கு என்ன நடவடிக்கை எடுப்பதென்பது தொடர்பாக ஆராயவே முதலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. என்றாலும் அதைவிடவும், கூட்டமைப்பு சார்பாக அனுப்பவுள்ள கடிதத்தில் இடம்பெற்ற புலிகளின் போர்க்குற்றம் என்ற விவகாரமே பிரதான பேசுபொருளாகி, அந்தக் கூட்டத்தில் அனல் பறந்தது. “சுமந்திரனும், சம்பந்தரும் தன்னிச்சையாக அந்த அறிக்கையை தயார் செய்த கடிதத்தில் இடம்பெற்ற ‘புலிகளின் போர்க்குற்றம்’ தொடர்பான விடயங்களை நீக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கடிதத்தில் நாம் கையொப்பமிட மாட்டோம் எனவும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ஸ்ல் நிர்மலநாதன், சிறீதரன், கலையரசன் ஆகியோர் பொங்கினார்கள். அப்போதுதான் ஒரு குண்டைப் போட்டார் சுமந்திரன்.

“அந்தக் கடிதம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கையொப்பத்தோடு அந்தக் கடிதம் அனுப்பப்பட்டு விட்டது” என்பதே அந்தக் குண்டு. அதன் பின்னர் எப்படி தங்களுக்கு தெரியாமல், தங்களுக்கு கடிதத்தின் பிரதியைக் காட்டாமல், கையொப்பத்தை பெறாமல் அனுப்பினீர்கள் என்று மீண்டும் அதே மூவர் கூட்டணி ( சார்ள்ஸ், சிறீதரன், கலையரசன்) போர்க்கொடி தூக்கியது.

சூம் மீட்டிங் முடிந்த பின்னர், இந்த மூவர் கூட்டணி தனியாக தமக்குள் ஒரு அவசர கலந்துரையாடலை நடத்தினர். அதில்தான் “புலிகளின் போர்க்குற்றம் பற்றி சம்பந்தர் அனுப்பிய கடிதத்தால் மக்களிடம் எங்களுக்கு இருக்கும் செல்வாக்கு போய்விடும். எனவே தமிழரசுக் கட்சியின் முன்னாள் எம்.பிக்களையும் சேர்த்து நாங்கள் தனியாக ஒரு கடிதம் அனுப்புவோம்” என்று முடிவெடுத்தார்கள். மளமளவென்று அடுத்தடுத்த காரியங்களில் இறங்கினர். கடிதம் தயாரிக்கும் பொறுப்பு சார்ள்ஸ் நிர்மலநாதனிடமும், அதை ஐ,நாவுக்கு அனுப்பும் பணி சிறீதரனிடமும், கிழக்கில் உள்ள முன்னாள் எம்.பிக்களை ஒன்றுதிரட்டும் பொறுப்பு கலையரசனிடமும் ஒப்படைக்கப்பட்டன. இலங்கைத் தமிழ்த் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று தங்கள் அணிக்கு அவர்கள் பெயரையும் சூட்டிக் கொண்டார்கள்.

🔥 தீயாக வேலை

ஐ.நாவுக்கு கடிதம் எழுதவென புலம்பெயர் தேசத்தில் ‘ரெடிமேட்டாக’ ஒருவர் இருக்கிறார். உடனடியாகவே அவர் ஒரு கடிதத்தை சார்ஸ் எம்.பிக்கு அனுப்ப, தமது அணியின் கடிதத் தலைப்போடு அது கையொப்பமிடுவதற்காக ஒவ்வொருவரிடமும் இரகசியமாகச் செல்லத் தொடங்கியது. இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சார்ள்ஸ்,கலையரசன் ஆகிய மூவர் கூட்டணியோடு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், அரியநேந்திரன், சிறிநேசன், யோகேஸ்வரன் ஆகியோரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் நடராஜா, மட்டக்களப்பு மாநகர மேயர் சரவணபவன் ஆகிய 9 பேர் கையொப்பமிட்டு முடித்தனர்.

