கட்டுரைகள்சிறப்புக் கட்டுரை

GotaGoHome நிராயுதபாணிகளாக போராட்டத்தில் குதித்துள்ள இளைஞர்கள்!

ஆட்சிக்கு எதிராக நிராயுதபாணிகளாக போராட்டத்தில் குதித்துள்ள இளைஞர்கள்: எட்மண்ட் ஜெயசிங்கவின் ‘பியாவி ஈசா நாவல் அவர்களுக்கு வழிகாட்டுமா?

மூலம்: கொழும்பு டெலிகிராப்

ஆங்கிலத்தில் டபிள்யூ.ஏ.விஜேவர்தன

தமிழில் சுதந்திரா

வரலாற்றில் மீண்டும் ஒரு முறை இலங்கையில் இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த இளைஞர்களின் போராட்டமானது நிராயுதபாணியாகவும், தன்னிச்சையாகவும் ஓழுங்கமைக்கப்பட்டுள்ளமையானது  இந்த போரட்டத்தை தனித்துவம் மிக்கதாகக் காட்டுகின்றது.

உரத் தட்டுப்பாட்டால் விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல், ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை வழங்கக் கோரி வீதியில் இறங்கிய விவசாயிகளும், எரிபொருள், சமையல் எரிவாயு, பால் உணவுகள் உள்ளிட்டவைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட நுகர்வோரும் தற்போதைய இந்த கிளர்ச்சிக்கு ஆரம்ப வித்திட்ட போராட்டக்காரர்களாக உள்ளனர். காட்டுத்தீ போல் நாடு முழுவதும் இப் போராட்டங்கள் பரவிய போதும் கோட்டாபய ராஜபக்ச நிர்வாகம் நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், நாட்டைச் செழிப்பான பாதையில் இட்டுச் செல்ல உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் எனவும் கூறி இந்த போராட்டங்களுக்கு செவிசாய்க்கவில்லை.  எனினும் மக்களுக்கு அரசங்கத்தின் மேல் ஏற்பட்ட நம்பிக்கையின்மை காரணமாக ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடனும் புதிய வடிவத்துடனும் கிளர்ச்சிகள் பரவத் தொடங்கின.                                                                                                                              

அரசாங்கம் இந்த போராட்டங்களை அடக்க அவசரகாலச் சட்டங்கள், நீண்ட ஊரடங்குச் சட்டம் போன்ற அடக்குமுறை சூழ்ச்சிகளை மக்கள் மீது திணித்த போதும் ஆயிரக்கணக்கான மக்கள் அந்தச் சட்டங்களையும் மீறி அரசாங்கத்திற்கு எதிராக தெருக்களில் இறங்கிப் போராடியதால் அரசாங்கத்தினர் தோல்வியடைந்தனர். அதே சமயம், அரசாங்கத்திற்குள்ளும் பல பிரிவினைகள் ஏற்பட்டன. இதனால் அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தையும் இழந்தது. இந்நிலையில், GotaGoHome என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்கள் எதிர்ப்பு பிரச்சாரம் செய்தனர். இதுவே தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெறும் முற்றுகைப் போராட்டத்தின் ஆரம்ப வித்து. இந்த போராட்டம் வெற்றியடையாது என்ற பலரது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, நாளுக்கு நாள் அது எண்ணிக்கையில் வளர்ந்து, தற்போது அனைத்து ராஜபக்ஷக்களையும் பதவி விலகச் சொல்லும் கோஷமாக மாறி இன்று இந்தப் போராட்டம் பதினொராவது நாளை எட்டியுள்ளதுஅதன் முடிவு எவ்வாறு இருக்கப் போகின்றது என்று யாருக்கும் தெரியாது, ஆனால் இவ்வாறான போராட்டங்கள் இடம்பெறுவது கோட்டாபய ராஜபக்ச நிர்வாகம் தொடர்ந்து ஆட்சி செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையல்ல.

கோட்டாபயவின் ஆட்சி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளது.

தற்போது கோத்தபய ராஜபக்ச நிர்வாகம் இலங்கையின் பொருளாதாரத்தை வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் திவாலாக்கியிருப்பதால் போராட்டக்காரர்களையும் குறை சொல்ல முடியாத நிலையே உள்ளது. வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நாட்டில் அந்நியச் செலாவணி இல்லாமல் போயுள்ளது. அத்துடன் உள்நாட்டிலும் சாதாரண செலவுகளுக்கு நிதியளிப்பதற்கும் போதுமான வருவாயை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை.

இளைஞர்கள் மீதான இராணுவ அடக்குமுறை பலிக்காது

போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறைத் தாக்குதல்களை அரசாங்கம் இன்னும் தொடங்கவில்லை என்பதால் இந்த இளைஞர்களின் போராட்டம் வெற்றி பெறுமா? என்பதை இப்போது சொல்ல முடியாது. கடந்த காலத்தில் இடம்பெற்ற மூன்று இளைஞர் கிளர்ச்சிகளும் அக்கால அரசாங்கங்களால் கொடூரமான அதிகாரங்களைப் பயன்படுத்தி நசுக்கப்பட்டன. நிராயுதபாணியாக மேற்கொள்ளப்படும் எதிர்ப்புக்களை அனைவரும் அங்கீகரிக்கப்படுகின்றனர். ஆனால் கோட்டாபய நிர்வாகமும் இந்த அடக்குமுறைகளை நாடினால் உள்நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய ரீதியிலும் பாரிய விளைவுகளை சந்திக்கநேரிடும். அதன் தற்போதைய மீட்பர்களான இந்தியாவும் சீனாவும் நிச்சயமாக ராஜபக்‌ஷ நிர்வாகத்தினருடனான உறவிலிருந்து தூர விலக்கிக் கொள்ளும். அது மட்டுமல்லாது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ள இருக்கும் நிதியையும் பெற முடியாது. எனவே, போராட்டக்காரர்களுக்கு எதிராக அடக்குமுறைகளைக்கையாளும் முன் நிர்வாகம் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்.