(எவருடைய கையெழுத்தையும் வேறேவரும் போலியாக இடவுமில்லை, டிஜிட்டல் கையொப்பத்தை வைத்து வெட்டி ஒட்டவுமில்லை. அதுதான் உண்மை. வேண்டுமெனில், அந்தக் கடிதத்தின் உண்மைப்பிரதி இந்த மூவர் கூட்டணியிடம் இருக்கின்றது. அதனை தொழிநுட்ப ஆய்வு செய்தாலே கையொப்பங்கள் உண்மையானவை இல்லையா என்பதை கண்டுபிடித்துவிடலாம்) அத்தோடு கலையரசன் தீயாக “ஆள்பிடிக்கும்” வேலையில் இறங்கியதால் கிழக்கில் இருந்து 5 பேர் இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டனர். இனி அனுப்ப வேண்டிய பணி மட்டுமே பாக்கி.

ஆனால் கைக்கு வரமுன்னரே நெய்க்கு விலை பேசிவிட்டார் அந்த மூவர் கூட்டணியில் இருந்த ஒரு முந்திரிக்கொட்டை எம்.பி. அவர் ஒரு இணையத்தளத்துக்கு இந்த மாற்றுக் கடித விவகாரத்தை கசிய விட, சுமந்திரன் தரப்பு காலிலே சுடுதண்ணீர் ஊற்றியதைப் போல கதகளி ஆடத் தொடங்கியது. ஆனால் பொங்கி எழுந்திருக்க வேண்டிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மூச்சும் விடவில்லை. கட்சிக்குள் இப்படி ஒரு விடயம் நடக்கிறது என்று அறிந்தவுடன் தலைவர் என்ற ரீதியில் தலையிட்டிருக்க வேண்டும். ஆனால் தலையை உள்ளே இழுத்துப் பதுங்கிக் கொண்டுவிட்டார் அவர். இத்தனைக்கும் இந்தக் கடித விவகாரத்தில் சேனாதிராஜாவிடம் ஆரம்பத்தில் கையெழுத்துக் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குக் கூட சுயமாக முடிவெடுக்க முடியாமல், சுமந்திரனிடம் ஆலோசனை கேட்டாராம் மாவை. ஆக கட்சியை யார் ஆட்டி வைக்கிறார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இந்தப் பதுங்கல்கள் சகஜம்தானே. பின்னர் நடந்ததைப் பார்ப்போம், தன்னுடைய சிபாரிசால் தேசியப்பட்டியல் ஆசனத்தைப் பெற்ற கலையரசன், கட்சி மாறி கச்சேரி பாடுவதை எப்படி அந்த சுமந்திரன் அணியால் ஜீரணிக்கமுடியும்?. பாலூட்டி வளர்த்த கிளி, பழம் கொடுத்துப் பார்த்த கிளி கம்பி நீட்டி கடிதம் எழுதுவதை எப்படியாவது தடுத்து நிறுத்த இரவோடிரவாகக் காய் நகர்த்தப்பட்டது.

🙆‍♂️ 🙆‍♂️ சுமந்திரன் டோஸில் சுருண்ட கலையரசன்

நாடாளுமன்ற அமர்வுக்காக கொழும்புக்கு போயிருந்த கலையரசனை அன்றிரவே நேரில் சந்தித்தார் சுமந்திரன். “சம்பந்தர் அனுப்பிய கடிதத்துக்கு போட்டியாக கடிதம் அனுப்புகிறீர்களாமே. அப்படி அனுப்பினால் உமது தேசியப்பட்டியல் ஆசனத்தைப் பிடுங்குவது ஒன்றும் பெரிய வேலை இல்லை. உடனடியாக மற்றவைக்கும் சொல்லி நிப்பாட்டும்” என்று கலையரசனுக்கு உத்தரவிடப்பட்டது.

தேசியப்பட்டியல் ஆசனம் போய்விடும் என்று மிரட்டியதுமே, கலையரசன் வெலவெலத்துப் போய்விட்டார். சுமந்திரன் அருகில் இருக்கும் போதே உடனடியாக சார்ள்சுக்கு போன் செய்தார் கலையரசன். ஆனால் அவரது போன் ‘ஓஃப்’ செய்யப்பட்டிருந்தது. அடுத்து சிறிதரனுக்கு கோல் செய்து, கடிதம் அனுப்புவதை நிறுத்துமாறு கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு சிறீதரன் சம்மதிக்கவில்லை. பின்னர் தனக்காக , தன் எம்.பி சீற்றுக்காக இந்த உதவியைச் செய்யுமாறு கலையரசன் கேட்க, சிறீதரன் வேண்டாவெறுப்பாக தலையாட்டியிருக்க வேண்டும். ஏனெனில் அதற்குப் பிறகு கலையரசன் ஊடகங்களில் இந்தக் கடித விவகாரம் வெளியாகாமல் இருக்க என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையும் சுமந்திரனின் திட்டப்படி செய்யத் தொடங்கினார்.

“கடிதம் அனுப்பும் செய்தி வெளியானால் கலையரசனின் பதவி பறிபோய்விடும், சுமந்திரன் மிரட்டுகிறார். நீங்கள் செய்தியை வெளியிடாவிட்டால் தான் அவரது பதவி காப்பாற்றப்படும். உங்கள் பத்திரிகையில் செய்தி வராவிட்டால், நாளை மற்றவர்களும் கதைத்துப் பேசி கடிதத்தை அனுப்ப முடியும்” என்று உதயனுன் பத்திரிகைக்கும் கலையரசன் அந்த அகால இரவில் தூது அனுப்பினார். ஆனால் ‘உதயன்’அதற்கு உடன்படவில்லை. கலையரசன் கடித விவகாரத்தில் பல்டி அடிக்கப் போகிறார் என்பதை உணர்ந்தே உதயன் அப்படியொரு தீர்க்கமான முடிவை எடுத்தது.

🤣🤣பம்மல் கூட்டணி

வேறு ஊடகவியலாளர்களுக்கும் கலையரசனின் , பல்டி விளையாட்டு தெரியவர, அவர்கள் மூவர் அணியைத் தொடர்புகொண்டனர். சார்ள்ஸ் எம்.பியின் போன் இயங்கவில்லை. சிறீதரனும், கலையரசனும் சொல்லி வைத்தாற்போல “அப்படி ஒரு கடிதம் தொடர்பில் சிலர் எம்மை அணுகியது உண்மைதான். ஆனால் கடிதம் எழுதவோ, நாங்கள் கையொப்பம் வைக்கவோ இல்லை” என்று கற்பூரம் கொளுத்திச் சத்தியம் செய்யாத குறையாகப் பம்மத் தொடங்கினர்.

என்றாலும் அடுத்த நாள் உதயனில் அந்தச் செய்தி வெளிவரத்தான் செய்தது. அதன் மூலம் கடித விவகாரம் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. பின்னர் சில இணையங்களில் அந்தக் கடிதம் 9 பேரின் கையொப்பங்களோடு வெளியாக, “போலிக் கையெழுத்து, நாங்கள் எதற்கோ அனுப்பிய கையெழுத்தை இதற்குப் பயன்படுத்தி விட்டார்கள்” என்ற சமாளிப்புக்கேஷனில் இறங்கிய போதிலும், அவை மக்களிடம் எடுபடவில்லை.

இதனாலேயே எந்தச் சிறீதரன் முதல் “கடிதத்தைக் கண்ணாலும் காணவில்லை, கையொப்பமும் வைக்கவில்லை” என்று பிலாக்கனம் பாடினாரோ அதே சிறீதரன் ஊடகவியலாளர்களை அழைத்து “கடிதம் எழுதப்பட்டதும், நான் அதில் கையொப்பமிட்டமையும் உண்மைதான். ஆனால் அது அனுப்பப்படவில்லை” என்று உண்மையை உடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ‘கடிதம் அனுப்பப்படவில்லை’ என்பதும் வழக்கமான ‘சிறீத்தன’ பொய்தான் என்று பலரும் கருதக்கூடும். ஆனால் உண்மையாகவே அந்தக் கடிதம் ஐ.நாவுக்கு அனுப்பப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை.

“தமிழ்த் தேசியமாவது, மக்களாவது, மண்ணாங்கட்டியாவது. எங்களுக்கு பதவி மட்டுமே முக்கியம்” என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது இந்த பம்மல் கூட்டணி. அடங்காத காளைகள் போல கடிதம் எழுதுவோம் எனப் பாய்ந்துவிட்டு, இப்போது அடிமாடாக பம்மிப் பதுங்கி இருக்கும் இவர்களை இன்னமும் நம்பதான் போகின்றதா தமிழினம்?

நன்றி.

ஜெனிவாவை நோக்கி…! -அரசியல்க் கட்டுரை!

மனித உரிமைகள் மோசம் ஆனாலும் கோத்தா அரசு மீது நம்பிக்கை! பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் ஐ.நா!