எட்மண்ட் ரணசிங்கவின் பியாவி ஈசா

இந்தப் பின்னணியில், எட்மண்ட் ஜெயசிங்க என்ற நாவலாசிரியரின் கன்னி முயற்சியால், சிங்களத்தில் பியாவி ஈசா என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள நாவல் இந்த போராட்ட காலத்துக்கு ஏற்றதும், அறிவூட்டுவதுமான ஒன்றாக உள்ளது. எஒரு நல்ல நோக்கத்திற்காகப் போராடும் சமூக இயக்கம் தோல்வியடைவதற்குக் காரணம் வெளியில் இருந்து வரும் எதிர்ப்புக்கள் அல்ல, மாறாக அந்த போராட்டங்களுக்குள் காணப்படும் சித்தாந்த குறைபாடுகளும் கிளர்ச்சி செய்யும் குழுக்களிடையே தோன்றும் போட்டியுமே என்பதை போராட்டக்காரர்களும், சிவில் சமூகத் தலைவர்களும் ஜெயசிங்கவின் இந்த நாவலில் இருந்து கற்றுக்கொள்ள முடியும்.

ஜெயசிங்கவின் நாவல் காலனித்துவ காலத்து இலங்கையில் தொடங்கி 1971 முதல் ஜே.வி.பி கிளர்ச்சி வரை ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான கதையினை கொண்டு நகர்கின்றது. தனது சமூக மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கும் ஒரு பிரபுத்துவம் மற்றும் இழந்த வாய்ப்புக்களை மீண்டும் பெற முயலும் புதிய பணக்காரர் என கதை இரண்டு குடும்பங்களைச் சுற்றியதாய் அமைந்துள்ளது.  பிரபுத்துவ குடும்பத்தின் மூத்த மகன் ஹேவாவிதாரணவால் கதை விவரிக்கப்படுகிறது. ஹேவா சிறுவயதிலிருந்தே ஒரு கிளர்ச்சியாளர், ஆனால் தொலைநோக்கு பார்வை கொண்டவர். பேராதனையில் படிக்கும் போது, நாட்டின் சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் முறையை மாற்றுவதற்காக அறிவார்ந்த ரீதியில் புதிய இயக்கத்தை தொடங்க வேண்டியதன் அவசியத்தை ஹேவா உணர்ந்தார். பேராதனையில் சில ஒத்த கருத்துடைய மாணவர்கள் அவருடன் இணைந்து கொண்டனர்.

இந்த நேரத்தில் போர்க்குணமிக்க புரட்சிகர இயக்கம் அரசாங்கத்திற்கு எதிராக தனது போரைத் தொடங்கியது. இந்த இயக்கத்தை ஆதரிக்கும் குழுவிற்கு போட்டியாக ஹேவாவின் புரட்சிகர இயக்கம் அமைந்து விடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக, ஹேவா கைது செய்யப்பட்டு தடுப்பு மையத்தில் வைக்கப்படுகிறார். ஹேவா டுப்பு மையத்தில், தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் உடல்ரீதியாக தாக்கப்பட்டதனால் முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, படுக்கையில் படுத்திருக்கும் முடமானவராக மாறுகிறார். பின்னர் அவர் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார், ஆனால் அவரால் இப்போது அவரது தனிப்பட்ட தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத மோசமான நிலையில் உள்ளார்.

ஜெயசிங்கத்தின் பியாவி ஈசா விலிருந்து சில பாடங்கள்

ஹேவாவால் சாதிக்க முடியாத இலக்கை தற்போதைய ஆயுதம் ஏந்தாத போராட்டக்காரர்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர். எனவே அவரது நாவலை அவர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன், ஏனென்றால் அது அவர்களுக்கான ஒரு கையேடாக உள்ளது.

தற்போதைய போராட்டக்காரர்கள் ஜெயசிங்கவிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் என்ன?

ஒன்று கருத்தியல் ரீதியிலான மாற்றம் இல்லாமல் சமூகத்தை மாற்ற முடியாது. மற்றொன்று, எதிரிகள் வெளியிலிருந்து வரமாட்டார்கள், உள்ளிருந்து தான் வருவார்கள். தங்கள் சொந்த நலனுக்காக செயல்படும் இத்தகைய எதிரிகள் எந்தவொரு சமூக இயக்கத்திற்கும் ஒரு மரண அடியை வழங்குவார்கள். எனவே, சமூகத்தை மாற்றத் திட்டமிடுபவர்கள் இந்த எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற செய்தியை ஜெயசிங்க முன்னிறுத்துகின்றார். எனவே ஆட்சியாளர்கள் போராட்டக்காரர்கள் மீது ஒரு தோட்டாவையுமே வீசாமல் கூட இயக்கத்தை நசுக்குவார்கள் என்பதில் போராட்டக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,940